சனி, 29 ஜனவரி, 2022

மேல்தள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ-வும் கோவா கப்பல் கட்டும் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.


 மேல்தள சூரிய மின்சக்தி திட்டத்தின் தொழில்நுட்ப- நிதி சார்ந்த நிபுணத்துவத்தை வழங்குவதற்கு  இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ)  கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (ஜிஎஸ்எல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முறையே புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றன.

 இந்த ஒப்பந்தத்தில் ஐஆர்இடிஏ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், ஜிஎஸ்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பரத் பூஷன் நாக்பால் ஆகியோர் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி கோவாவின் வாஸ்கோ டகாமாவில் உள்ள ஜிஎஸ்எல் நிறுவனத் தலைமையகத்தின் மேல் தளத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கு ஐஆர்இடிஏ உதவி செய்யும்.

இந்த சூரிய சக்தி மின்திட்டம் அமைக்கப்பட்ட பின் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மின்சார செலவு குறையும் என்பதோடு அதன் கரியமில வாயு வெளிப்பாடும் குறையும்.

பசுமை எரிசக்தி மூலம் நாட்டின் நீடித்த வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கு  இரு நிறுவனங்களின் நிபுணத்துவமும், நடைமுறைகளும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும். 2022-க்குள் கட்டிட மேல் தளத்தில் சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலம் 40 ஜிகாவாட் மின் உற்பத்தி என்ற இந்தியாவின் நோக்கம் இத்தகைய ஒத்துழைப்புகளால் சாத்தியமாகும் என்று ஐஆர்இடிஏ தலைவர் திரு பிரதீப் குமார் தாஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக