திங்கள், 16 மே, 2022

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 50 பெண் கலைஞர்களுக்கு 50 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களை திரு சக்சேனா வழங்கினார்.


காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பல்வேறு சுய வேலைவாய்ப்பு செயல்பாடுகளில் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உள்ளிட்ட 150 பயிற்சிபெற்ற கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங்கில் உள்ள 50 கலைஞர்களுக்கு மர கைவினைப் பொருட்களுக்கான கருவிகளையும், அசாமின் குவஹாத்தியில் உள்ள கலைஞர்களுக்கு 50 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களையும், 50 ஊறுகாய் தயாரிக்கும் இயந்திரங்களையும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா வழங்கினார்.

தாவாங்கில் வசிக்கும் பழங்குடி இளைஞர்களுக்கு நிலையான வேலை வாய்ப்பை உருவாக்கவும்,  பாரம்பரிய மர சிற்பக் கலையை மீண்டும் புதுப்பிக்கவும், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு மர கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் முதன் முறையாகத் தொடங்கியுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் இந்தக் கலைஞர்களுக்கு, 20 நாள் பயிற்சி நிறைவடைந்த பிறகு இயந்திரங்கள் வழங்கப்படும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 50 பெண் கலைஞர்களுக்கு 50 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களை சனிக்கிழமையன்று திரு சக்சேனா வழங்கினார். பெண்கள் தங்களது சொந்த அகர்பத்தி தயாரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும். அசாமில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அகர்பத்தி தொழிலை வலுப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக