செவ்வாய், 3 மே, 2022

‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.


 சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல்-பிரச்சனைகள், சவால்கள் மற்றும் முன்னெடுத்து செல்லுதல்’ குறித்த மாநாட்டை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்து உரையாற்றினார். விவசாயிகளின் வசதிக்காகவும், செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் ட்ரோன் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, எஸ்சி- எஸ்டி, சிறு மற்றும் நடுத்தர, பெண் விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ட்ரோன் வாங்குவதற்காக, அரசு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மான்ய உதவி வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம்  அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம்  நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வேளாண் தொழிலில் ட்ரோன் பயன்பாட்டின் பன்முகத்தன்மை பற்றி குறிப்பிட்ட திரு தோமர், விவசாயிகளின் விரிவான நலன் கருதி வேளாண் பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, தொடங்கியிருப்பதாக கூறினார்.  பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல், பூச்சி மருந்து மற்றும் ஊட்டச்சத்து தெளிப்பு போன்றவற்றுக்கு ‘கிசான் ட்ரோன்’ பயன்பாட்டை  அரசு ஊக்குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் வேளாண் தொழிலை நவீனப்படுத்துவதே பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  விவசாயிகளின் விளைநிலங்களில் செயல் விளக்கம் அளிப்பதற்காக ட்ரோன்கள் வாங்க உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 75% நிதியுதவி வழங்கப்படுகிறது.  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட நிறுவனங்கள், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிப்பதற்காக, வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கத்தின் கீழ் 100% நிதியுதவி வழங்கப்படுவதாகவும் திரு தோமர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக