புதன், 20 ஜூலை, 2022

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா? -கி.வீரமணி

 சின்னசேலம் கனியாமூர் பள்ளி தொடர்பான கலவரங்கள்!

திட்டமிட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிய பின்னணி என்ன? பொதுச்சொத்துகளை நாசம் செய்தவர்களை ஊக்குவிப்பது நாகரிகமான அரசியலா?

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விரைந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் நமது முதலமைச்சர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்புவோர் ஏமாந்து போவார்கள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும்! குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும் உறுதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் டூ மாணவி சிறீமதி 13.7.2022 அன்று ‘மர்மமான’ முறையில்  இறந்துள்ளார்; அவர் 3 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படும் நிலையில், இறந்த மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு - மறு உடற்கூறு ஆய்வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து, நேற்று (19.7.2022) அது முடிந்தது. இதனை எதிர்த்து மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் இதற்குத் தடை கேட்ட வழக்கில், அது உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததையொட்டி ஏற்பட்ட வன்முறை வெடித்த கலவரம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விகள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கேள்விகள் - அரசியலுக்கு அப்பாற்பட்டு.

எத்தனை எத்தனை வன்முறைகள்

உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து நீதி கேட்ட நிலையில், இப்படி ஒரு வன்முறை - வரலாறு காணாத பேருந்து, வாகனங்கள் எரிப்பு, காவல்துறை அதிகாரிகள்மீது தாக்குதல், மாணவர்களின் சான்றிதழ்கள் எரிப்பு, பள்ளிக்கூடப் பொருள்கள் எரிப்பு போன்றவை நடத்தப்பட்ட முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு இதைவிடப் பெரும் களங்கம் உண்டா?

வழக்கை ஒருபுறம் போட்டு, விசாரணை நடத்தும் ஆயத்த நிலையில், மறுபுறம் வன்முறையைத் திட்டமிட்டு நடத்த அங்கே வன்முறை வெறியாட்டக்காரர்களை அழைத்து, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது எவ்வகையில் நியாயம் என்ற கேள்விக்கு விடை கண்டாகவேண்டும்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்கூட முதலமைச்சர் விரைந்து எடுத்த நடவடிக்கைகள்

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை இதில் உடனடியாக செயல்படுவதில் நொடிகூட தாமதிக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில்கூட, மருத்துவமனையிலிருந்தே செயல்பட்டு, அப்பகுதிகளுக்குத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணசேன் அவர்களை அனுப்பி, மரணமடைந்த அந்த மாணவியின் தாயாருக்கு நேரில் ஆறுதல் கூறச் செய்தார். இந்த நிகழ்வில் சந்தேகமிருப்பதால், உரிய விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள்மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறுதலைக் கூறியுள்ளார்!

அடுத்து, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூத்த அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலவரம் நடந்த பள்ளிக்குச் சென்று பார்வையிட்டனர்.

டி.ஜி.பி. உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, அங்கே சென்றுள்ளார்.

விசாரணை சுதந்திரமாக நடைபெற அதிகாரிகள் மாற்றம்

விரைந்து நிலைமைகளைக் கண்காணிக்க மெத்தனம் காட்டப்பட்டதோ என்று கருதப்படக் கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு விசாரணைக் குழுவை அமைத்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய ஆவன செய்துள்ளது.

அந்த விசாரணை ‘சுதந்திரமாக’ தங்கு தடையின்றி - பாரபட்சமின்றி நடைபெற வசதியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேற்று (19.7.2022) மாற்றப்பட்டு, புதியவர்களைப் பொறுப்பேற்கச் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள்

முதலமைச்சர் தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாது இப்பிரச்சினைக்காக உயர் அதிகாரிகள் குழுவினைக் கூட்டி, ஆலோசித்து குற்றவாளிகளைக் கண்டறிந்து, தயவு தாட்சண்யமின்றி சட்டம் தனது கடமையை ஆற்ற வைப்போம்  என்ற உறுதியை அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.

எரிக்கப்பட்ட மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ் போன்ற படிப்புச் சம்பந்தமான சான்றிதழ்களை மாணவர்களுக்குத் திரும்பத் தர பெற்றோர்களின் கவலையைப் போக்கிடும் வகையில், வருவாய்த் துறை மூலம் மாற்று ஏற்பாடுகளை துரித கதியில் செய்துள்ளார் முதலமைச்சர்.

பொதுச்சொத்தை நாசம் செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்குவதா?

அரசு இயந்திரம் வேகமாக முடுக்கிவிடப்படும் நிலையில், திட்டமிட்டே வெறும் வாயை மென்றவர்கள், இதனை அவுலாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘‘அரசியல்’’ செய்யக் கிளம்பியுள்ளது வேதனைக்குரியது; ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்‘ என்று நடந்துகொள்வது - பொது ஒழுக்கத்திற்குக் கேடு - பொதுச் சொத்து நாசத்தை நடத்தியவர்களுக்கு ‘வக்காலத்து’ வாங்குவதுபோல் சில அரசியல் ‘வியாதிகள்’ அறிக்கை விடுவது, பேட்டியளிப்பது மகாகேவலம்!

இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், நம் முதலமைச்சர் செயலில் அக்கறை காட்டுகிறார்.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர்; மேனாள் முதலமைச்சர் என்ற அடைமொழிக்கும் உரியவர்; சற்றுக்கூட மனிதாபிமானமின்றி ‘படுத்துக் கொண்டுள்ளார்’ என்று கூறலாமா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது இந்த முதலமைச்சரின் வாக்குமூலம், நடவடிக்கைகள்பற்றி ஊரும் உலகமும் கைகொட்டிச் சிரித்துக் கண்டன மழை பொழிந்த நிலை - வசதியாக அவருக்கு மறந்துவிட்டதோ?

விசாரணை உரிய முறையில் நடந்து குற்றவாளிகள் தண்டனைக்குத் தப்பக் கூடாது என்று இது விரைந்து முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஊதிப் பெருக்கும் சமூகவலை தளங்கள்

சமூகவலைத் தளங்களில் இதனை ஊதிப் பெருக்கிய பின்னணியில் உள்ள சக்திகளும், சதிகாரர்களும் யார்? என்பதைத் துப்புத் துலக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டும்.

அதைவிட மற்றொரு அம்சம், வெளி மாவட்டங்களிலிருந்து  வந்து, இந்த வன்முறையில் ஈடுபட்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் கலவரம், எரிப்பு, காவல் துறை அதிகாரிகள்மீது தாக்குதல் உள்பட பலவும் நடக்கத் தூண்டிய, காரணமான கண்ணுக்குத் தெரியாதவர்கள் (Invisible Hands) யார் - என்ற கோணத்தில் புலன் விசாரணை முடுக்கிவிடப்படவேண்டும்.

இதனை நோயாக மட்டும் பார்க்கக்கூடாது; அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிய கதாநாயகர்கள் யார் - என்பது வெளிச்சத்திற்கு வரவேண்டும்.

உடனே ‘‘சென்னை மெரினா கடற்கரையில் கூடுவோம்‘’ என்ற அறிவிப்புக்குப் ‘பிதா’மகர்களும், வலை பின்னுபவர்களும் யார்? என்பது உளவுத்துறைமூலம் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்படவேண்டும்!

அபாண்ட பழிகள் மலைபோல் சுமத்தப்பட்டாலும், மக்கள் ஆதரவு என்ற சூரியக் கதிர்களால் பனிபோல் உருகிவிடும்!

தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’ ஆட்சியினைப் பலரும் புகழுகிறார்கள்; அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பலரும், வேறு குறை சொல்ல இயலாது - ‘பேனை பெரும் ஆள்’ ஆக்குவதுபோல், ஊதி அரசியல் மூலதனமாக்கிட முயற்சித்துள்ளனர். ‘மயிரைச் சுட்டால் அது கரியாகாது’ என்பது பழமொழி.

அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது; காரணம், இந்த ஆட்சி நேர்மை தவறாத முதலமைச்சர் தலைமையில் வேக நடைபோடும் ஆட்சி!

ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்படும் முதலமைச்சர் அவர் என்பதால், எதிர்க்கட்சியின் அபாண்டப் பழிகள் மலைபோல் வந்தாலும், மக்களின் ஆதரவு என்ற சூரியக் கதிர்களால் பனிபோல் உருகி, தானே கரைந்தோடும்!

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்புவோர் ஏமாற்றம் அடைவார்கள்!

நீதியும், நேர்மையும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனித்தன்மை. ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்ற மனுதர்மப் பார்வை எதிலும் இந்த ஆட்சிக்கு இராது; மாறாக, மனிதநேயப் பார்வை, எதையும் விருப்பு வெறுப்பின்றி அணுகும் முதலமைச்சரின் ஆளுமை - பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க பரிகாரம் தரும் வகையில் வேகம் எடுக்கும் என்பது உறுதி.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அலையும் அபலைகள் ஏமாற்றம் அடைவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக