வெள்ளி, 1 ஜூலை, 2022

க்ரிஷிபவனில் டிடி கிஷான் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்


 மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முயற்சியால், டிடி கிசான் தொலைக்காட்சி, புதுதில்லியில் உள்ள க்ரிஷிபவனில் படப்பிடிப்பு அரங்கில் அமைந்துள்ளது. இந்த அரங்கை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் செல்வி ஷோபா கரந்த்லஜே மற்றும் திரு கைலாஷ் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தோமர், வேளாண்துறையில் ஏராளமான வாய்ப்புகள்  இருப்பதாகவும், நாட்டில் உள்ள பெருமளவிலான விவசாயிகளை,  டிடிநியூஸ் மற்றும் டிடி கிசான் தொலைக்காட்சிகள் மூலம் எளிதில் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதுடன், வேளாண்துறையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதுபோன்ற தருணங்களில் இந்த தொலைக்காட்சி, அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுவதுடன், விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, காலத்திற்கேற்ப அவற்றை ஏற்று கொண்டு, அதிக லாபம் தரக்கூடிய பயிர் வகைகளை சாகுபடி செய்து பயனடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய படப்பிடிப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், வேளாண் அமைச்சகத்தின் செயல்பாடுகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை விரைவாக சென்றடையும் என்றார்.  க்ரிஷி பவனில் இந்த படப்பிடிப்பு அரங்கத்தை அமைத்ததற்காக, தூர்தர்ஷன் மற்றும்  டிடி கிசான் தொலைக்காட்சிக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக