வெள்ளி, 8 ஜூலை, 2022

ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு


 கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறையிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குவதில் உள்ள முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்ய வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த விஷயத்தில் வங்கிகள் இணக்கமாக நடந்து கொள்ள சில நடவடிக்கைகளை திரு பர்ஷோத்தம் ரூபாலா பரிந்துரைத்தார். நிராகரிப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டால், கள அலுவலர்கள் படிவங்களைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் கூறினார். மல்தாரி (குமந்து) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உழவர் கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பரிந்துரைத்தார். மேலும் ஜாமீன் எதுவும் கொடுக்க முடியாத ஏழை மீனவர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதி, மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திரநாத் ஸ்வைன் மற்றும் நிதி சேவைகள் துறை செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 2018-19 பட்ஜெட்டில், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் உழவர் கடன் அட்டை வசதியை நீட்டிப்பதாக அரசு அறிவித்தது. உழவர் கடன் அட்டைகள், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விலங்குகள், கோழிகள், பறவைகள், மீன், இறால், மற்ற நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு மற்றும் மீன்களைப் பிடிப்பதற்கான குறுகிய கால கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

சொந்தமாக/குத்தகைக்கு படகு அல்லது சொத்துக்கள் இல்லாதவர்கள் போன்ற தற்சமயம் காப்பீடு இல்லாத மீனவர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மீன்வளத்துறை முயற்சித்து வருகிறது. உழவர் கடன் அட்டைகளை  முன்கூட்டியே அனுமதி வழங்குவதை உறுதி செய்வதற்கும் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை மீன் வளத்துறை  அறிவுறுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக