சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
மொத்த கடன் தொகையான ரூ.3,112.63கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் பெற்றுள்ளன.
கோவிட் 19 ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.