வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது


 தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவின் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிவிட்டதாக என்டிபிசி(தேசிய அனல்மின் கழகம்) அறிவித்துள்ளது. ராமகுண்டம் மிதக்கும் சூரியசக்தி திட்டம், என்டிபிசியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி திட்டமாகும். 

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்


 தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,  இணையமைச்சர்கள் டாக்டர் பாரதி பிரவீன் பவார், சுகாதாரத்துறை செயலாளர்  திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவ துறையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். “நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள், நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றும் அவர் கூறினார். அந்தவகையில் அவர்களது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

க்ரிஷிபவனில் டிடி கிஷான் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்


 மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முயற்சியால், டிடி கிசான் தொலைக்காட்சி, புதுதில்லியில் உள்ள க்ரிஷிபவனில் படப்பிடிப்பு அரங்கில் அமைந்துள்ளது. இந்த அரங்கை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் செல்வி ஷோபா கரந்த்லஜே மற்றும் திரு கைலாஷ் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்


முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் உடனடியாக கிடைக்காத, அவசர தேவைக்கான, உயிர்காப்பதற்கான, அத்தியாவசியமான மருந்துகளை 100% அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.  முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்துகள் எளிதாகவும், உரிய நேரத்திலும் கிடைப்பதை இது உறுதிசெய்யும். ஏ மற்றும் பி வகைக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், டி வகைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் கொள்முதல் நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.- ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா


 மத்திய சுகாதாரம் – குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அந்த ஆலையின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மத்திய அமைச்சர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார். ஆலையின் கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்ட அவர், கட்டுப்பாட்டு அறை இயங்கும் விதம் குறித்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, உர உற்பத்தியில் தற்சார்பை அடைய கூட்டு முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்ததற்காக ஆலை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், 2022 கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதுடன், புதுச்சேரியின் கரீஃப் பருவத்திற்குத் தேவையான 7300 மெட்ரிக் டன்னில் ஏறத்தாழ 82 சதவிகிதம் அளவிற்கு இந்த ஆலையிலிருந்து விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.