திங்கள், 29 ஏப்ரல், 2019

குழப்பத்துக்கான விதைகளை அதிமுக தூவி இருக்கிறது! - முரசொலி தலையங்கம்

அ.இ.அ.தி.மு.க. மீண்டும் அடுத்த குழப்பத்திற்கான விதைகளைத் தூவி இருக்கிறது


தேர்தல் முடிவுகள் வருவதற்குள் ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க. அடுத்த குழப்பத்திற்கு ஆயத்தமாகிவிட்டது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அரசின் தலைமை கொறடா எஸ். இராசேந்திரன் பேரவைத் தலைவர் எஸ்.தனபாலைச் சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக இ. இரத்தினசபாபதி (அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), எ.பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய மூன்று சட்டபேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் 18 இடங் களுக்குக் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. அதற்கான முடிவுகள் மே.23-இல் வெளிவர இருக்கின்றன. இந்த 18 பேரைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்திலேயே தற்போது கொறடா கூறும் மூவரையும் புகார் கொடுத்து தகுதி நீக்கம் செய்து இருக்கலாமே. அவர்களும் தினகரன் கட்சி ஆதரவாளர்களாக 2017 ஆகஸ்டு முதல் இருந்து வருகிறார்களே என்ற சந்தேகம் நமக்குத் தோன்றும்.

கொறடா என்ன சொல்லுகிறார் என்றால் இந்த மூன்று சட்டபேரவை உறுப் பினர்களும் கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் 18 சட்டமன்ற தினகரன் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சேர்த்துப் பணியாற்றினார் கள் என்கிறார். அவர்கள் பணியாற்றியதற்கான கண்கூடான சாட்சியத்தைப் பேரவைத் தலைவரிடத்திலே வழங்கி இருக்கிறேன் என்கிறார். அதாவது நேரடியாக கட்சிக்கு எதிராக 'அந்த மூவர்' பணியாற்றியதாக கொறடா இப்போதுதான் உணர்ந்து அறிந்து இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், நாளேடுகளில் பதிவானப்படி இந்த மூவரும் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கிற காலத்திலேயே தினகரன் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. ஆனால் அப்போது இவர்களின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? அ.இ.அ.தி.மு.க. அரசின் பலம் குறைந்து விடும் என்றா ?- வேறு என்ன காரணம்? இப்போது தன் 'சல்லடம் கட்டிக் கொண்டு ஆடத் தொடங்குகிறார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆனால் அதற்குக் கொறடா அந்த மூன்று பேர்' கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்ட தற்கான சரியான சாட்சியத்தைத் தருவதற்குக் காலம் எடுத்துக் கொண்ட தைப் போலத் தெரிவித்து இருக்கிறார். அதனால்தான் காலதாமதம் ஆயிற்று என்று கூறாமல் கூறுகிறார். அவர் இன்னொரு குறிப்பையும் தந்து இருக்கிறார். அது என்ன தெரியுமா? செய்தியாளர்கள் கொறடா இராசேந்திரனை, 'இதைப் போல, கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் - யாராவது இருக்கிறார்களா?' - என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், 'இப்போதைக்கு இந்த மூவர் மட்டும்தான்' என்று சொல்கிறார். இதன் பொருள் என்ன? இதுவன்றி இதற்கடுத்தும் ஒரு குழப்பத்தைக் கையிருப்பாக வைத்திருக்கிறோம் என்பதுதானே இதன் பொருள்.

கொறடா தெரிவித்த அந்த மூன்று' சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்? 
'நாங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் தான் இருக்கிறோம். அக்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றோம். கொறடாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. யாரோடும் எங்களுக்கு உறவு இல்லை. நாங்கள் தினகரன் கட்சியில் உறுப்பினர் இல்லை. எந்தப் பொறுப்பிலும் நாங்கள் இல்லை.

எதிர்காலத்திலும் கட்சியின் நடவடிக்கை களுக்குக் கட்டுப்படுவோம்' என்ற விதமாகக் கருத்துகளைக் கூறி இருக்கிறார்கள்.

இதை விடவும் இன்னொரு செய்தி அவர்கள் - கொறடா வகையறாக்கள் எந்தக் கட்சியைச் ஆதரித்ததாக சொல்கிறார்களோ அந்தக் கட்சியின் 'கர்த்தா' அவர்கள் எங்கள் கட்சியில் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் பேரவைத் தலைவர் என்ன செய்வார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அவர்கள் புதிய உத்திகளைத் தோற்றுவிக்கும் பிரம்மாக்கள்!'' - குழப்பங்களைத்தான் சொல்கிறோம்.

கொறடா பேரவைத் தலைவரிடம் உறுப்பினர்களைப் பற்றிய புகாரைக் கடிதம் மூலம் தெரிவித்து விட்டார். பேரவைத் தலைவர் உறுப்பினர்களை அழைத்துப் பேசலாம்; கேட்கலாம். 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பலாம். விளக்கம் கொடுப்பதற்கு உறுப்பினர்கள் 15 நாள்கள் அவகாசம் கோரலாம். இப்படி நடவடிக்கைகள் செய்ய ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம். அதற்குள் தேர்தல் முடிவுகள் வந்து விடும், யார், எவர், எங்கே என்ற நிலைமைகள் தெளிவடைந்துவிடும்.

தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் இந்தச் சிக்கலை இப்போது கொறடா ஏன் முன்வைக்கிறார்? தேர்தல் முடிவுகளினால் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்குமானால் தேரோட்டத்தைத் தடுக்கத் 'தடுப்பைப் போடுவதைப்போல் ஒரு வேளை இந்த மூவர்' நடவடிக்கைகள் உதவலாம் என்று ஆளும் கட்சி நினைக்கக் கூடும். இன்னும் கொஞ்சம் மோசமான நிலைமை ஏற்பட்டால் அடுத்த 'காவைப் பற்றி யோசிக்கலாம். அதுவும் ஆளும் கட்சிக்கு கைவசம் உள்ள யோசனையாக நமக்குத் தெரிகிறது. ஆகவேதான், கொறடா இப்போதைக்கு இந்த மூன்று பேர் மட்டும்' என்று தெரிவித்து இருக்கிறார். முடிந்த வரை ஆட்சியில் ஒட்டிக் கொள்ளத் தீர்மானித்து இருக்கிறார்கள். 'கடைசி இழுப்பு' என இந்த முயற்சியையும் செய்து பயன்படுத்த நினைக்கிறார்கள். இது நடக்குமா? தொடருமா? - என்பதை இனி வரும் நாள்கள்தான் தீர்மானிக்க இருக்கின்றன.

ஆனால் கழகத் தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில் தாயத்தில் மலையில் காயை வைத்து இருக்கிறார். 'அந்த மூன்று உறுப்பினர்கள்' அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். கொறடா உத்தரவுக்குக் கீழ்ப்படிய இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொறடா எந்தக் கட்சிக்கு 'அந்த மூவர் பணியாற்றியதாகச் சொல்கிறாரோ, அந்தக் கட்சியின் 'கர்த்தா' எங்கள் கட்சியில் அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார். அந்தக் கட்சியில் இல்லாதவர்கள் தினகரன் கட்சித் தேர்தலில் எப்படிப் பணியாற்றி இருக்க முடியும்? இதை வைத்து தகுதி நீக்கம் செய்யமுடியுமா? முடியாது. 
எனினும், கொல்லைப்புற, மெஜாரிட்டி பெறுவதற்காக அந்த மூவரை' நடுநிலைத் தவறி நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தி.மு.கழகம் கொண்டு வரும் என்று கழகத் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருக்கிறார். சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல அந்த நிலைக்கு பிரச்சினை போகுமா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

இருப்பினும் எதிர்க்கட்சியான தி.மு.க. அவர்கள் வேண்டும் என்றே குறுக்கே போடும் தேர்த் தடுப்பினை அறிந்தே வைத்து இருக்கிறது. கழகம் தேர்தல் ஆணையத்திற்கு 18+4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நடத்துவதற்கு எத்தனை மனுக்களைத் தந்து இருக்கிறது, நீதிமன்றங்களை நாடி இருக்கிறது. 11 பேர் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசின் அதிகார மலையின் பின்னே தற்போது அ.இ.அ.தி.மு.க. அரசு ஓடி ஒளிந்தாலும் சிற்றுளி மலையைப் பிளப்பது போல கழகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னே அவரின் மரணத்திலும் மட்டும் குழப்பம் இல்லையா? அவர் நிறுவியதாகச் சொல்லப்படுகிற ஆட்சியில், அவர்கள் கட்சியில் எத்தனை குழப்பங்கள், அதனால் செய்த ஊழல்களுக்குப் பாதுகாப்பு எனக் காப்பாற்றிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் அடுத்த குழப்பத்திற்கான விதைகளைத் தூவி இருக்கிறது; எதிர்கொள்வோம்!

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப் போவது உறுதி ஆகிவிட்டது. - வைகோ

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப் போவது உறுதி ஆகிவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு - வைகோ


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த காரணத்தால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் 2017 செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான்

பொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான் 


தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்கள் உலவித் திரிந்த அதே மண்ணில் இன்றைக்குச் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் நிகழ்வது பெரும் மனவலியைத் தருகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு உலகத்தார் தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது வரலாற்றுப் பெருந்துயரம்.

தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக தமிழ்ச்சமூகங்களிடையே எழும் இச்சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இன மக்களையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்ம நேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்றத் துயரங்கள் நம்மை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்கிறது. மூவேந்தர் ஆட்சிக்காலம் தொட்டு, தற்காலம் வரை சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே இவ்வினம் வீழ்ந்தது என்பது மறக்கவியலா வரலாற்றுப் பேருண்மை. இதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது உணர்ந்து கொண்டு சாதி மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்கவும், உழைக்கும் ஆதித்தமிழ்க்குடிகளின் உயர்வுக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும்.

பொன்பரப்பியில் நிகழ்ந்த சாதியக் கொடுமைகள், தாக்குதல்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. அதனை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் மோதிக்கொள்ளும்போது சிந்தும் நமது இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இம்மண்ணை ஆளுகிற ஆட்சியாளர்களும், கட்சிகளும் இருக்கின்றனர். இத்தகைய சாதியச் சிந்தனையும், சாதிய மோதல்களுமே தமிழினத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்த பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

பொன்பரப்பியில் சாதிய மோதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆதித்தமிழ்க்குடிகள், உடமைகளையும், வீட்டையும் இழந்த உழைக்கும் மக்கள் யாவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டத் தமிழ்க்குடிகள் மீண்டு வர தன்னாலானப் பொருளாதார ரீதியான உதவிகளையும், சட்ட நடவடிக்கைகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.

சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

"காவல்துறையின் அலட்சியத்தால் இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது"
"நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்"
-  மு.க.ஸ்டாலின் 


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல- ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றவும் அதிமுக கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத் தவறி- சட்டம் ஒழுங்கிற்கும்- பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தலித் மக்கள் மீது தாக்குதல்! - வைகோ கண்டனம்

தலித் மக்கள் மீது தாக்குதல்! - வைகோ கண்டனம்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமா வளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டி இடுகிறார் என்பதால், அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் நடத்தியுள்ள வன்முறை, கண்டனத்திற்கு உரியதாகும்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். ஒரு தலித் சகோதரர், தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

நாடு முழுவதும் திட்டமிட்டு மத மோதல்களை உருவாக்கி வருகின்ற பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், வன்முறையில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

இத்தகைய வன்முறை அராஜகத்தை, முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்க, காவல்துறை தவறி விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர், காஞ்சிபுரம் திருப்போரூரில் பேசுகையில், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று தன் கட்சிக்காரர்களிடம் சூசகமாகச் சொன்னது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான்.

அவர் போட்டி இடுகின்ற தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், நத்தமேடு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, ஜனநாயகத்தை அழித்த கொடுமை, இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைதிக்குப் பங்கம் நேர்ந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியும், அவர்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற தமிழக ஆளுங் கட்சியும் இணைந்து, சட்ட ஒழுங்கைக் கேள்விக்குறி ஆக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்வது, பொது அமைதிக்கு ஆபத்து உருவாகி இருக்கின்றது.

சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்போர் மீது, காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வியாழன், 18 ஏப்ரல், 2019

தேர்தல் ஆணையம் முன்வைத்த காரணங்கள் நியாயமற்றது - வைகோ கண்டனம்



இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது. தேர்தலை தடை செய்ததற்கு தேர்தல் ஆணையம் முன்வைத்த காரணங்கள் நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏனெனில் வேலூர் தொகுதியில் வருமானவரித்துறை நடத்திய சோதனை, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரை.கதிர் ஆனந்த் அவர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி அவர்கள் தங்கியிருந்த இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை அபாண்டமாக களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு வருமான வரித்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருவது கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று ரூபாய் 1000, 2000, 5000 என்று அள்ளி வீசுவதைத் தடுக்க திராணியற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி அரசின் காவல்துறையை ஏவி, எதிர்க்கட்சியினரை மிரட்டுவது அக்கிரமச் செயலாகும்.

ஜனநாயக நடைமுறைகளை குழிதோண்டிப் புதைத்து வரும் மத்திய பாஜக அரசு, அரசியல் சாசன அமைப்புகள் அத்தனையையும் சீரழித்துவிட்டது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு துறை போன்றவை மோடி அரசின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு கிடக்கும் நிறுவனங்கள் ஆகிவிட்டன. பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சுயேச்சையான அமைப்புகளை பயன்படுத்துவது வெட்கக்கேடானது ஆகும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே செல்லரிக்கச் செய்யும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகால பாசிச பாஜக அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோடி அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல் ஆணையம் கருவியாக செயல்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யாமல் இருப்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நோக்கம் தெளிவாகிறது. இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை தேர்தல் களத்தில் முடக்குவதற்கு முனைந்துள்ள மோடி அரசின் பாசிச சர்வாதிகாரத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மக்களின் பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் பா.ஜ.க.வின் பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்க தக்க தீர்ப்பை அளிப்பார்கள்.

தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் இழைத்த மோடி அரசையும், அதற்குக் காவடி தூக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் தூக்கி எறிய தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ராணுவ வீர்ர்களின் உயிர்த் தியாகத்தில் மோடி அரசு ஒளிந்து கொள்கிறது.


மோடி - எடப்பாடி ஆட்சிகளுக்கு முடிவு கட்ட 
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 
வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 


மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய திருநாட்டை முற்றிலும் சீரழித்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடித்தளத்தின் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய விழுமியங்களின் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்தாண்டு காலம் சாதித்தவைகளை சொல்லி வாக்கு கேட்காமல் ராணுவ வீர்ர்களின் உயிர்த் தியாகத்தில் மோடி அரசு ஒளிந்து கொள்கிறது. தங்களது ஆட்சியில் மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மறந்தும் மோடி பேச மறுக்கிறார். ரபேல் விமான பேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பை காவு கொடுத்து ஊழல் புரிந்து விட்டு நான் தான் ‘காவல்காரன்’ என பசப்பி வருகிறார்.

விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம் என்றவர்கள் விவசாயத் துறைக்கே விஷம் வைத்து கொல்லப் பார்க்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், விளை பொருளுக்கோ நியாய விலை இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, மறுபக்கம் விவசாயிகளுக்கு சல்லிக்காசு கூட தள்ளுபடி இல்லை. கல்விக்கடன் தள்ளுபடியும் இல்லை.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கனவே வேலையில் இருந்தவர்களும் வீதிக்கு விரட்டப்பட்டுள்ளார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 100 நாள் வேலை முடக்கப்பட்டு நிற்கிறது.

ரூ.380 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை ரூ. 900 அளவிற்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் - டீசல் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து ஏழை-எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் வாழ்க்கைச் சக்கரத்தை சுற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பண புழக்கம் முடங்கி இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது.
தமிழ் மொழியின் வளர்ச்சியை திட்டமிட்டு தடுக்கும் மோடி அரசு இந்தி சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தமிழ் தொல்குடியின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ளும் என்பதால், அந்த ஆய்வுகளின் மீது இருள் சூழச் செய்ததை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

மோடி அரசின் ஊழல்கள் அனைத்திற்கும் உச்சமாக விளங்குகிறது ரபேல் போர் விமான பேர ஊழல். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளம் அனைத்தையும் திறந்துவிட்ட மோடி அரசு, சாமானிய மக்களின் கடைசி கையிருப்பையும் களவாடிவிட்டது.

சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தியது மோடி தலைமையிலான அரசு. அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வக்கில்லாமல் கடைசி நேரத்தில் தேசத்தின் பாதுகாப்பையே தேர்தல் சதுரங்கத்தில் பகடைக்காயாக உருட்டிவிட்டு, பல் இளித்து இருக்கிறது மோடி அரசு.

உயர்கல்வி நிலையங்கள் அனைத்தும் மதவெறியர்களால் நிரம்பி வழிகின்றன. மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் காட்டாட்சி தர்பாருக்கு முடிவு கட்டியாக வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க விடாமல், தடுக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது மோடி அரசு.

ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கி, நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, இயற்கை பேரிடர்களுக்கு உரிய நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது என தமிழகத்திற்கு மோடி அரசு வன்மத்துடன் இழைத்துள்ள வஞ்சகங்கள் எண்ணிலடங்கா. இப்போதும் நீட் தேர்வு நீடிக்கும், 8வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் முன்னிலையிலேயே அறிவித்துள்ளார்கள். இதற்கு முதலமைச்சரோ வாய்திறக்கவில்லை.

பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மோடி அரசின் அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்றது மாநில அதிமுக அரசு. பொதுமக்கள், ஆசிரியர், அரசு ஊழியர் என அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டத்தையும் கொடூரமாக ஒடுக்கியது. முதலமைச்சர் துவங்கி அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்துள்ளன.

இரண்டாண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. இந்நிலையில் சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

மத்தியிலும் மாநிலத்திலும் அநியாயக் காரர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்புதான் இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகும். வரலாறு முழுவதும் மக்கள் சக்திதான் மாற்றத்தை, முன்னேற்றத்தை சாத்தியமாக்கியுள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடத்துவோரை தண்டிக்கவும், நியாயத்தை நீதியை நிலைநிறுத்தவும் இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! - வைகோ

இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி!
- வைகோ


இந்தியா ஒரு ஆபத்தான கட்டத்தைக் கடந்துசெல்ல வேண்டி இருக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. திருமுருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளை பக்தியுடன் வழிபடும் பக்தர்கள், தில்லையில் சிற்றலம்பலத்தை வழிபடும் பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காளியம்மன், வடக்கத்தியம்மன், முத்தாலம்மனை வழிபடும் பக்தர்கள். இருக்கிறார்கள்.

அதே போல் இதோ பிறை தெரிகிறதே, இந்தப் பிறைக் கொடியை நேசிக்கக்கூடிய இசுலாமியப் பெருமக்கள் பெருமளவில் இங்கே வாழ்கிறார்கள். தேவாலயங்களுக்குச் செல்கிற கிறிஸ்தவப் பெருமக்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக, அண்ணன் தம்பிகளாக வாழ்வது மிகுந்த மகிழ்ச்சியானது. இதில் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது.

இந்திய நாட்டின் பல நாடாளுமன்றவாதிகளைப் பார்த்திருக்கிறேன். பல பிரதமர்களோடு வாதிடக்கூடிய வாய்ப்பையும் கடந்த காலங்களில் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு தலைமை அமைச்சரும் மோடியைப் போல ஆபத்தாகப் பேசியது இல்லை. காஷ்மீர் மாநிலம்- புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு இசுலாமிய சகோதரன் உட்பட நமது வீரர்கள் 42 பேர் இறந்துபோனார்கள். அவர்கள் சிந்திய இரத்தத் துளிகளுக்கு தலைவணங்கி நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இராணுவ வீரர்கள் இந்த நாட்டின் சொத்து, காவல் தெய்வங்கள். அவர்களை எந்தக் கட்சியும் உரிமை கொண்டாட முடியாது; இதுவரை யாரும் உரிமை கொண்டாடியதும் கிடையாது.

ஆனால் கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் எல்லை தாண்டி பேசுகிறார். இவர் கையில் மறுபடியும் அதிகாரம் வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது. உயிர் துறந்த 42 பேரின் இரத்தத்தை நினைத்து முதல் வாக்காளர்கள் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகிறார். யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்கள்? இப்படிப் பேசுவது, சர்வாதிகாரியின் பேச்சு அல்லவா? முசோலினி போன்றவர்கள் பேச்சு அல்லவா? ஹிட்லர், இடி அமீன் போன்றவர்களின் பேச்சு அல்லவா? நாட்டின் பிரதமர் இப்படிப் பேசலாமா? ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கின்ற விதத்தில் இருக்கிறது அவரது பேச்சு.

ஐந்தாண்டு காலத்தில் மதச்சார்பின்மையைப் பற்றி வலியுறுத்திப் பேசிய பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் படுகொலைக்காவது பிரதமர் கண்டனம் தெரிவித்தது உண்டா? இந்தியாவில் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் காப்பாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்த மிகச் சிறந்த சிந்தனையாளர் கல்புர்கியை நட்ட நடுத் தெருவில் சுட்டுக் கொன்றார்களே நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா? அதே போன்ற சிந்தனை கொண்ட நரேந்திர தபோல்கர். அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி, சமணர், சீக்கியர், பௌத்தர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது; அது அவரவர் மத உரிமை என்று அவர் தொடர்ந்து எழுதியதற்காகப் படுகொலை செய்தார்கள். அதைப்போல் கோவிந்த் பன்சாரேவையும் கொன்றார்கள். கௌரி லங்கேஷ் என்ற சகோதரியை வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொன்றதற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா?

“முஸ்லிம்களே இந்த நாட்டைவிட்டு வெறியேறுங்கள்” என்று ஒரு மத்திய அமைச்சர் பேசினார். இந்தப் பேச்சு மிக மிக ஆபத்தானது. அவரைப் பதவியிலிருந்து நீக்கினீர்களா? தாத்ரியில் 105 டிகிரி காய்ச்சலில் சாகக் கிடந்த முகமது அக்லக், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்று தெருவில் இழுத்துப் போட்டு அடித்தே கொன்றார்களே அதற்குக் கண்டனம் தெரிவித்தீர்களா? இரத்தக் களரிகள் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில்தானே, பாகிஸ்தான் நாடே வந்திருக்காது, காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறால்தான் பாகிஸ்தான் வந்தது என்று கூறுகிறீர்கள். ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால்கூட இந்திய சரித்திரத்தைச் சொல்வான்.

“என் உடலைக் கூறு போட்டுத்தான் நாட்டைப் பிளக்க முடியும்” என்று காந்தியார் கூறினார். மூன்றாயிரம் ரூபாய் கோடி செலவில் படேலுக்கு சிலை எழுப்பியிருக்கிறீர்களே, அந்தப் படேலின் பேச்சுக்களைத் திரும்பப் படித்துப் பாருங்கள். பாகிஸ்தான் பிரியக்கூடாது என்று சர்தார் வல்லபாய் படேல் கூறினாரா? அன்றைய கால கட்டத்தில் அது காலக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. “அடைந்தால் பாகிஸ்தான். இல்லையேல் கபர்ஸ்தான்” என்று ஒரு பக்கம் முஸ்லிகள் நிறைந்து வாழ்கின்ற பகுதியில் போராடுகிறார்கள். முகமது அலி ஜின்னா அதற்குத் தலைமை தாங்கினார். இரண்டு பக்கத்திலும் இரத்தம் ஆறாக ஓடியது. இந்துக்களும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். இங்கேயும் நடந்தது, கிழக்குப் பாகிஸ்தானினும் நடந்தது. நள்ளிரவில் நாடு சுதந்திரம் அடைந்தது.

“உலகம் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் விழித்துக் கொண்டு விட்டோம்” என்று பண்டித ஜவஹர்லால் நேரு பேசுகிறபோது, கல்கத்தா அருகில் இந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உத்தமர் காந்தியடிகள் நடந்து போய்க் கொண்டு இருந்தார். அவரைக் கொல்ல வேண்டும் என்று ஜனவரி 20 ஆம் தேதி குண்டு வீசினார்கள். அன்றைக்கு அவர் தப்பிவிட்டார். பத்து நாட்கள் கழித்து மாலை 5 மணி 12 நிமிடத்துக்கு பிர்லா மாளிகை பிரார்த்தனைக் கூட்டத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வந்து சுட்டான் கொலைகாரன் நாதுராம் விநாயக் கோட்சே.

இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார். “தம்பி, யமுனைக் கரையில் நெருப்பு காந்தியின் சடலத்தின் மீது எரியவில்லை; மக்கள் நெஞ்சில் எரிகிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வானொலியில் உருக்கமாகப் பேசினார்.

கடந்த மாதம் அலிகாரில்உலகம் போற்றுகின்ற உத்தமர் காந்தியடிகளைப் போல ஒரு உருவத்தைச் செய்து, இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக வாழுகின்ற அலிகாரில், வீர கர்ஜனை புரிந்த அபுல்கலாம் ஆசாத் முழக்கமிட்ட அலிகாரில், காந்தியை இன்றைக்கு நாங்கள் சுட்டுக் கொல்லப் போகிறோம் என்று அறிவித்து விட்டு, ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஏதோ நடக்கப் போகிறது என்று அனைவரும் பதறிப் போனார்கள். கூட்டம் கூடியது. காந்தியைப் போன்ற உருவத்தைக் கொண்டு வந்தார்கள். இந்து மகா சபையின் தலைவி பூஜா அதைச் சுட்டார். சுட்டவுடன் இரத்தம் வருவதைப் போன்று காட்சி அமைத்திருந்தார்கள். கீழே தள்ளி, காலால் மிதித்தார்கள்; பின்பு நெருப்பு வைத்தார்கள். “காந்தியைச் சுட்டுக் கொன்றோம் நாதுராம் விநாயக கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைப்போம்,” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி உலக நாட்டுத் தலைவர்களின் உள்ளத்தை எல்லாம் உலுக்கியது. நாடாளும் பிரதமர் அவர்களே நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா? உங்கள் மனம் பதறவில்லையா? பதட்டம் அடையவில்லையா? உங்கள் இதயத்தில் ஈரம், இரக்கம் எதுவும் இல்லையா? நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நீங்கள் தலைவர் அல்லவா? இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருக்கின்ற, நீங்கள் காலால் இட்டதை தலையால் செய்து கொண்டிருக்கின்ற யோகி ஆதித்யநாத்தை அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்யச் சொன்னீர்களா? இல்லையே, கண்டிக்கக்கூட இல்லையே? அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன? இதுதான் உங்கள் நோக்கமா? காந்தியாரை தெருத் தெருவாகச் சுட வேண்டுமா? கோட்சேவுக்கு ஊர் ஊராகச் சிலை வைக்க வேண்டுமா? நாட்டின் குடிமக்களில் ஒருவனாகக் கேட்கிறேன், இது உங்கள் நோக்கமா? திட்டமா? புல்வாமாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கிறீர்களே, இது எவ்வளவு ஆபத்தானது? இப்படிப்பட்ட கொடிய சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது.

ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம்


ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகளைப் பார்க்கின்றேன். சரக்கு, சேவை வரிக்காக எத்தனை ஆடிட்டர்களை வைத்துக் கொள்வீர்கள்? உங்கள் தொழில் நலிந்தது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் மூடப்பட்டு, ஐம்பது இலட்சம் பேர் வேலை இழந்து இருக்கின்றார்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூறினாரே பிரதமர். யாருக்காவது வேலை வாய்ப்புக் கொடுக்க முடிந்ததா? 15 இலட்ச ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று அறிவித்தீர்களே, 15 ரூபாயாவது வந்து சேர்ந்ததா? எதுவும் இல்லை.

450 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை இன்றைக்குத் 900 ரூபாய். கொண்டுவந்து கொடுப்பவருக்கு 100 என்று ஆயிரம் ரூபாய் இல்லாமல் எரிவாயு சிலிண்டர் ஒரு வீட்டுக்குச் சென்று சேர முடியாது. 50 ரூபாய், 60 ரூபாய் கொடுத்து கேபிள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு அது 250 ரூபாய். கட்டாய வசூல் போன்று ஆகிவிட்டது.

தாராபுரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு 18 கோடி ரூபாயில் புறவழிச்சாலை. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே, கேரளத்தில் இடைமலையாறு கட்டிக் கொண்டால், இங்கே ஆனைமலை ஆறு, நல்லாறு கட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஆர்.டி.மாரியப்பன், கணேசமூர்த்தி ஆகியோரை அழைத்துக்கொண்டு கேரளாவின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள திருவனந்தபுரத்துக்கே சென்று, அப்போது முதலமைச்சராக இருந்த உம்மண் சாண்டி அவர்களைச் சந்தித்து இதை நினைவூட்டினோம். இடைமலையாறு திட்டம் இன்னும் முடியவில்லை, முடிந்தவுடன் நீங்கள் கட்டிக்கொள்ளலாம் என்றார் உம்மன் சாண்டி. இப்போது முடிந்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். இதே பகுதியில் ஒரு பக்கத்தில் சர்க்கார் மதி என்ற இடத்திலிருந்து திரிமூர்த்தி அணை வரையிலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்ற காரணத்துக்காக செவ்வட்டக் காhல்வாய் காங்கீரிட் தளம் அமைத்து ஏறத்தாழ 186 கோடி ரூபாய் மதிப்பில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதையும் நான் இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன்.

அன்புக்குரியவர்களே, ஏழை எளிய மக்களின் துயரத்தை உணர்ந்துதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாகச் சொன்னார், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். கால் பவுன், அரை சவரன், முக்கால் சவரன், ஒரு சவரன் என்று ஐந்து சவரன் வரை நகையை ஈடு வைத்துக் கடன் வாங்கிய ஏழை மக்களின் கண்ணிரைத் துடைக்க கடன்களை இரத்து செய்தார். அதேபோல ராகுல் காந்தி அவர்களும், இவர்தான் பிரதமராக வரவேண்டும் என்று திமுக தலைவர் சுட்டிக் காட்டினாரே அவர் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கின்ற தலைவராக இருக்கிறார். அதனால்தான் பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் மீண்டும் மாநிலங்களுக்கே கொடுக்கப்படும் என்கிறார்.

இன்னொரு பக்கத்தில் நரேந்திர மோடி பள்ளிக்கூடத்துக்குள் நாங்கள் சமஸ்கிருதத்தைத் தான் கொண்டு வந்து திணிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கிறார். இரண்டும் இரண்டு துருவங்கள். ஒரு பக்கம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள் . இன்னொரு பக்கம் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்.

ஏழ்மையில், வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம், வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருப்பதை அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று இருக்கின்றனர். எனவே தமிழகத்தில் இன்றைக்கு எத்தகைய வஞ்சகத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்றால், எதிர்காலத்தில் தமிழகத்தின் பெரும் பகுதி நாசமாகி விடுமோ? என்ற பயத்தில் இருக்கின்றேன்.

என்னுடைய வாழ்நாளில் நான் அதைப் பார்ப்பேனா தெரியவில்லை. என் வாழ்நாளுக்குப் பின்னால் யோசித்துப் பார்க்கின்றேன். அதனால்தான் இந்த 55 வருடத்தில் பலமுறை நான் போராட்டங்கள் நடத்தி, இதுவரை 5 முறை சிறையிலும் இருந்திருக்கிறேன். மிகுந்த கவலையோடு சொல்கிறேன், திட்டமிட்டுத் தமிழகத்தை நரேந்திர மோடி அரசு பழிதீர்க்கிறது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்துக்குள் கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். நீங்கள் பணத்தை ஒதுக்கீடு செய்து, கட்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். மேகேதாட்டில் அணைகட்டிய பிறகு மேட்டூருக்குத் தண்ணீர் வராது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த இடத்துக்கும் கிடைக்காது. 25 இலட்சம் ஏக்கர் நஞ்சை நிலம் அடியோடு பாழாகி, தரிசு நிலமாகி, நஞ்சை கொஞ்சி விளையாடிய தஞ்சை பஞ்சப் பிரதேசமாகி, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், எங்கு நோக்கினும் மா, பலா, வாழை என்று இயற்கை அன்னையின் அரவணைப்பில் இருந்த தஞ்சை எத்தியோபியாவைப் போல மாறும். எலும்பும் தோலுமாக பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலைமைக்கு நம் மக்கள் ஆளாவார்கள். நான் தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ சொல்லவில்லை. மாதக் கணக்கில் ஊர் ஊராகச் சென்று இப்படிப்பட்ட ஆபத்து இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

தமிழகத்தின் பழம் பெருமை


அரசியல் நிர்ணய சபையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், இந்த நாட்டின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக இருக்க முழுத் தகுதியும் ஒரே ஒரு மொழிக்குத்தான் உண்டு. அது பழமையான செந்தமிழ் மொழிக்குத்தான் உண்டு என்று சொன்னரே, அந்தத் தமிழ் மொழி, அந்த இனம் உலகத்தின் முதல் கலாச்சாரத்தை, நாகரிகத்தை கண்டறிந்த இனம்.

தாமிரபரணி ஆற்றங்கரை ஆதிச்சநல்லூரிலிருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு கார்பன் சோதனைக்கு அனுப்பினார்கள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்னும் பல இடங்களில் பார்த்தால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்கிறார்கள். கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் பூம்புகார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சேனல்-4 அறிவிக்கிறது.

முதன் முதலில் சுவையான உணவு உண்பதற்கு, மானத்தை மறைப்பதற்கு ஆடைகள் தரிப்பதற்கும், குகைகளில் இருந்த நிலை மாறி, வீடு கட்டி வாழ்ந்ததற்கும் நாகரிகம் கண்டறிந்த இனம் இந்த இனம். மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்று இவர்களுக்கு இந்த உணர்வு இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். புல்டோசர் கொண்டு இடிப்பதைப் போல இடித்து எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மை ஆக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அப்படி ஒற்றைத் தன்மையாக்க முனைந்தால் இந்தியா என்ற நாடு இருக்காது. ஒற்றைத் தன்மை எந்தக் காலத்தில் இருந்தது?

சஞ்சீவ் ரெட்டி விடுதலைப் போராட்டத்தில் எட்டு வருடங்கள் சிறையில் இருந்தவர். குடியரசுத் தலைவரானவுடன் பேசினார், “எந்தக் காலத்திலும் இந்தியா என்ற நாடாக இல்லை. பிரிட்டிஷ்காரன் வந்த பிறகு அவன் ஏற்படுத்தினான்” என்று சொன்னார். பன்முகத் தன்மையை நீங்கள் அழிக்க நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பேராபத்துக்கு உள்ளாகிவிடும். எங்கும் இரத்தக் களரியாகத்தான் இருக்கும். இதுதான் அவர்கள் நோக்கம், திட்டம்.

நான் சிறைக்குப் பயப்படவில்லை. எதிர்த்துப் போராடுவேன். ஆயுள் தண்டனையே கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். அதைப்பற்றி நான் கவலைப்படுகிறவன் அல்ல. ஆனால் வரப் போகிற ஆபத்தை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு முடிந்து போன பிரச்சினை. அதற்குப் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே கொடுக்கிறது. கேரளாவில் அவர்கள் ஒரு இடம்கூட வெற்றிபெற முடியாது. பின்பு ஏன் கேரளாவுக்கு அந்த அனுமதி கொடுக்கிறது? அவன் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று அறிவித்து விட்டான். அணை உடைந்தால் பாண்டிய மண்டலத்தில் 85 இலட்சம் ஏக்கர் பாசனம் இருக்காது. ஒரு கோடி மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்காது. ஆக, ஒரு பக்கம் பாண்டிய மண்டலம் அழிவுறும். மறு பக்கம் சோழ மண்டலம் அழிவுறும். அடுத்த பக்கம் உயர் அழுத்த மின் கோபுரங்களும், கெயில் குழாய்களையும் கொண்டு வந்து கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளை அழித்து விடலாம். நமது வியாபாரிகள் வாழ்வும் நசிந்துபோனது. ஆலைகள் மூடப்பட்டு விட்டன. விவசாயிகளான வேளாண் பெருங்குடி மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக தற்கொலை செய்து கொண்டு மடிகின்ற அவலம் எற்பட்டு இருக்கின்றது.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்களாட்சித் தன்மையைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்து வந்த காரணத்தால்தான், 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு விஜய் மல்லையா வெளிநாட்டுக்குப் போவதற்கு இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இலண்டனுக்குத் தப்பிச் செல்ல எப்படி விசா கொடுக்கப்பட்டது? விக்ரம் கோத்தாரி 3,850 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு எப்படி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முடிந்தது? நிகில் சர்வேஸ்ராம் ஆந்திராவில் மூன்று வங்கிகளில் 3,850 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டான். இப்படி 23 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்கள்.

ரபேல் வானூர்தி பேர ஊழல்


இதுவரை நீங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதமராகத்தான் இருந்து வந்தீர்கள். அதனால் தான் வீர மரணம் அடைந்த 42 பேரை நினைத்து ஓட்டுப் போடச் சொல்கிறீர்கள். பெங்களூரில் இருக்கும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தோடு சேர்த்து, தஸ்ஸால்ட் ஏவியேஷன் என்கின்ற பிரஞ்சுக் கம்பெனியோடு போர் விமானங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, முதலில் உங்களுக்கு 18 விமானம்தான் நாங்கள் தருவோம். மீதி 108 விமானங்களை பெங்களூரில் நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். நாங்கள் தொழில்நுட்பம் தருகிறோம் என்றார்கள். இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது போட்ட ஒப்பந்தம்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அனில் அம்பானியை அழைத்துக்கொண்டு போனார். அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிந்தார். புதிய ஒப்பந்தம் போடுகிறார். இந்தப் புதிய ஒப்பந்தத்தில் நம்முடைய பொதுச் சொத்தான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் கிடையாது. போர்த் தளவாடங்களுக்கு ஒரு ஆணிகூட செய்யும் அனுபவம் இல்லாத அனில் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்று, ‘அப்பானி டிபென்ஸ்’ என்று உப்புமா கம்பெனியைத் தொடங்கி, இந்தக் கம்பெனியோடு தஸ்ஸால்ட் ஏவியேஷனை ஒப்பந்தம் செய்ய வைத்து, 526 கோடிக்கு வாங்குகின்ற விமானத்தை, 1670 கோடிக்கு வாங்க நீங்கள் பேரம் பேசி ஒப்பந்தம் போட்டீர்கள் என்று இந்து ஆங்கில ஏடு பகிரங்கமாக வெளியிட்டது. அரசாங்க ஆவணங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று நீங்கள் மிரட்டிப் பார்த்தீர்கள். பின்பு நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் கூறினார், திருடிச் செல்லவில்லை. நகல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று. நீங்கள் வழக்குப் போட்டால் போடுங்கள். நாங்கள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் என்று இந்து பத்திரிகை உரிமையாளர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் விமானப் படைதான் முக்கியமான படை. இந்த விமானப் படையிலேயே நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டீர்கள் என்று உங்கள் மீது நான் குற்றம் சாட்டுகின்றேன்.

உங்களை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசுக்கு குலைநடுக்கம் எடுக்கிறது. பருப்பு ஊழல், ஆம்னி பஸ் ஊழல் என்று பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுக்கள் இவர்களை மிரட்டுகின்றன. அஞ்சி நடுங்கிக் கிடக்கிறார்கள்.

சுயமரியாதையோடு இவ்வளவு ஆபத்துகளையும் தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் குரல் கொடுத்தீர்களா? நீட் தேர்வால் நம்மை நாசப்படுத்தினார்கள். 1176 மதிப்பெண் வாங்கிய ஓலைக் குடிசையில் பிறந்த ஏழை மாணவி அனிதா டாக்டராக முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனாள். அனிதா சாவுக்கும், கடலூர் பிரதிபா சாவுக்கும் காரணம் மத்திய அரசு என நான் குற்றம் சாட்டுகின்றேன்.

தூத்துக்குடி படுகொலைகள்


ஸ்டெர்லைட் விவகாரத்தில் 22 வருடங்களாக நான் அறவழியிலும், நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றேன். நூறு நாட்கள் அமைதியாக அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வருகிறார்கள் என்றவுடன், இனி யாரையும் ஸ்டெர்லைட் கம்பெனியை எதிர்த்துப் போராட விடக்கூடாது என்று ஸ்டெர்லைட் கம்பெனியின் கூலிப் படையாக உங்கள் காவல்துறையை மாற்றினீர்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது நான் குற்றம் சாட்டுகின்றேன்.

கால்வதுறையில் எல்லோரையும் நான் மதிப்பவன். நானும், சகோதரர் கணேசமூர்த்தி அவர்களும் சிறையில் இருந்தபோது, எங்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாவலர் சாப்பிட்டால்தான் நாங்கள் சாப்பிடுவோம். காவலர்களை இரவும் பகலும் சாலையில் பீட் போடக்கூடாது என்றும், முக்கிஸ்தர்கள் வந்தால் வெயிலிலேயும், மழையிலேயும் காவல்துறையினரைக் காக்க வைக்கக் கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் பேசியவன் நான். காவல்துறையில் நேர்மையான, கண்ணியமான, மனசாட்சி உள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள். அங்கு கருப்பு ஆடுகளும் இருக்கின்றன. அரசாங்கம் சொன்னதற்காக எந்தவித பஞ்சமா பாதகத்தையும் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டுபோய் தூத்துக்குடியில் பொதுமக்களைச் சுட்டுப் பொசுக்குங்கள் என்று கொன்றுவிட்டீர்கள்.

மனு கொடுக்க வருகிறார்கள் என்றவுடன், மாவட்ட ஆட்சியரை கோவில்பட்டிக்குப் போகச் சொல்லிவிட்டு, மனுக்கொடுக்க நடந்து வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு வருவதற்கு முன்பாகவே அங்கு இருந்த அரசு வாகனங்களுக்கு காவல்துறையினர் தீ வைத்தார்கள். நான் சொல்லவில்லை, மூன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூன்று முன்னாள் டி.ஜி.பி.கள் கொண்ட குழு, ஹென்றி திபேன் வைத்த மக்கள் கண்காணிப்புக் குழு 2400 பக்கத்திற்கு அறிக்கை கொடுத்திருக்கிறது. அவர்கள் கண்மண் தெரியாமல் சுடவில்லை, கண்ணீர்ப் புகை எழுப்பி சுடவில்லை, இடுப்புக்குக் கீழே சுடவில்லை, நெற்றியைக் குறிபார்த்துச் சுட்டார்கள். இறந்தவர்கள் அனைவரது உடலிலும் நெற்றியில், நெஞ்சில், தலையில்தான் குண்டுகள் பாய்ந்திருந்தன. ஸ்னோலின் என்ற 11 வயது பள்ளி மாணவியின் வாயில் குண்டு பாய்ந்து, தலை வெடித்துச் சாலையில் கிடந்திருக்கிறாள்.

மே 22 ஆம் தேதி இரவு பத்தரை மணிக்கெல்லாம் நான் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டேன். வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். என் வாழ்க்கையில் எவ்வளவோ துயரமான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ மரணங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், “நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என்றைக்காவது ஒருநாள் சாகத் தான் போகிறோம். எங்கள் பிள்ளை தலை வெடித்து ரோட்டில் கிடந்தாளேய்யா. பச்சப் புள்ளயா” என்று அந்தக் குடும்பம் கதறிய கதறல் என் இதயத்தைப் பிளந்தது.

திரேஸ்புரத்தில், தூக்குவாளியில் சோறு கொண்டு சென்ற ஜான்சி என்கின்ற பெண்ணை, திரேஸ்புரத்துக்காரர்கள் என்றைக்கும் போராட்டத்துக்கு வரக்கூடாது என்பதற்காகச் சுட்டார்கள். தலை வெடித்து மூளை மண்ணில் சிதறியது என்று அந்தக் குடும்பத்தினர் சொன்னார்கள். இப்படிப்பட்ட கொடுமை ஜாலியன்வாலாபாக்கில்கூட நடந்ததாகத் தெரியவில்லையே? இந்தக் கொலைபாதக அரசு வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்பெனிக்காரனுக்காக இந்த படுபாதகச் செயலைச் செய்தது.

வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் என்னைப் பார்த்து ஐந்து நிடம் பேச வேண்டும் என்று ஏழு வருடம் துடித்தான். ஒரு நிமிடம்கூட அவன் முகத்தில் முழிக்க மாட்டேன் என்று சொன்ன தகுதியோடு நான் பேசுகின்றேன். (பலத்த கைதட்டல்) அட்டர்னி ஜெனரலே என்னுடைய அலுவலகத்துக்கு வந்து, “நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அரை மணி நேரம் உங்களை அனில் அகர்வால் சந்திக்க நினைக்கிறார். நீங்கள் எங்கு வரச்சொன்னாலும் வருவார்” என்றார். நான் பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் பட்டிக்காட்டு ஆள். பனை மரத்துக்குக் கீழே இருந்து பதநீரே குடித்தாலும் கள் என்று மக்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட நினைவில் வளர்ந்து வந்தவன். இவ்வளவு கொடுமையைச் செய்த கொலைபாதக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். 22 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் வெற்றிக்கொடி நாட்டும். மத்தியில் மதச்சார்பின்மையைக் காக்கின்ற ஜனநாயகத்தைக் காக்கின்ற ஆபத்து இல்லாத ஒரு அரசு வேண்டும் நமக்கு. சேவை, சரக்கு வரியைத் தூக்கி எறிகின்ற, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டார், ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தி பிரகடனமே செய்துவிட்டாரே. ஆகவே அப்படிப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

4 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு - கே. பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது. 
கே. பாலகிருஷ்ணன் அறிக்கை


தமிழகத்தில் காலியாக இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளில் மே மாதம் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுதே மேற்கண்ட நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை இணைத்து நடத்த வேண்டுமென மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வற்புறுத்தின. ஆனால் ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் உடனடியாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் வாக்குமூலம் தாக்கல் செய்தது. இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் தற்போது நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடத்த வேண்டிய தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி தான் தேர்தல் நடத்த வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெறவுள்ள ஏப்ரல் 18ந் தேதியே நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தியிருந்தால், தற்போது தனியாக தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சுமார் ரூ. 500 கோடி தேர்தல் செலவை தமிழக அரசு மிச்சப்படுத்தியிருக்க முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

 மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று, மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து, திமுக வேட்பாளர்கள் அபரிமிதான வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும், திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வருமான வரித்துறை ரெய்டின் தகவல்கள் எங்கே? - மு.க.ஸ்டாலின்

“2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை ரூ.650 கோடி ஊழல் பணத்தில் 'கொள்முதல்' செய்த அ.தி.மு.கவின் அதிகார அத்துமீறல் அம்பலம்"
"வருமான வரித்துறை ரெய்டின் தகவல்கள் எங்கே? இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் சக்தி எது?”
-  மு.க.ஸ்டாலின் 

அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைத்து “2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே” லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிர்ச்சி தகவல்களை “தி வீக்” ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை முறித்துள்ள இந்த சதித் திட்டத்தை அ.தி.மு.க-வின் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், இப்போது துணை முதலமைச்சராக இருக்கும் திரு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் “கூட்டணி” அமைத்து நடத்தியிருக்கிறார்கள். தி.மு.க.விடமிருந்து வெற்றியை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிப் பறிக்க, தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தை “எஸ். ஆர். எஸ் மைனிங்” என்ற கம்பெனி மூலமே விநியோகம் செய்துள்ளதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைத்துள்ளது. இந்த பணம் அனைத்தும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டு, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அடியோடு படுகுழிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

5 ஆண்டு சாதனையை கூற முடியாத பாஜக - யெச்சூரி


மதுரை, ஏப்.10- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தல் முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல விசேஷமானதும் ஆகும்.இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நீடிக்க வேண்டும். மதச்சார்பின்மை தொடரவேண்டும் என்பதற்கான தேர்தல். ஆட்சிப்பொறுப்பிலுள்ள பாஜக அரசியல் சட்டம் மீது விசுவாசமில்லாதது. அரசியல் சட்டத்தைசிதைத்தது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். மதுரையின் பாரம்பரியம் மிக்க மீனாட்சி யம்மன் நகரில் மக்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொகுதியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஒரு மக்கள் போராளி, சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எங்களோடு இணைந்து பணியாற்ற தில்லிக்கு அனுப்பிவையுங்கள். 5 ஆண்டு சாதனையை கூற முடியாத பாஜக மீண்டும் வெற்று வாக்குறுதிகளோடு வருகிறது: யெச்சூரி சாடல்

வியாழன், 11 ஏப்ரல், 2019

“வெற்றி நம் பக்கம், விழிப்புடன் செயலாற்றுவோம்!” - மு.க.ஸ்டாலின்


“வெற்றி நம் பக்கம், விழிப்புடன் செயலாற்றுவோம்!”
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மடல்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
எங்கு சென்றாலும் பொங்கும் ஆரவாரம். எல்லாத் திசையிலும் நம்பிக்கை முழக்கம். எந்த ஊர் என்றாலும் சமுத்திரம் போல மக்கள் சங்கமம் இதுதான் கடந்த 20 நாளாக தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டுள்ள பரப்புரைகளின் நான் காண்கிற களிப்புமிகு காட்சி. நான் மட்டுமல்ல, கழகத்தினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் இந்த எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் காண முடிகிறது. மக்களின் மனநிலை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென வெளிப்படுத்திடும் வகையில் தேர்தல் களம் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இணைந்தே நடப்பதால் மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்காளர்கள் நினைப்பதன் அடையாளமாகத்தான் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்குப் பேராதரவு பெருகி வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கிறது.
நாம் கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பியிருப்பவர்களல்ல. களத்தில் இறங்கிக் கண்ணயராமல் செயல்படுபவர்கள். பாடுபட்டு வளர்த்த பயிரை, அறுவடை நேரம் வரை கவனமுடன் பாதுகாத்தால்தான், வெற்றி எனும் விளைச்சலைக் காண முடியும். சற்று அசந்தாலும் அது களவாடப்படக்கூடும். ஏனென்றால், வேலியே பயிரை மேய்கின்ற காலம் இது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, எங்கு சென்றாலும் மக்கள் பெருந்திரளாக வரவேற்றார்கள், வெற்றிவாய்ப்பு தெளிவாகத் தெரிந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமும், அதற்குச் சாதகமாக தேர்தல் ஆணையம் பாராமுகமாக - பாரபட்சமாக செயல்பட்டதும், இத்தகைய சூழ்ச்சிகளையும் சூதுகளையும் அறியாமல் கழகத்தினர் சற்று அலட்சியமாக இருந்ததாலும், வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினைக் கழகம் கை நழுவ விட்டது. நம் உயிரனைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் வரலாற்றுச் சாதனைக்கு வாய்ப்பின்றிப் போனது.
இந்தியத் தலைவர்கள் வியந்து பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக அமர்ந்திருந்தால், அவர் இன்னும் ஊக்கத்துடன் உழைத்து, நமக்கு வழிகாட்டியாக இருந்து, நூறாண்டு கடந்து வாழ்ந்திருப்பார். ஒருவேளை, இப்போது போலவே இயற்கையும் முதுமையும் அவரை நிரந்தர ஓய்வு கொள்ளச் செய்திருந்தாலும், வங்கக் கடலோரம் தன் அண்ணன் துயிலுமிடத்திற்கு அருகே இதேபோல ஓய்வு கொண்டு இரவலாகப் பெற்ற இதயத்தை திரும்ப ஒப்படைத்து, அண்ணாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி இருப்பார். அவர் முதல்வராக இல்லாத காரணத்தால், அரசியல் பண்பு அறியாத - சுயமரியாதையை அடகு வைத்து பதவிக்கு வந்தோரிடம் நம் தலைவருக்கு கடற்கரையில் இடம் கேட்டு கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை வந்தது. அப்போதும் இரக்கமின்றி நம்மை விரட்டியவர்களை, சட்டத்தின் வழியாகப் போராடி நீதியை நிலைநாட்டி, தலைவர் கலைஞருக்கு கடற்கரையில் இடம் கிடைக்கச் செய்தோம். மரணத்திலும் போராளியாகி, தனக்கான கல்லறைக்குரிய இடஒதுக்கீட்டைப் பெற்ற மாவீரனானார் தலைவர் கலைஞர் அவர்கள்.
வெறும் 1.1% வாக்கு வித்தியாசம்தான் நம்மை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதற்கு இதைவிட கசப்பான உதாரணம் இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு உருப்படியான திட்டங்கள் ஏதேனும் உண்டா? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி விளம்பரமும் வருமானமும் தேடிக்கொண்டவர்கள் உரிய அளவில் முதலீட்டைக் கொண்டு வந்ததுண்டா? 3 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையை ஏற்றியதும், மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் சாஷ்டாங்கமாக அடகு வைத்ததும்தான் இவர்களின் பரிதாபச் சாதனைகள்.
இந்த இழிநிலையை மாற்ற தி.மு.கழகக் கூட்டணியால்தான் முடியும் என தமிழக மக்கள் நம்புகிறார்கள். ஏன் இந்த ஆட்சியை மாற்றவில்லை என எங்கு சென்றாலும் நம்மை நோக்கித்தான் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கான விடையை ஜனநாயக வழியில் தருவதற்கான நாள்தான், ஏப்ரல் 18. மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறவைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். கழக நிர்வாகிகள் அதற்கு முழுமையான ஆயத்தத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும். விளைந்து நிற்கின்ற வெற்றிக்கதிரை அறுவடை செய்து களத்து மேட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், விழிப்புடன் இருந்து செயலாற்றிட வேண்டும்.
மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய கூட்டணியில் இருப்போருக்கும் இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை அவர்களின் தேர்தல் பரப்புரை பேச்சுகளிலிருந்தே நாமும் உணர்கிறோம். மக்களும் உணர்ந்து கொண்டார்கள். மக்களின் ஆதரவு இல்லை என்பது தெரிந்ததால், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது பற்றி பொதுமேடையிலேயே சூசகமாகப் பேசுகிறார்கள். ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என வியூகம் வகுக்கிறார்கள். ‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்பது போல தங்களின் மோசடியை மறைக்க, மோடியின் அதிகாரக் குடைக்குள் நுழைந்துகொண்டு, எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து ரெய்டு நடத்தி, பழி சுமத்தி, வெற்றி பெற முடியாத தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவிட முடியுமா எனத் திட்டமிடுகிறார்கள்.
இத்தனை சூது வளையங்களையும், சூழ்ச்சி வலைகளையும் அறுத்தெறிந்துதான், நாம் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். உறுதியாகிவிட்ட கழகக் கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களின் கூட்டணியினரிடமிருந்தும் கவனமாகக் கண்ணெனப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.கழக நிர்வாகிகளுக்கு இருக்கிறது.
தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடினோம். கலைந்தோம் என்பதாக இல்லாமல் குழு குழுவாகச் சென்று, வீடு வீடாக வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு வாக்காளரும், எங்களை தி.மு.க.வினர் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாத அளவில் உங்கள் பணி முழுமையாக அமைந்திட வேண்டும். அதுபோலவே, ஆட்சியாளர்கள் கடைசி நேரத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள அதிகார அத்துமீறல்களைக் கண்டறிவதில் கொக்குபோல கழகத்தினர் செயலாற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவே, நமது கழகத்தின் சார்பிலும் கூட்டணியின் சார்பிலும் வாக்குச்சாவடி முகவர்களாக செயல்படுவோருக்கு உரிய பயிற்சிகளை அளித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே சேரும் வகையில் செயலாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும், ஆளுங்கூட்டணியின் அதிகார அத்துமீறல்களை அனுமதித்திடக் கூடாது.
நாடும் நமதே நாற்பதும் நமதே; இருபத்தி இரண்டும் எமதே என்பதே நமது இலக்கு. மத்திய பாசிச ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள அடிமை ஆட்சியையும் ஒருசேர விரட்டிடவும் வீழ்த்திடவும் நமக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்புதான் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தொகுதிகளுக்காக இடைத்தேர்தலும். அதனை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கண் இமைக்காமல், பசி நோக்காமல் களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் நம் பக்கமே!
வெற்றியைத் தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதனைப் பெற்று, வங்கக் கடற்கரையில் நிரந்தர ஓய்வெடுக்கும் நம் தலைவர் கலைஞரின் காலடிகளில் காணிக்கையாக்கும் பொறுப்பு அந்த உயிர்நிகர் தலைவரின் உடன்பிறப்புகளான உங்களின் கைகளில்தான் இருக்கிறது. வெட்டி வா என்றால் கட்டிவரக்கூடியவர்கள் எனது உடன்பிறப்புகள் எனப் பெருமையுடன் சொல்வார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்தப் பெருமைக்குரிய உடன்பிறப்புகளிடம் உங்களில் ஒருவனாக நான் எதிர்பார்ப்பது 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும், முழுமையான வெற்றி ஒன்றைத்தான்.
களத்தில் செயலாற்றுவீர்… கழகக் கூட்டணியின் வெற்றியை உறுதியாக நிலைநாட்டுவீர்

புதன், 10 ஏப்ரல், 2019

" NO MORE MODI " கோசமிடவேண்டும் - நடிகர் பூ ராமு

நோ மோர் மோடி !!!
நோ மோர் மோடி !!!
நோ மோர் மோடி !!!
என்று கோசமிடவேண்டும் ...
நடிகர் பூ ராமு 


ரூபாய் 15 லட்சத்தை நம் வங்கியில் காவலாளி போடுவார் என்று மக்கள் நமபிக்கொண்டிருக்கிறார்கள். சென்ற முறை வளர்ச்சி என்றார்கள். இந்த முறை பாதுகாப்பு என்கிறார்கள். மோடியை பொறுத்தவரை தேசம் என்பது எல்லாம் நாட்டின் எல்லை கோடு தான். நம்மை பொறுத்தவரை தேசம் என்பது இந்த மண்ணும் மக்களும் தான்.
பணமதிபிழப்பு நடவடிக்கையில் நான் உட்பட நம் பணத்தை எடுக்க முடியவிலலை. நான் உட்பட நாம் அனைவரும் அந்த நேரத்தில் பிச்சை எடுத்தோம். ரபேல் புத்தகத்தை ஒரு ஆயிரம் பேர் தான் வாங்கியிருப்பார்கள். ஆனால் தேர்தல் கமிசன் நடவடிக்கையால் இன்றைக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்துள்ளன. இந்த தேசத்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டம் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. அதை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த போது ஊழலை ஒழிப்போம் என்றார், கருப்புப்பணத்தை ஒழிப்போம் என்றார், தீவிரவாரதத்தை ஒழிப்போம் என்றார். இந்த 3ம் ஒழிந்திருக்கிறதா?
மோடியின் பெயரில் பனியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. பார்ப்பனீயத்திற்கு எதிராக அன்றைக்கு பேசிய முதல் ஆண்டி இண்டியன் பெரியார் தான். கோ பேக் மோடி என்று முன்பு கூறினோம். இப்போது நோ மோர் மோடி என்று கோசமிடவேண்டும் என்று நடிகர் பூ ராமு பேசினார்

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆர்.எஸ்.எஸ் வாரிசாக செயல்படும் எடப்பாடி அரசு! - டி.கே.ரங்கராஜன்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் செய்த பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான், இனி எக்காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அறிவித்தார். பின்னர் வந்த தேர்தலில் மோடியா? இல்லை இந்த லேடியா? என்று பிரச்சாரம் செய்தார். அவர் மறைவின் மூலம் ஆட்சியை பிடித்த எடப்பாடி இன்று அம்மாவின் வாரிசு என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படுவதில்லை. அதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ்.வாரிசாக செயல்படுகின்றனர். அதிமுக கொள்கையில் சிறிதும் ஒன்றாக செயல்பாடாத கட்சியுடன் கூட்டணியில் உள்ளார். இவர்கள் கூட்டணியில் இருப்பதற்கு ஊழல் மிக முக்கிய காரணாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்...

இந்த நாடு சிரிப்பாய் சிரிக்கிறது - கரு. பழனியப்பன்


தமிழன் பெருமையை தமிழ்நாட்டில் பேச முடியவில்லை. திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தான் அடுத்த தலைமுறை வாழும். இல்லையெனில் எல்லாம் டிரவுர் கார்கள் தான் ஆள்வார்கள். நம்மை பார்த்து ஆண்டி இண்டியன் என்கிறார்கள். உண்மையிலேயே நாங்கள் தான் இண்டியன். அவங்க தான் ஆண்டி இண்டியன். மோடி எடப்பாடி ஆட்சியை பார்த்து இந்த நாடு சிரிப்பாய் சிரிக்கிறது. எல்லாம் மேல் இருப்பவர் (மோடி) பார்த்துக்கொள்வார் என்று இருக்கிறார். மேல இருப்பவரை கீழே இறக்கினால்;, கீழே இருப்பவர் இன்னும் கீழே போய்விடுவார்.
நான் இந்து, கிறிஸ்துவன், முஸ்லீம் என்ற வேறு பாடு பார்ப்பதில்லை என்று இப்போது மோடி பேசுகிறார். தேர்தல் வந்தால் ஓட்டு வாங்க இவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியார், அண்ணா படத்தை போட்டு இப்போது இந்துத்துவா வாதிகள் ஓட்டு கேட்கிறார்கள். பாஜக காரனோட அதிமுக காரன் பள்ளிவாசல் பக்கம் ஓட்டு கேட்க போனால் விரட்டாமல் என்ன செய்வார்கள். மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக உள்ளார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது நாடாளுமன்ற படிக்கட்டுக்களை தொட்டு கும்பிட்டார். ஆனால் நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் பங்கேற்றது குறைவான நாட்களே. வாஜ்பாயை ரைட் பெர்சன் இன் ராங் பார்ட்டி என்றார்கள். அவர் ராங் பெர்சனாக இருந்ததால் தான் ராங் பார்ட்டியில் இருந்தார் என்று ஏன் புரியாத மடையர்களாக இருக்கிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா என்றார்கள். மேக் இன் இண்டியா என்றார்கள். டிஜிட்டல் இந்தியா என்றார்கள். எந்த இந்தியாவையும் காணவில்லை. எனவே புதிய இந்தியாவை காண வெங்கடேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கரு பழனியப்பன் பேசினார்