செவ்வாய், 7 டிசம்பர், 2021

1971-ம் ஆண்டு போரின் சிறந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிரெனேடியர் படைப்பிரிவின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


 பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் (கௌரவ கேப்டன்) யோகேந்திர சிங் யாதவ், திருமதி ஹோஷியார் சிங் மற்றும் ராணுவ செயலாளரும் கிரெனேடியர்ஸில் கர்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சிரோஹி ஆகியோருடன் இணைந்து பரம் வீர் சக்ரா விருதாளர் கர்னல் ஹோஷியார் சிங்கின் 23-வது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது உண்மையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புனிதமான தருணம் ஆகும்.

புகழ்பெற்ற போர் வீரரும், அதிகளவில் வீர விருதுகள் வென்றவருமான கர்னல் ஹோஷியார் சிங், 1971 போரில் படைப்பிரிவு தளபதியாக பணியாற்றினார். தனது துணிச்சலான வீரர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி ஷகர்கர் செக்டார் பகுதியில் பசந்தர் ஆற்றின் குறுக்கே ஜர்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ இடத்தை கைப்பற்றினார்.

எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த படுகாயம் அடைந்தாலும், போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை மேஜர் ஹோஷியார் சிங் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

இந்த கடும் போரில் மேஜர் ஹோஷியார் சிங் தனது தனிப்பட்ட பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்து, இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளுக்கு இணங்க, கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு வீரத்தையும் தீரத்தையும் வெளிப்படுத்தினார், அதற்காக அவருக்கு மிக உயர்ந்த வீர விருதான “பரம் வீர் சக்ரா” வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற புனிதமான நிகழ்வில் ராணுவ அதிகாரிகள் மற்றும் கிரெனேடியர்ஸ் படைப்பிரிவின் வீரர்கள் கலந்து கொண்டனர். 1971-ம் ஆண்டு போரின் சிறந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை, மோவ், ஜபல்பூர், பாலம்பூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் கிரெனேடியர் படைப்பிரிவின் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக