ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. - கி.வீரமணி

 கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்ற தந்தை பெரியார் எங்கே?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திராத சங்கராச்சாரியார் எங்கே?. -  கி.வீரமணி

இந்தப் பொது ஒழுக்கத்துக்கு ஊறுவிளைவித்த சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து வாங்கி நீதிபதி தீர்ப்பு சொல்லலாமா?

சென்னை மியூசிக் அகாடமியில் 24.1.2018 இல் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் - சமஸ்கிருத அகராதியை அன்றைய ஆளுநர் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.

அதுபோது, அந்த நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் கலந்துகொண்டார். தமிழ்த் தாய் வாழ்த்தின்போது, ஆளுநர் உள்பட அவையினர் அனைவரும் எழுந்து நின்றனர்.

விஜயேந்திரர் மட்டும் எழாமலே கண்ணை மூடிக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். நாட்டுப்பண் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார்!

பலத்த கண்டனங்கள் பரவலாக எழுந்தன

இதுபற்றி அப்போதே பலத்த கண்டனங்கள் பரவலாக எழுந்தன.

அதற்கு அவர் சார்பில் அப்போது தரப்பட்ட விளக்கம், அவர் தியானத்தில் (தமிழ் வாழ்த்துப் பாடும்போது மட்டும்) இருந்தார்; பிறகு மவுனத்திலிருந்து மீண்டதனால், 'தேசிய கீதம்' இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார்.

இந்த விளக்கம் எப்படிப்பட்ட வினோத, விசித்திர விளக்கம் என்பதுபற்றி பலரும் தங்கள் கண்டனக் குரலை எழுப்பினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில்...

இப்போது அதையொட்டி சென்னை உயர்நீதிமன் றத்தில் வந்த ஒரு வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பு வழங்கி, இராமேசுவரம் காஞ்சி மடம் முன்பாக  போராட்டம் நடத்தியவர்கள்மீது அன்றைய அரசு போட்ட வழக்கை ரத்து செய்துள்ளார். அவர் வழங்கிய தீர்ப்புரையில் கூறியுள்ள பல கருத்துகள் சமூகத்தின் பொது ஒழுக்கத்தையும், பொது அவையில் கூடுவோர், கலந்துகொள்வோர் காக்கவேண்டிய பண் பாட்டையும் வளர்ப்பதற்குப் பதிலாக சிதைத்து சீரழிப் பதாகவே இருப்பதால், அது கண்டனத்திற்குரியதாகும்.

பொது ஒழுக்க விரும்பிகளால் ஏற்கத்தக்கதா?

''தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய ஆணையில், வாழ்த்தின்போது எழுந்து நிற்கவேண்டுமென எந்த நிர்வாக உத்தரவும் இல்லை'' என்று கூறியிருக்கும் கருத்தும், அப்படிக் கூறுவதன்மூலம் காஞ்சிமட சங்கராச்சாரியாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறல்ல என்று அவரது செய்கைக்கு ஒரு விசித்திரமான விளக்கம் தருவதும் எவ்வகையில் பொது ஒழுக்க விரும்பிகளால் ஏற்கத்தக்கது?

ஒரு ஆணையில், நாட்டுப்பண் இசைக்கும்பொழுது எழுந்திருக்காவிட்டால், அதுபோல் இதில் இல்லை என்று கூறுவது விந்தையான ஒப்பீடு விளக்கம் அல்லவா?

இறைவணக்கம் போன்றதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்கிறார்! எழுந்து நிற்கத் தேவையில்லை என்கிறார் நீதிபதி!

பக்தர்கள்கூட இந்த விசித்திர விளக்கத்தை ஏற்க மாட்டார்கள்.

கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது இறை வணக்கம் போன்றதே என்று கூறும்போது, 'கடவுள் வாழ்த்து' பாடும்போது - ஒரு பொது அவையில் - எல்லோரும் எழுந்து நிற்கும் பண்பும், அவை மரியாதையும் தேவையில்லை என்பதாகுமா?

மொழி வாழ்த்து அவையில் இசைக்கப்படும்போது, கண்ணை மூடிக்கொண்டு இருப்பது 'தியானம்' என்று கூறி, நியாயப்படுத்துவது - மீண்டும் 'அரைக்கால் சட்டை' பருவத்திற்கு மனித குலத்தை அழைத்துச் செல்லும் வழி ஆகாதா?

விஜயேந்திரரைக் காப்பாற்ற முயலும் கனம் நீதிபதி!

மற்றொரு வாதத்தையும் தீர்ப்புரை வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கூறுகிறார்!

''ஆன்மீகவாதிகள் பிரார்த்தனையின்போது தியான நிலையில் அமர்ந்திருப்பார்கள்; தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல் என்பதால், அப்பாடல் இசைக் கும்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விஜயேந் திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தேசிய கீதம் பாடும்போது மட்டும் எழுந்து நின்றார் - தியானம் முடிந்துவிட்டதால்'' என்ற விளக்கம்மூலம் - விஜயேந்திரரைக் காப்பாற்ற முயலும் கனம் நீதிபதி அவர்களே,

ஆன்மீகவாதிகள் கண்களை மூடிக்கொண்டு தியானம் - தியான நிலை கலைந்த பிறகு எழுந்து நிற்பது என்ற விளக்கம் எல்லாம் கூறுவது,

'சட்டத்தின்முன் அனைவரும் சமம்' என்று கூறும் அடிப்படையையே அடித்து நொறுக்குவதாக இல்லையா?

'அவை மரியாதை செய்யும் அவமதிப்பாளர்கள்'

'நாங்கள் அவையில் அமர்ந்தே இருப்போம்; எழுந்து நிற்கமாட்டோம்' என்று சிலர் இருந்தால், அவர்களது நடத்தையை 'அவை மரியாதை செய்யும் அவமதிப் பாளர்கள்' என்று அவையினர் அழைக்கமாட்டார்களா?

பொது மரபு, நயத்தக்க நாகரிகத்திற்கு அது முரணாக அமையாதா?

தள்ளாத 95 வயதிலும்கூட, உட்கார்ந்து பேசும் வழமை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இறை வணக்கம் பாடும்போது இரண்டு பேரைப் பிடித்துக் கொண்டு மேடையில் எழுந்து நிற்கும் பண்பாட்டை, அவரது கொள்கையைக் கடுமையாக எதிர்ப்போர்கூட பாராட்டியிருக்கின்றனரே!

அது ஒரு மரியாதைக்குரிய பண்பு அல்லவா!

தீர்ப்பளித்த நீதிபதிக்கே வெளிச்சம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகள் அமர்வதற்கு வரும்போது, அத்துணை வழக்குரைஞர் களும், பணியாளர்களும், வழக்காடிகளும் எழுந்து நின்று மரியாதை காட்டும் பண்பு - சட்டப்படி - அபராதம் தண்டனைக்குட்பட்ட நடவடிக்கை பயத்தாலா?

நீதிபதிகளை அவையோர் கும்பிட்டு 'வணக்கம்' செலுத்துவதும், நீதிபதிகள் கும்பிட்டு வணக்கம் செலுத்தி அமர்வதும் எந்த விதிகளின் அடிப்படையில்? பண்பாட்டு, பொது ஒழுக்கம் காரணமாகவா? தீர்ப்பளித்த நீதிபதிக்கே வெளிச்சம்.

''எழுந்து நிற்பது மட்டும் மரியாதை அல்லவாம்!'' இதையே நாளைக்கு நீதிமன்றங்களில் வழக்குரை ஞர்களோ, வழக்காடிகளோ செய்தால், அது பொது ஒழுக்கக் கேடாகாதா?

எனவே, பொது ஒழுக்கத்தை, உயர் பண்புகளை வளர்க்க உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் அமையவேண்டுமே தவிர, மாறாக அமைவது எவ்வகையில் சரியானதாகும்?

அவை நாகரிகம் தெரியாத ஆசாமிகள்

பொது அவையின் மாண்பும், மரியாதையும் அடிப்படையானவை என்னும்போது, அவைகளைத் ''தியாகம்'' செய்து தீர்ப்பு வழங்கியது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல -

''கலாச்சாரத்தை மதிக்கும் நாம், இப்படித்தான் மரியாதை செய்யவேண்டுமென எப்படிக் கூற முடியும்?'' என்ற கேள்வி மிகவும் மோசமான கேள்வி அல்லவா?

அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது இரங்கல் கூறுவதற்கு எழுந்திருக்காவிட்டால், அப்படி மாறுபாடாக நடந்துகொள்பவர்களை அவை நாகரிகம் தெரியாத ஆசாமிகள் என்று மற்றவர்கள் அருவருக்கமாட்டார்களா?

காஞ்சி சங்கராச்சாரியார்கள் எப்படி கொலை வழக்கில் கூட 84 பிறழ் சாட்சியங்களால் விடுதலை யானார்கள் என்பதுபற்றி அண்மையில்கூட 'டெக்கான் கிரானிக்கல்' நாளேட்டில் மோகன் குருசாமி எழுதியதை நாட்டோர் படித்துள்ளனரே!

அவரது ஆன்மிகம் இப்படி விமர்சிக்கப்படும் நிலையில், இப்படி ஒரு காப்பாற்றுதலா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக