செவ்வாய், 7 டிசம்பர், 2021

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’ உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

 நாகாலாந்தில் இராணுவத்தால் அப்பாவி தொழிலாளர்கள் - பொதுமக்கள் 21 பேர் சுடப்பட்ட கொடுமை!

‘‘இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்குமீறிய 

அதிகாரச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!’’

உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தேவை! - கி.வீரமணி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் உள்ளது ‘ஓட்டிங்’ என்ற கிராமம்.

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் கோர மரணம்

இந்தக் கிராமம் கோன்யாக் நாகர் சமூகத்தினர் பெரிதும் வாழும் கிராமம் ஆகும். சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் பணி முடித்து ஒரு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த வேனை நோக்கி இராணுவத்தினர் தொடர்ந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அந்த ஊர் கிராமத் தொழிலாளிகள் - அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும், அதைத் தொடர்ந்து  அவர்களது ஆத்திரத்தின் வடிகாலாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மேலும் ஏழு பேர் உயிரிழந்து, பலியானோர் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்திவிட்டது நெஞ்சங்களில் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறது!

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று

அப்பாவிகளான சுரங்கத் தொழிலாளர்களும், ஊர்ப் பொதுமக்களும் இப்படி சொந்த மண்ணிலேயே, இராணுவத்தின் அலட்சியப் போக்காலோ - கவனக் குறைவான அவசரப்பட்ட நடவடிக்கைகளாலோ உயிரிழந்துள்ள கொடூரம் நாகாலாந்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிரான ஒரு மனப்போக்கை அந்த மக்களிடையே உருவாக்கியிருப்பது - அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல; பெரிதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.

திருப்தி அளிக்காத உள்துறை அமைச்சரின் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் அவையில் இதுபற்றி முழுமையாக விவாதிக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபற்றி விளக்கம்கூறி, நடந்த சோக சம்பவத்திற்காக அவையில் வருத்தம் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வுக்கு இராணுவம் மன்னிப்புக் கோரியிருக்கிறது என்றெல்லாம் கூறினாலும்கூட, அவரது விளக்கம், வருத்தத்தைவிட, நடந்துள்ள கொடூரத்தை நியாயப்படுத்துவதே பிரதானமாக உள்ளது என்ற எண்ணத்தை கேட்போருக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது. SIT என்ற அமைப்பின்மூலம் பொது விசாரணைக்கும் ஏற்பாடாகியுள்ளது.

அதிகாரமும், இராணுவமும் மக்களின் மனப்புண்ணை ஆற்றாது

இராணுவத்தின் மன்னிப்போ, அதன்மீது அத்துமீறியதற்கான வழக்கோ வடகிழக்கில் உள்ள மாநில மக்களின் இது மாதிரியான பிரச்சினைக்குச் சரியான நிரந்தரத் தீர்வாகாது; அமைதியை ஏற்படுத்தி, மக்களின் அன்பையும், நல்லெண்ணத்தையும் பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, இராணுவ நடவடிக்கைகளால் - வெறும் அதிகாரம், சட்டங்களைக் காட்டினாலும் அம்மக்களின் மனப்புண்களை ஆற்ற அவை ஒருபோதும் பெரிதும் உதவாது.

இந்த நிகழ்வு வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வேதனையான துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதைவிட, அதைக் கிளறிவிடக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

நாகாலாந்தின் முதலமைச்சர் நெப்போரியோ அவர்களும், மேகாலாயாவின் முதலமைச்சர் கான்ராட் சங்கமா அவர்களும் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளை ஏற்பதே நிரந்தர பரிகாரத்திற்கும், அமைதி திரும்பி மக்களாட்சியின் மாண்புகளை அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அதிக அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும்

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமலில் உள்ள இராணுவத்தின் எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்ட சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அவ்விருவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் ஏற்பதே சிறப்பான முழு அமைதி திரும்பி, வடகிழக்கின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவிடக் கூடும்.

‘’Armed Forces (Special Powers) Act - AFSA’’ - இராணுவத்திற்கு அதிகாரம் தந்துள்ள இந்த சட்டம், தொடர்ந்து அங்கே அமலில் இருப்பது. ஏற்கெனவே அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசத்தின் மூன்று மாவட்டங்கள் அசாம் மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் - ஆகியவைகளில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது என்ற பெயரில் பாதுகாப்பைத் தர, இராணுவம், துப்பாக்கிச் சூடு உள்பட நடத்திக் கொள்ளும் அதிகாரத்தை தருகின்ற சட்டமாக உலவுவதுபற்றி இணக்கமாகச் சிந்தித்து, சரியான முடிவை எடுத்தால், அது அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பெரிதும் துணை புரிவதாக அமையக்கூடும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடுகளை வழங்குவது அவசர அவசியமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக