வியாழன், 16 டிசம்பர், 2021

உண்மைத் தகவல் அடிப்படையிலான ஆராய்ச்சியின் மூலம் இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்


 உண்மைத் தகவல் அடிப்படையிலான ஆராய்ச்சியின் மூலம் இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்ய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். காலனிய கண்ணோட்டம் இந்தியாவின் கடந்தகால தகவல்களை சீரழித்துவிட்டதால், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்  மற்றும் தலைவர்கள் குறித்த கூடுதல் நூல்களைக் கொண்டு இந்திய வரலாற்றுக்குப் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திரப்பிரதேசத்தின் ஆட்சி மொழி ஆணையத் தலைவர் திரு யர்லகட லட்சுமி பிரசாத் எழுதிய நூலினை வெளியிட்டு உரையாற்றிய திரு நாயுடு, இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தகவல்களை இளைஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைப் பாடங்களை மனதில் பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தியர்களின் மனங்களில் பதிய வைக்கப்பட்ட பிரித்தாளும்  மனநிலையிலிருந்து இளைஞர்கள் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தேசக்கட்டமைப்புக்கு அவர்கள் பங்களிக்க வேண்டும் என்றார். 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மத்திய மாகாணத்தின் ஆளுநராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் திரு எடுப்புகாந்தி ராகவேந்திர ராவ் பற்றிய நூல்வெளியீட்டு நிகழ்ச்சியில், அவருக்குக் குடியரசு துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். ஆளுநராக இருந்த போது தாமே காதிப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதனை பிரபலப்படுத்திய ராகவேந்திர ராவ் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக  பணியாற்றினார் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக