வெள்ளி, 1 ஜூலை, 2022

க்ரிஷிபவனில் டிடி கிஷான் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்


 மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முயற்சியால், டிடி கிசான் தொலைக்காட்சி, புதுதில்லியில் உள்ள க்ரிஷிபவனில் படப்பிடிப்பு அரங்கில் அமைந்துள்ளது. இந்த அரங்கை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் செல்வி ஷோபா கரந்த்லஜே மற்றும் திரு கைலாஷ் சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்


முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் உடனடியாக கிடைக்காத, அவசர தேவைக்கான, உயிர்காப்பதற்கான, அத்தியாவசியமான மருந்துகளை 100% அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.  முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்துகள் எளிதாகவும், உரிய நேரத்திலும் கிடைப்பதை இது உறுதிசெய்யும். ஏ மற்றும் பி வகைக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், டி வகைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் கொள்முதல் நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.- ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா


 மத்திய சுகாதாரம் – குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அந்த ஆலையின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த மத்திய அமைச்சர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார். ஆலையின் கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்ட அவர், கட்டுப்பாட்டு அறை இயங்கும் விதம் குறித்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, உர உற்பத்தியில் தற்சார்பை அடைய கூட்டு முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்ததற்காக ஆலை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், 2022 கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதுடன், புதுச்சேரியின் கரீஃப் பருவத்திற்குத் தேவையான 7300 மெட்ரிக் டன்னில் ஏறத்தாழ 82 சதவிகிதம் அளவிற்கு இந்த ஆலையிலிருந்து விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தீர்மானம், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்



 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தீர்மானம், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. கிராமங்கள் தற்சார்பு அடைவதன் வாயிலாகத்தான் தற்சார்பு இந்தியா பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு/சுயவேலைவாய்ப்பு மற்றும் உள்ளூரிலேயே தொழில்முனைவோர் ஆவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுதான் நரேந்திர மோடி அரசின்  நம்பிக்கையாக உள்ளது என மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிராமின் உத்யாமி எனப்படும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான முன்னோடி திட்டமான கிராமப்புற பழங்குடியினர் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் கீழ், முதலாவதாக பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை  வழங்கி அவர் பேசினார்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - DR.S.ராமதாஸ்

 புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை

அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.