வெள்ளி, 31 மே, 2019

உதவி மின் பொறியாளர் பணிக்கு வெளி மாநிலத்தவர் நியமனமா? - வைகோ கண்டனம்

உதவி மின் பொறியாளர் பணிக்கு
வெளி மாநிலத்தவர் நியமனமா ?
வைகோ 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TNEB TANGEDCO) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் நேரடித் தேர்வு. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்னர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை டான்ஜெட்கோ நேற்று வெளியிட்டுள்ளது. உதவி மின் பொறியாளர்கள் 300 பேரில் 36 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றபோது, பொறியாளர் பணி இடங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து தேர்வு செய்திருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல் நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமம் ஆகும்.

2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வு ஆக வேண்டுமானால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை 2016, செப்டம்பர் 1 இல் சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது அதிமுக அரசு. இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி. தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் பணியமர்த்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது. அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 விழுக்காடு அயல் மாநில இளைஞர்கள். அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில் பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.

பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல.

தமிழக அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால் அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நூறு விழுக்காடு பணி வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

"அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்தும் பாடம் கற்கவில்லை”

”மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்ற அடுத்த நாளே சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்”
மு.க.ஸ்டாலின்
(தி.மு.க தலைவர் )


சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் வாக்காளர்களைச் சந்தித்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, “இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது” என்று வாக்குறுதி அளித்தார். அதை முன்னிறுத்தி வாக்கும் கேட்டார். ஆனால் முதலமைச்சரையும் மேடையில் வைத்துக்கொண்டு “சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த மாண்புமிகு நிதின் கட்கரி அவர்கள் பேசிய போது அதற்கு எதிர்ப்புக் கூட தெரிவிக்காமல், அதையும் ஆமோதிப்பதைப் போல முதலமைச்சர் அமைதி காத்தார். அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களும் மவுனமாகவே மேடையில் அமர்ந்திருந்தார். இப்போது அது தொடர்கிறது.

தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு - குறிப்பாக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு - எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். ஒரு பாராளுமன்றத் தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும் - எரிச்சலிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூடக் கொடுக்காமல் அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. “பதவி” கேட்ட அ.தி.மு.க அரசை “பக்குவமாக” மிரட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உடந்தையாக இருக்க வைத்துள்ளது. ஆகவே, எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கி விட்டது என்பதையே இந்த மேல்முறையீடு காட்டுகிறது.

விவசாயிகள், தாய்மார்கள், அப்பாவி மக்கள் என்று அனைவரையும் காவல்துறையை வைத்து மிரட்டியது - அடக்குமுறை மூலம் இந்த சாலைத் திட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு எடுத்த முயற்சிகளை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ஆனாலும் கூட அ.தி.மு.க அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் “மனம்” திருந்தவில்லை. பதவியேற்று கையெழுத்திட்ட பேனாவின் மை காய்வதற்குள் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு துடிப்பதையும், அ.தி.மு.க அரசு அதற்கு சரணாகதி அடைந்து நின்று - தூபம் போடுவதையும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை “பரிசாக” மக்கள் கொடுத்தும், இன்னும் இரு அரசுகளுமே பாடம் கற்கவில்லை. தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும்- தமிழக மக்களை வஞ்சித்து பழி வாங்க துடிப்பதையும் கைவிடவில்லை. “அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் செயல்பாடு பதவியேற்ற அடுத்த நாளே தமிழ்நாட்டிற்கு விரோதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியுள்ள இந்த சாலைத் திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை யோசிக்க மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் முன்வரவேண்டும் என்றும், முரட்டுத்தனத்தின் மூலம் மக்களை அடக்கி விடலாம் என்பதை கைவிட்டு - ஆக்கபூர்வமாக வழிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிட முன்வந்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு போலி சொந்தம் கொண்டாடிய டாக்டர் அன்புமணி, இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை, மாநிலங்கள் அவை-அமைச்சர் பதவிக்காக, கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறாரா அல்லது எதிர்ப்பு காட்ட கூட்டணியிலிருந்து பா.ம.க விலகும் முடிவை எடுக்கப் போகிறாரா? என்று பாதிக்கப்படும் மக்கள் கேட்கிறார்கள்!

புதன், 29 மே, 2019

பாட்டாளி இளைஞர்களும்!!! படைக்கப்படவுள்ள புதிய வரலாறும்!!! - ராமதாஸ் மடல்

பாட்டாளி இளைஞர்களும்!!!
படைக்கப்படவுள்ள புதிய வரலாறும்!!!
மருத்துவர் ராமதாஸ் மடல்
(பாமக நிறுவனர்)


அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே!


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை திமுகவும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாதது தான் அக்கூட்டம்.

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்த வில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம். தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

1980-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக, ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கியக் கூட்டணியை திமுக -காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களை திமுக அணி கைப்பற்றியது. அதிமுகவுக்கு கோபிச்செட்டிப்பாளையம், சிவகாசி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. திமுக அணி இப்போது வாங்கியதை விட அதிகமாக 1980-ஆம் ஆண்டில் 55.89% வாக்குகளைப் பெற்றது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அணிக்கு 40.15% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அது தான் தேர்தல் அரசியலில் எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தோல்வி... கடைசி தோல்வியும் அதுதான்.

ஆனால், அதை புரிந்து கொள்ள முடியாத திமுக- காங்கிரஸ் கூட்டணி, அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டதாக கூத்தாடியது. எம்ஜிஆர் அரசை கலைக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது. அதன்படியே எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவதாக திமுக கனவு கண்டது. ஆனால், அத்தேர்தலில் திமுக 37 இடங்களில் மட்டுமே பிடித்து தோல்வியடைந்தது. மாறாக, ஆட்சி கலைக்கப்பட்ட 3 மாதங்களில் அதிமுக 129 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

அதேபோல், 1989-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிமுக உடைந்ததைப் பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதே ஆண்டு நவம்பரில் நடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் திமுக அணி தோல்வியடைந்தது. அதுமட்டுமல்ல.... இப்போது வெற்றி பெற்றுள்ள திமுக அணி, 2014 மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியதையும், அத்தேர்தலில் திராவிடக் கட்சிகளின் துணையில்லாமல் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வென்றதையும் யாரும் மறந்துவிட முடியாது. இந்த வரலாறுகளை நான் பட்டியலிடுவதன் நோக்கம், மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் அடுத்த சில மாதங்களிலேயே தமிழக அரசியல் சூழலை தலைகீழாக மாற்றிவிட முடியும் என்ற சாத்தியமான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

‘‘விழுவதல்ல தோல்வி. வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி’’ என்பது நம்பிக்கை மொழி. எவ்வளவு வேகமாக விழுந்தாலும், விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வெற்றிக்கோட்டைக் கடப்பது பாட்டாளிகளின், குறிப்பாக பாட்டாளி இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிக் கிடக்கும் வழக்கமாகும். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர்கள் தீர்மானித்து விட்டால், அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் அதில் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க முடியும். இது சாத்தியமானது தான்.

தமிழ்நாட்டிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு திருநாளாக இருந்தாலும், வண்டலூரில் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடாக இருந்தாலும், சேலத்தில் தொடங்கி விழுப்புரம் வரை நடத்தப்பட்ட 8 மண்டல மாநாடுகளாக இருந்தாலும் அவற்றில் பங்கேற்றவர்களில் 90 விழுக்காட்டினர் இளைஞர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் வேராகவும், மரமாகவும் அனுபவம் மிக்க மூத்தவர்கள் திகழும் நிலையில், அதன் கிளைகளாகவும், இலைகளாகவும், மலர்களாகவும், கனிகளாகவும் நிறைந்திருப்பவர்கள் இளைஞர்கள் தான் என்பதில் எனக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை. இனிவரும் காலங்களிலும் அத்தகைய ஐயம் எனக்கு ஒருபோதும் ஏற்படாது.

பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு. இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம். இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக் காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும். இளைஞர் படையை புதிய எழுச்சியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்று நடத்துவார். உங்களை வழி நடத்த நான் எப்போதும் களத்தில் காத்துக் கொண்டிருப்பேன்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? - வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்
19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்?
வைகோ கேள்வி
(பொதுச்செயலாளர் மதிமுக)


காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டில்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது. தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவிலல்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

கர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத் திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது. மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

“தி.மு.கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், குடிநீர் இன்றி தவிக்கும் தாய்மார்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், டேங்கர் லாரிகள் மூலம் ஆங்காங்கே குடிநீர் வழங்கிட வேண்டும்”
மு.க.ஸ்டாலின் அறிக்கை
(திமுக தலைவர்)


தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் “ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்” என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும், மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்காததாலும் அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. “கமிஷன், கரெப்சன், கலெக்சன்” என்ற ஊழல் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி- குடிநீர் திட்டங்களிலோ, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களிலோ எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. பொறுப்பற்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்வியால் கோடை வெயிலில் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக தாய்மார்கள் அலையும் கொடூமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பருவமழை தவறியவுடன் குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கவும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை முறைப்படி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு மோசமாகத் தவறி விட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பெறவும் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் முயற்சிக்கவில்லை. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதிலோ, நெம்மேலி கடல்நீர் குடிநீர் திட்டத்திலிருந்து 100 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது என்று சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிப்பதிலோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. கடலோர மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை,போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருந்தால் கூட இவ்வளவு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்திருக்க முடியும். எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் ஊழல் ராஜ்யத்தை நடத்துவதில் மட்டுமே அதிமுக அரசு அதிகமான கவனம் செலுத்தியதால் இன்று ஒரு குடம் தண்ணீருக்கு கால் கடுக்க நின்று - அதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். குடிநீருக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை மறியல்களும், போராட்டங்களும், குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஆனால் கோட்டையில் இருக்கும் முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல்- குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமாக இருக்கிறார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

இந்நிலையில் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றிட முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளை, அதிகாரிகளுடன் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனே ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் படும் இன்னல்களை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்க முடியாது.

ஆகவே கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே குடிநீர் இன்றி அவதிப்படும் தாய்மார்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கிட முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

செவ்வாய், 28 மே, 2019

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! 
தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்!
போராட்டங்களால் அரசியல் தலையீட்டை வலுப்படுத்துவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

"17வது மக்களவைத் தேர்தல் அளித்துள்ள அனுபவத்திலிருந்து பாடம் கற்போம் என்றும் தவறுகளை சரி செய்து, சரிவிலிருந்து மீள்வோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்றுள்ளது. போராட்டங்கள் மூலமாக அரசியல் தலையீட்டை வலுப்படுத்துவோம்" எனவும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் புதுதில்லியில் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 17ஆவது மக்களவைக்கான தேர்தல்களில் பெரும்பான்மையுடன் தீர்மானகரமானதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் ஒரு சில மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களில் அநேகமாக எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை இத்தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இத்தேர்தலில், தாங்கள் வலுவாக இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே, கடும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்கள் மீது திணித்த கடும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்கள் கவனம் செல்லாத விதத்தில், பாஜக, மக்களின் கவனத்தை, மிகவும் வெற்றிகரமான முறையில் திசைதிருப்பி இருக்கிறது.

மதவெறி, தேசியவெறி ஆகியவற்றைச் சுற்றி அது கட்டி யெழுப்பிய வெறுப்புப் பிரச்சாரங்களும், அத்துடன் தாங்கள்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று அவிழ்த்துவிட்ட பிரச்சாரங்களும் மக்கள் நாள்தோறும் எதிர்கொண்ட அனைத்துவிதமான பிரச்சனைகளிலிருந்தும் கவலைப்படாத விதத்தில் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டது. இதற்கு, மோடியைப் பல்வேறு காரணிகள் மூலமாக தூக்கிப்பிடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் உதவியுள்ளன.

தொழில்நுட்பத்தையும் அதன் சாதனங்களையும் மிகவும் நுட்பமானமுறையில் பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் செயல்படும் புள்ளிவிபர விற்பன்னர்களின் உதவியோடு, சமூகத்தின் அடிமட்டம் வரை சென்று வெறியூட்டும் வகையில் மக்களுக்கு செய்திகளை அனுப்பிய செயல்பாடு உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.

இதற்காக ஊடகங்களின் பல பிரிவுகளை பாஜக தன்னுடைய பணபலத்தால் தன்வயமாக்கிக் கொண்டது. மோடி தூக்கிப் பிடிக்கப்படுவதற்கு, தேர்தல் ஆணையத்தின் பங்கும் ஒரு காரணியாக இருந்தது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்புகளின் மிகப்பெரிய வலைப்பின்னலின் உதவியோடு மேற்கண்ட செயல்பாடு நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாக்காளர் தளம் மிகவும் வலுவாக இருந்த இடங்களிலேயே ஒரு மிகப்பெரிய சரிவினைச் சந்தித்துள்ளது. இத்தகைய சரிவிற்கு இட்டுச் சென்ற காரணிகள் எவை என்பது குறித்த சில பிரச்சனைகளை அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. 2019 ஜூன் 7-9 தேதிகளில் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டம் இதுதொடர்பாக விவாதித்து, இத்தேர்தலில் பெற்ற அனுபவங்களை மிகவும் ஆழமான முறையில் பரிசீலிப்பதன் அடிப்படையில் முறையான படிப்பினைகளை வரையறுத்திடும்.

நாம் வலுவாக உள்ள மாநிலங்களில் இயங்கும் நம் மாநிலக்குழுக்களும், மத்தியக்குழுக் கூட்டத்திற்கு முன்பாகக் கூடி, கட்சியின் செயல்பாடுகள் குறித்து சுயவிமர்சன ரீதியாக மதிப்பீடுகளைச் செய்திடும். இவற்றின் அடிப்படையில் மத்தியக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தையும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக அரசியல் தலையீடு செய்யும் பலத்தையும் வலுப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான, சரி செய்யும் நடவடிக்கைகளை உருவாக்கிடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் இருவர், கேரளாவில் ஒருவர் 17வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திட்ட அனைவருக்கும் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் மிகவும் உக்கிரமான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு இடையில்தான் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களை வாக்களிக்கவிடாமல் வலுக்கட்டாயமாகத் தடுக்கப்பட்டதாக பெரிய அளவில் செய்திகள் வந்திருக்கின்றன. தேர்தலை ‘நேர்மையாகவும் நியாயமாகவும்’ நடத்த வேண்டும் என்று நாம் தேர்தல் ஆணையத்திடம் கூறி, அதற்கு அது அளித்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆதரவாளர்கள் இருவரையும், திரிபுராவில் ஒருவரையும் இழந்திருக்கிறோம். இவ்விரு மாநிலங்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. இவை, மதமோதல்கள் வெடித்திடுமோ என்கிறமிகவும் ஆபத்தான முனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியவுடனேயே ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. புதிய அரசாங்கம் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் என்றும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கிடும் என்கிற நரேந்திர மோடியின் பிரகடனத்திற்கு முரணாக இது அமைந்துள்ளது.

நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாத்தல், அரசமைப்புச் சட்ட நிறுவனங்களையும், மக்களின் உரிமைகள், குடிமைச் சுதந்திரங்களையும் பாதுகாத்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்சனைகள் மீது ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக வேண்டுகோள் விடுக்கிறது.

சனி, 25 மே, 2019

தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின்

“எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம்!”
-  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின்
அன்பு உடன்பிறப்புகளுக்கு,  உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
வரலாற்றுச் சிறப்புமிக்க - நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான  வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தால், தந்தை பெரியார்,  பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் ஆகியோரால் பண்படுத்தப்பட்டு - பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில்   சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும்   வெற்றியை அடைந்ததற்கு,  தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.
தோழமைக் கட்சிகளின் மதிப்புமிகு தலைவர்கள் கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்துகளைப் பரிமாறி மனமகிழ்ச்சி  கொள்கிறார்கள்.
ஊடகங்களிடம் வெற்றிச் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும், “தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகங்களே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம். தோழமைக் கட்சிகளை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கு இந்தியாவிலேயே முதன்மையானவர் என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். தனது மாநிலத்திற்குள் பா.ஜ.க. நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் வலுவாக இருப்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது” என மனம்திறந்து தெரிவித்திருக்கிறார்
கள்.
ஆங்கில ஊடகங்கள் - அரசியல் நோக்கர்கள் என அனைத்துத் தரப்பிலும் இதே கருத்து எங்கணும் எதிரொலிக்கிறது.
திராவிட இயக்கத்தை அழிக்க,  எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும்,  இங்கே எடுபடாது  என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு.
தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.கழகமும் கூட்டணியும் 38 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களைக் கழகம் கைப்பற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது.
1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது.
அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது, தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும். இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும்-அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே  புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை.
நமக்கான பெரும்பணிகள் நிறைய  காத்துக் கொண்டு இருக்கின்றன.
மக்கள் நம் மீது அசையா நம்பிக்கை வைத்து அளித்துள்ள இந்த மகத்தான வெற்றிகளுக்காகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் அனைத்தும்,நம்மை  நாளும் வளர்த்தெடுத்து - நல்ல வழிகாட்டி -குறைவின்றி நெறிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்களுக்கு உரியவை. அவரிடம் நான் கற்றுக்கொண்டது, உழைப்பு, ஓயாத உழைப்பு. அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களும், “ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு..உழைப்பு..” என்று மகிழ்ந்து பாராட்டினார். அதனைவிடப் பெரிய பதவியோ பட்டமோ வேறேதும் இருக்க முடியாது.
தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும்-கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் - வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயகரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் ; மக்களவைத் தேர்தல்  மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.
பொய் நெல்லைக் குத்தி, புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை,  வாக்கு எனும் அகப்பைக் கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். என்றும் தங்கள்
நம்பிக்கைக்குரிய இயக்கம் - எப்போதும் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கம்  தி.மு.கழகம்தான் என்பதை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து நிரூபித்திருக்கிறார்கள்.
பெருவெற்றியையும் படுதோல்விகளையும் சமமாகவே பாவித்து எதிர்கொண்டு எத்தகைய நெருக்கடி நெருப்பாற்றிலும் எதிர்நீச்சல் போட்டு கரையேறும் அரிய ஆற்றல் கொண்டது தி.மு.கழகம். அதனால்தான், அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களின் கூட்டணியை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு, மதநல்லிணக்கம்-சமூகநீதி- அனைவர்க்குமான வளம், நலன் ஆகிய கொள்கைகளில் உறுதியுடன் நின்று, மக்களை மட்டுமே நம்பி அவர்களின் நல்லெண்ணத்தைச் சார்ந்து நமது கூட்டணியின் இலட்சியப் பயணம் தொடர்ந்தது.
மத்திய-மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும்  தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர்.
பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரச்சாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக - சகோதரனாக - குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர்.
தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.
மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.
நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல்,  இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.
ஆட்சியாளர்களின் அதிகார வரம்புமீறல்களை எதிர்கொண்டு, சரியான - தெளிவான - உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கியப் பங்குதாரர்கள்.
அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்த நவீன உலகத்தில்,  தேர்தல் களத்திற்கு இணையாக சமூக வலைத்தளங்கள் இடையறாமல் செயலாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் நமக்கு எதிராகப் பரப்பப்பட்ட வஞ்சக அவதூறுகளை நஞ்சினும் கொடிய அக்கிரமங்களை முறியடித்து, கழகத்தின் சாதனைகளையும் அதனால் தமிழ்நாடு பெற்ற நன்மைகளையும் உடனுக்குடன் ஆழமாகப் பதிவு செய்து,  எதிரிகளின் முகத்தில் கரிபூசிய கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினரும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி சமூக வலைத்தளங்களில் கழகத்திற்கு ஆதரவாகச்  செயல்பட்டு வருவோரும் வெற்றிப்பாதையை அமைப்பதில் துணை நின்றார்கள்.
ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் - கொள்கை உறுதியுடன் - தோழமை உணர்வுடன் வகுத்த வியூகங்களும், அவற்றைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றி ஆற்றிய  சிறப்பான உழைப்புமே இன்று வெற்றியாக மலர்ந்திருக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன்பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர்  அவர்கள் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன்,  அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!
தலைவர் கலைஞர் அவர்களின் தலைவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தலைவர் தந்தை பெரியார் என திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களின் நினைவிடங்களில் வணக்கம் செலுத்தி, தி.மு.கழகக் கூட்டணிக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்கி
யிருக்கிறேன். அந்த முப்பெரும் தலைவர்களிடமும் கொள்கை உறவுடன் நெருங்கிப் பழகி, திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு காலமாகத் தன்னுடைய அரும்பெரும் பணியை ஆற்றி வரும் கழகத்தின் பொதுச்செயலாளர் - தலைவர் கலைஞர் அவர்கள்  இல்லாத நிலையில் தந்தையின் இடத்திலிருந்து வழிகாட்டும் பெருந்தகையாளர் - உடல் நலிவுற்றிருந்தாலும் உள்ளம் வலிமையான இனமானப் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, “உங்களைப் போன்றவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி வெற்றியுடன் வந்திருக்கிறேன்” என்பதைத் தெரிவித்து, அவரின் வாழ்த்துகளையும் பெற்றுள்ளேன்.
தேர்தல் களத்தின் வெற்றியுடன் நிறைவுகொள்பவர்கள் நாமல்ல. நம்மை அப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கவும் இல்லை.
எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு,நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு  நமக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக தி.மு.கழகம் ஓங்கி ஒலிக்கும்.
மக்களுக்கெதிரான  பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு  விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும் - பறிபோனவற்றை மீட்டெடுக்கவும்-ஜனநாயகம் காக்கவும்   அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.
மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.கழகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம்.
மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.
இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!
                                       

வெள்ளி, 24 மே, 2019

எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம். - தொல். திருமாவளவன்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்:
எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம்.
 
-       தொல். திருமாவளவன் அறிக்கை(MP)
நிறுவனர்- தலைவர்விசிக.)
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் மத்தியில் ஆட்சியமைக்கவிருக்கிறார். இப்படியொருநிலை நடந்துவிடக் கூடாதே என்பதுதான் அனைத்து சனநாயக சக்திகளின் பெரும் கவலையாக இருந்தது. எனினும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சிகள் யாவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான சூழல் அமையாததால் பாஜகவுக்கு எதிரான வாக்குவங்கி மானாவாரியாகச் சிதறிவிட்டது. இந்த நிலைமைதான், மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தலைமையிலான சங்பரிவார் கும்பலுக்கு அரும்பெரும் வாய்ப்பாக அமைந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. எனினும், வடஇந்திய மாநிலங்களில் நிகழ்ந்தைப்போல அல்லாமல் கர்நாடகாவைத் தவிர தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவால் ஆதாயம் பெற இயலவில்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வலுவாகப் பாடம் புகட்டியுள்ளனர். மக்களை ஏய்ப்பதற்கென இறுதிவேளையில் அவர்களின் கூட்டணி எவ்வகையிலும் பொருந்தாக் கூட்டணி என்பதை வெகுவாக உணர்த்தியுள்ளனர்.

அத்துடன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே,இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பணமதிப்பு அழிப்பு, நீட், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்த்து மோடிக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக இங்கே மோடி எதிர்ப்புஅலை படிப்படியாகக் கட்டமைக்கபட்டது. மேலும், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகிய சிறுபான்மையினரின் மோடி எதிர்ப்பும் இங்கே வலுவாக வேரூன்றியிருந்தது. இத்தகைய சூழல்தான் பாஜக- அதிமுக கூட்டணியைக் குப்புற வீழ்த்தியுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில், அனைத்துத் தரப்பு வாக்காளப் பொதுமக்களும் எனக்களித்த வெற்றியின்மூலம், எனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளையெல்லாம் முறியடித்துள்ளனர். எனவே,இந்த வெற்றியை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் யாவருக்கும் காணிக்கையாக்குகிறேன். அத்துடன், புதுச்சேரி உட்பட தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு வரலாறு காணாத வகையில் பெருவெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்ட இந்த தேசத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சனநாயகத்தையும் பாதுகாத்திடும் வகையில்  விடுதலைச்சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம் என வெற்றிச் சூளுரையாக உறுதியளிக்கிறேன்.


ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் - டி. டி. வி. தினகரன்

மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்!!!

- டி. டி. வி. தினகரன்



நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

வியாழன், 23 மே, 2019

வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி - வைகோ அறிக்கை

தமிழகம், திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி!
- வைகோ அறிக்கை


நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அண்ணா தி.மு.க. அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா தி.மு.க. அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அண்ணா தி.மு.க., அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.

வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

புதன், 22 மே, 2019

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்!

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு
வீரவணக்கம் செலுத்த 
அனுமதி மறுப்பது அநாகரிகம்!
தோழர் பெ. மணியரசன்
(தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்)

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அவ்வாலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் கடந்த ஆண்டு (22.05.2018) பேரணியாகச் சென்றபோது, தமிழ்நாடு அரசின் காவல்துறை திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. முன்கூட்டியே தீர்மானித்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தி, 15 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான பேர்களை படுகாயப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்த மறுநாளே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாங்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம். அத்துடன் உயிரிழந்தோர் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினோம்.

இன்று (22.05.2019), ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் முதலாமாண்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். உயர் நீதிமன்றமும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என வரம்பு விதித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுத்த இராசபக்சேவின் ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மையைத்தான் தமிழ்நாடு அரசின் இச்செயல் நினைவூட்டுகிறது. தூத்துக்குடி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களை நாகர்கோவிலிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மனித உயிரிழப்புகளுக்கு துக்கம் கடைபிடிக்கக்கூட அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசின் மனிதநேயமற்றச் செயலையும், அநாகரிகத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தங்கள் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க அறப்போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த வீரர்களுக்கும் – வீராங்கனைகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது!

சோவல் தொழிற்சாலை மூடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சோவல் தொழிற்சாலை மூடலுக்கு எதிராக போராடிய சிஐடியு மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் சிறையில் அடைப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


திருப்பெரும்புதூரை, அடுத்த மண்ணூரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சோவல் தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சோவல் தொழிற்சாலையில் உதிரிபாகம் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களை ஹவாசின் என்ற நிறுவனம் வழங்கி வந்தது. ஹவாசின் நிறுவனத்திற்கு ரூ. 30 கோடி பணம் வழங்க வேண்டியிருந்ததால், சோவல் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை ஹவாசின் நிறுவனம் எடுத்துச் செல்ல முயன்ற போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக சிஐடியு தலைவர்களும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய தொழிலாளர்களையும், சிஐடியு தலைவர்கள் எஸ். கண்ணன், இ. முத்துக்குமார் அவர்களையும் கைது செய்து அடைத்து வைத்து விட்டு, அதன் பிறகு தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் மூலம் அப்புறப்படுத்தி விட்டனர். பிறகு தோழர் இ. முத்துக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத, அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற இயந்திரங்களை திரும்பப் பெறுகிற விசயங்களில் நீதிமன்றம் தலையீடு செய்கிற போது கொடுக்கல், வாங்கல் வாங்கும் விவகாரமாக மட்டும் பார்க்காமல், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு, சமூகப் பார்வையும் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு கொரிய நாட்டு நிறுவனமான டாங்சன் மூடப்பட்டு 15 மாதங்களாகிறது. அங்கு வேலை செய்த 113 தொழிலாளர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதேபோன்ற அவலம் சோவல் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தொழிலாளர்கள் எதிர்த்து போராடியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு கார் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி, சட்டக் கூலி - பாதுகாப்பு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளை திடீரென மூடுவதும், வேலையிழந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் நடுத்தெருவில் நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டியும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைக் கூட கட்டாமல் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் மூடிவிட்டு இவற்றின் நிர்வாகங்கள் தப்பி ஓடிவிட்டன. இந்நிறுவனங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்போதும் வேலையின்றி தவித்து, அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறை ஆணையமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது வேதனையாக உள்ளது.

எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் இ. முத்துக்குமார் அவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர் மீதும், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும் புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் சோவல் தொழிற்சாலையில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹவாசின் நிறுவனம் எடுத்துச் சென்ற இயந்திரங்களை மீண்டும் தொழிற்சாலைக்குள் பொருத்தி தொழிலாளர்களுக்கு பணி வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொழிலாளர்களே தரமான உற்பத்தியை உருவாக்கித் தர தயாராகவிருப்பதால் தமிழக அரசும், தொழிலாளர் துறை ஆணையரும் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு தொடர்ச்சியான வேலை வழங்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தேர்தல் ஆணையம் செய்த சனநாயகப்படுகொலை! - தொல். திருமாவளவன் அறிக்கை

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு. 
தேர்தல் ஆணையம் செய்த சனநாயகப்படுகொலை! 
தொல். திருமாவளவன் அறிக்கை!


ஏப்ரல் 18, வாக்குப்பதிவு நாளன்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பொன்பரப்பி என்னும் கிராமத்தில் சாதிவெறியர்கள் தலித்துகளை வாக்களிக்கவிடாமல் தடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் வாக்களிக்க விரும்பி அன்றே கோரிக்கை விடுத்தனர். வேட்பாளர் என்கிற முறையில் திருமாவளவனாகிய நானும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து தடுக்கப்பட்ட வாக்களர்களில் ஒருவரான விஷ்ணுராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் 07.05.2019 அன்று ரிட் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை 16.05.2019 அன்று விசாரித்த நீதிபதிகள் திரு சி வி கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர், 21.05.2019 நாளுக்குள் அதுதொடர்பாக உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுமென தீர்ப்பளித்தனர்.

ஆனால், ஐந்து நாட்கள் கழித்து வரையறுக்கப்பட்ட நாளான மே21ஐ கடந்து 22ந் தேதி (இன்று), பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான ஒருசார்பு அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது. “நூறு விழுக்காடு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்காமல் ஒருவரும் விடுபடக்கூடாது” என்று பலநூறு கோடிகளைக் கொட்டி இறைத்துப் பரப்புரை செய்யும் தேர்தல் ஆணையம், 
பொன்பரப்பியில் சாதிவெறியர்களால் தடுக்கப்பட்ட சுமார் 250 வாக்காளர்களின் வாக்களிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை ஏற்க மறுத்திருப்பது தேர்தல் ஆணையம் நடத்திய அப்பட்டமான ஒரு சனநாயகப் படுகொலையாகும். நேர்மை தவறி வெளிப்படையாக ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்திடமிருந்து சனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் தேர்தல்ஆணையம் இத்தேர்தலில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டுருக்கிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆளுங்கட்சி ஆதரவுநிலை எடுத்து செயல்படுவது அனைத்துவகை முறைகேடுகளுக்கும் வழிவகுக்குமென்பதையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பெருங்கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அமைதியான ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக 
துப்பாக்கிச் சூடு: தாக்குதல் தொடர்ந்தால் 
ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும்!
- ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதற்கிணங்க தூத்துக்குடி மக்கள் மீது இன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இன்றைய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஓர் இளைஞர் கொல்லப் பட்டிருக்கிறார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தூத்துக்குடியில் காவல்துறையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முதலமைச்சரும், அரசுத்துறை உயரதிகாரிகளும் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத பினாமி ஆட்சியாளர்கள் தூத்துக்குடி நகரத்திலும், அதையொட்டிய மீனவ கிராமங்களிலும் காவலர்களை நிறுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியிலும் காவல்துறையினரின் இத்தகைய ஒடுக்குமுறை காரணமான பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி இளைஞர் ஒருவரை கொன்றுள்ளனர். இதுவும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பதில் சந்தேகமில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், நீதித்துறையினர் அடங்கிய குழுவை அனுப்பி தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள காவல் படைகளை திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அடுத்தடுத்து 
அம்பலமாகும் சதி - அரசு விலக வேண்டும்!
- ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிரைப் பறித்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது யார் என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்பாராத தூண்டல் காரணமல்ல... அரசும் காவல்துறையும் தீட்டிய சதி தான் காரணம் என்பது இந்த உண்மைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புற்றுநோய் உற்பத்தி மையமாக விளங்கிய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22&ஆம் தேதியும், 23&ஆம் தேதியும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார்? என்ற வினாவுக்கு இன்று வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இந்த வினாவுக்கு பதிலளிக்க தமிழக அரசும், முதலமைச்சரும் மறுத்து வந்த நிலையில், துணை வட்டாட்சியர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைமை இயக்குனர், முதலமைச்சர் ஆகியோரைத் தாண்டி துணை வட்டாட்சியர் தான் அதிகாரம் படித்தவர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் மீது பழியை சுமத்தி தப்பிக்க நினைப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல... மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இந்த நாடகமும் அம்பலமாகிவிட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம் ஆகிய இரு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளில் தான் 12 பேர் கொல்லப்பட்டனர். எஃப்.சி.ஐ ரவுண்டானா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டால், அதை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அதிகாரிகளாக துணை வட்டாட்சியர் நிலையிலுள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி திரேஸ்புரம் பகுதிக்கு சேகர் என்ற தேர்தல் துணை ஆட்சியரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ராஜ்குமார் தங்கசீலன் என்ற தனி வட்டாட்சியரும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக அரசு கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட இவர்கள் தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு பதிலாக வேறு இடத்தில் இருந்த அதிகாரிகளிடமிருந்து ஆணை பெறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் பேரை பலிவாங்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு பொறுப்பான சேகர் என்ற தேர்தல் துணை வட்டாட்சியர் ஆணையிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், திரேஸ்புரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் இருந்த கண்ணன் என்ற துணை ஆட்சியர் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிடும் அதிகாரிகள் அப்பகுதியில் நிலவும் சூழலை ஆய்வு செய்து தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட வேண்டும். அதற்காகத் தான் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொறுப்பு அதிகாரியிடம் அனுமதி பெறாமல் எங்கோ உள்ள ஓர் அதிகாரியிடம் ஆணை பெற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுவது இமாலயப் பொய் ஆகும். இது மக்களையும், நீதித்துறையையும் முட்டாள்களாக்கும் முயற்சி ஆகும்.

அதேபோல், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரியான வட்டார வழங்கல் அலுவலர் கோபால் ஆணையிட்டதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதியில் எந்த கலவரமும் நடக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்த தாம் ஆணையிடவில்லை என்று அந்த அதிகாரி மறுத்துவிட்டார். துப்பாக்கிச் சூடு சதி அம்பலமானதால், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் பொறுப்பு அதிகாரியை தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் தாமே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன் என்பவர் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது அபத்தத்திலும் அபத்தமாகும்.

தூத்துக்குடியில் எந்த இடத்திலுமே துப்பாக்கிச்சூடு நடத்த வட்டாட்சியர்கள் ஆணையிடவில்லை என்று தெரிகிறது. ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் நிலையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்தின்படி காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, துணை வட்டாட்சியர்கள் ஆணைப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. திரேஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளின் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த துணை வட்டாட்சியர்கள் இந்த சதித் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்த சதி நாடகத்தில் அவர்களுக்கு பதிலாக வேறு இரு துணை வட்டாட்சியர்கள் புதிய கதாபாத்திரங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

எந்த வகையில் பார்த்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயல்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.


ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: தியாகிகளுக்கு வீரவணக்கம்! - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு:
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
- வைகோ அறிக்கை



இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1919 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த கொடூரப் படுகொலை போல், 2018 மே 22 ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த படுகொலைகள், தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கிறது.

ஆம்; ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முறையிட சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதி வழியில் நடந்த பேரணியின் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு.

கூட்டத்தைக் கலைப்பதற்காகத் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு அல்ல; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. எனவேதான், தலையிலும் வாயிலும் கழுத்திலும் குறிபார்த்துச் சுட்டனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, பயிற்சி பெற்ற, குறிபார்த்து சுடுகின்ற காவலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

ஸ்னோலின் வெனிஸ்டா, ஜான்சிராணி, தமிழரசன், ஜெயராமன், கந்தையா, காளியப்பன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், செல்வ சேகர், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், கார்த்திக், சண்முகம் ஆகிய 13 பேர் துடிதுடித்து உயிர் இழந்தனர். 
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலியானவர்களின் குடும்பங்களைக் காவல்துறை தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றது.

மக்களின் எழுச்சியைத் திசை திருப்ப, ஸ்டெர்லைட் ஆதரவு கூலிப்படையினர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கி, வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர்; இது திட்டமிட்ட முன்னேற்பாடு என்பது, அங்கிருந்த சிசிடிவி பட காட்சிகள் மூலம் அம்பலமாகி விட்டது. இந்த உண்மைகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு, தமிழக அரசையும் காவல் துறையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய சுற்றுச்சூழல் போராளி முகிலன் காணாமல் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவரைக் கண்டுபிடிக்கக் காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த ஓராண்டாக தூத்துக்குடியில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறையைத் தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் யாரும் அங்கே போகக் கூடாது; துண்டு அறிக்கைகள் வெளியிடக்கூடாது; சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்று அடுக்கடுக்காகக் காவல்துறை மிரட்டி வருகின்றது.

கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக் கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. நீதிமன்றத்திற்குச் சென்றால், ‘அரங்குக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துங்கள்’ என அறிவுறுத்தப்படுகின்றது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படையான பேச்சு உரிமை கருத்த உரிமையை மறுத்து, மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 22 ஆண்டுகளாக இடையறாது மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடி வருவதை தமிழக மக்கள் அறிவார்கள். மக்கள் நலனுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, எடப்பாடி பழனிசாமி அரசு எல்லா வகையிலும் துணை நிற்பதை மறைக்க முடியாது.

தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க, மே 22 தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்பதை, மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் - மு.க.ஸ்டாலின்

”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக அரசின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும் – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் திமுக அரசு அமைந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்”
திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின்


சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அதிமுக அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள். இந்தத் துப்பாக்கிச் சூடு -தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல- தமிழக மக்களை- ஏன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த அதிர்ச்சியில் உறைய வைத்த நாள் என்பதை நினைத்து வேதனை ப் படுகிறேன்.

100 நாட்களுக்கு மேல் அமைதியாகப் போராடிய மக்கள் மீது அராஜகத்தை ஏவிவிட்டு அந்தப் பகுதியையே ரணகளமாக்கியது அதிமுக அரசு. ஜனநாயகத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள போராட்டங்களையும் அமைதியான பேரணிகளையும் அடக்கி ஒடுக்கி விடலாம் என்று நினைத்த அதிமுக அரசை எதிர்த்து எரிமலை போல் எழுந்த கொந்தளிப்பைத் தமிழகம் கண்டது. ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினாலும், வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு விடுத்த கோரிக்கையையும் ஒப்புக்கொள்ளவில்லை. மக்களின் கடுமையான போராட்டத்தைக் கண்டு -எங்கும் இயல்பாகக் கிளம்பிய ஆவேசமான எதிர்ப்பினைச் சமாளிக்கமுடியாமல் இறுதியில், ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, இன்று வரை அந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை யும் பெறப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு ஓர் ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இன்னும் அவர்களுக்கு உரிய நீதியும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்து கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி கூட நடத்தவும் விடாமல் அதிமுக அரசு இரக்கம் இல்லாமல் ஆணவ எண்ணத்துடன் தடை போட்டு இருக்கிறது. ஒருபக்கம் ""நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடை"" இன்னொரு பக்கம் ""ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க மறுப்பு"" என்று எப்போதும் போல இரட்டை வேடத்தைப் போட்டு கபட நாடகத்தை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஏமாற்று நாடகத்தை தூத்துக்குடி மக்களும் தமிழக மக்களும் நீண்ட நாள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள். ஆகவே மனித நேயமற்ற முறையில், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நசுக்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக அரசு பிற்போக்குத் தனமாக நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.

அப்பாவிகளின் 13 உயிர்கள் அதிமுக ஆட்சியில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கும், போலீஸ் தடியடி க்கும் அதிமுக அரசின் அடாவடி அராஜகத்திற்கும் ஆளான தூத்துக்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் கழக அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித் தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு வன்மத்தோடு ஆணையிட்ட வர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில், மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கசக்கிய அதிமுக ஆட்சியின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கழக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிக்கிறேன்!