திங்கள், 16 செப்டம்பர், 2019

அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம், நம் முகவரி. - மதிமுக மாநாட்டில்மு.க.ஸ்டாலின் உரை

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள்; காஞ்சி தந்த வள்ளுவன், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் நமது தாய்; அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம் - நம் முகவரி!"

- மு.க.ஸ்டாலின் உரை.
(தலைவர், திமுக)


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டோம்' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துக்காட்டிய அந்தப் பாடல் வரிகளுக்கேற்ப மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு, ஏன் மறுமலர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்தும் இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் என் ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவருக்குத் துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கும் இந்த மாநாட்டுக் குழுவைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமலும் உறங்கிக்கொண்டிருக்கும் நம் அறிவுலக மேதை, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்தநாளில், பிறந்தநாள் என்ற தலைப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன், இந்த மாநாட்டைத் திறந்து வைப்பது என்பது எனக்கு பெருமை மட்டுமல்ல; சிறப்பு மட்டுமல்ல; மகிழ்ச்சி மட்டுமல்ல; என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமையாக நான் கருதுகிறேன்.. 'உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே, என் கண்கள் எல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்' என்று அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி, அவர் மறைந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட கவிதை வரிகள் இந்த வரிகள்.

கால நதி வெள்ளத்திலே கன்னித்தமிழ் உள்ளத்திலே ஊறி நிற்கும் ஒரு பெயர்தான் அண்ணா அண்ணா. இதை உத்தமர்கள் யாவரும் சொன்னார் சொன்னார்' என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் அண்ணாவைப் பற்றி எழுதிக்காட்டியிருக்கிறார். எழுத்தானவன் நல்ல எண்ணமானவன் பழுத்த சுவைத் தமிழனின் பண்ணானவன், அறியாமை வெள்ளத்தின் அறிவானவன், அறிவுச்சுடர் விளக்காய் அணையாதவன் குறையாத கடலுக்கு ஒப்பானவன் என்று எழுதினார் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதினார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அதையொட்டி நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் பங்கேற்று இந்த மாநாட்டைத் துவக்கிவைப்பதிலே நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம், நம் முகவரி. அதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நானும் அண்ணன் வைகோ அவர்களும் எத்தனையோ மேடைகளில் ஒன்றாக கலந்துக் கொண்டிருந்தாலும், இந்த மேடையில் ஒன்றாக இருப்பதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், நான் பங்கேற்கக்கூடிய ம.தி.மு.க.,வினுடைய முதல் மாநாடு - இந்த மாநாடு!

பொதுமேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். தி.மு.க மேடைகளில் கலந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறோம். ஆனால், ம.தி.மு.க.,வின் மாநாடு என்பது இதுதான். அதனால்தான் சொன்னேன், என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடாக இது அமைந்திருக்கிறது. நீர் அடித்து நீர் விலகாது என்பதைப்போல் நாம் ஒன்றாக ஆகியிருக்கிறோம். தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் ஒருதாய் மக்கள். அந்தத் தாய்தான் காஞ்சி தந்த வள்ளுவன், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். பிரிந்துகிடக்கக்கூடிய தமிழர்களை இணைக்கக்கூடிய வலிமை சில சொற்களுக்குத்தான் உண்டு. அத்தகைய சொற்களில் ஒன்று 'தமிழன்'. அத்தகைய சொற்களில் ஒன்று 'திராவிடம்'! அத்தகைய சொற்களில் ஒன்று தந்தை பெரியார்! அத்தகைய சொற்களில் ஒன்று அறிஞர் அண்ணா! அத்தகைய சொற்களில் ஒன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

நாம் வேறு வேறு இயக்கங்களாகப் பிரிந்திருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம்; நிற்போம். நம்மை ஒற்றுமைப்படுத்துவதே இந்தச் சொற்கள்தான். எதை விட்டுக்கொடுத்தாலும் இந்த ஐந்தையும் ஒருக்காலும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் ம.தி.மு.க. மேடையில் ஸ்டாலின் நின்றுக் கொண்டிருக்கிறான். தி.மு.க. மேடையில் அண்ணன் வைகோ நிற்கிறார். இது ஒருசிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏன் ஒருசிலருக்கு கோபம் வரலாம். ஒருசிலருக்கு ஆத்திரம் வரலாம். பொறாமையாகக்கூட இருக்கலாம். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் எப்படி நிரந்தர தளபதியோ - அதுபோல் அண்ணன் வைகோ அவர்கள் நிரந்தரப் போர்வாள். இதுதான் கலைஞருடைய கனவு. இதுதான் அறிஞர் அண்ணாவுடைய கனவு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியிலே நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டுவிழா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். போர்வாளும் தளபதியும் ஒரே மேடையிலே என்று சொன்னேன். மேடையிலே மட்டுமல்ல, களத்திலும் ஒன்றாகத்தான் நாங்கள் நின்றுக் கொண்டிருக்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணன் வைகோ அவர்கள் கோபாலபுரத்திற்கு வந்தார்கள். உடல் நலிவுற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க - உடல்நலம் விசாரிக்க வந்தார்கள்.

அண்ணன் வைகோ அவர்களை தலைவர் கலைஞர் பார்க்கிறார். தலைவர் கலைஞர் அவர்களை அண்ணன் வைகோ அவர்கள் பார்க்கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணன் வைகோ அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். ஒருவேளை வைகோ அவர்களின் முகத்தை மறந்திருந்தாலும், கருப்பு துண்டை ஒருகாலும் தலைவர் கலைஞர் அவர்கள் மறந்திட மாட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் புன்முறுவல் பூத்தார். அண்ணன் வைகோ அவர்கள் கண் கலங்கினார்கள். அப்படி கண்கலங்கிய நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களை பற்றுகின்றார். அதன் பிறகு என்னுடைய கரங்களையும் அண்ணன் வைகோ அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள்.

தலைவர் கலைஞரிடத்தில் அண்ணன் வைகோ அவர்கள் சொல்கிறார், ‘உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாக இருந்தேனோ. அதேபோல் தம்பிக்கு - அதாவது எனக்கு - பக்கபலமாக இருப்பேன்’ என்று உணர்ச்சியோடு சொன்னார். தலைவர் கலைஞர் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அண்ணன் வைகோ அவர்கள் இப்போது எனக்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கென்றால் தனிப்பட்ட ஸ்டாலின் என்ற இந்த மனிதருக்கு அல்ல, ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். அதுதான் முக்கியம்!

இந்த இனத்திற்கு - மொழிக்கு - கலாச்சாரத்திற்கு - இந்த நாட்டிற்கு 'காவல் அரண்' திராவிட முன்னேற்றக் கழகம். என்பதை உணர்ந்து, அதற்கு பக்க துணையாக அண்ணன் வைகோ அவர்கள் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அவருக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை - வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்று சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு கம்பீரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதேநேரத்தில் திருவண்ணாமலையில் தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள், காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. அண்ணன் வைகோ அவர்களின் வேண்டுகோள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன். அவருடைய கட்டளையை நான் ஏற்றுக்கொண்டு, இந்த மாநாட்டை நான் தொடங்கி வைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை பெற்று, முடித்துக்கொண்ட பிறகு வேகவேகமாக நான் திருவண்ணாமலைக்கு சென்றாக வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அந்தநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில்தான் அவர் போட்டியிட்டார். அப்போது அண்ணன் வைகோ அவர்கள், "சின்னம் முக்கியமல்ல; எண்ணம் தான் முக்கியம்" என்று சொல்லி முடிவெடுத்தார். அதுபோல், அண்ணன் வைகோ அவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடத்திட வேண்டும். "தேர்தல் முடிந்த பிறகு நீங்கள் மாநிலங்களவைக்கு வாருங்கள்" என்று நாங்கள் முடிவெடுத்தோம். அதுதான் முக்கியம்.

எனவே இவை இரண்டும் நிறைவேற்றப்பட்டு அந்த செயல்பாடுகள் இன்றைக்கு செயல் வடிவத்திற்கு வந்து. அதன்மூலமாக பல செயல்பாடுகளை இன்றைக்கு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில், 39 இடங்களில் வென்று ஒரு மிகப்பெரிய சரித்திரச் சாதனை வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம்.

"இந்தியாவே ஒருமாதிரி இருந்தாலும், தமிழகம் தனி மாதிரி" என்பதை நாம் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தனி மாதிரியாக இருந்தாலும், தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்து நாம்தான் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாட்டில் இருக்கும் நிலைகளெல்லாம் என்னவென்று பார்க்கிறோம்?

பொருளாதார வளர்ச்சி என்ன கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றது? எந்தளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது?

புதிய நிறுவனங்கள் உருவாகவில்லை; செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்த துவங்கி இருக்கின்றது; புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது; இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோய்க் கொண்டிருக்கிறது; வேளாண் துறை ஒட்டுமொத்தமாக சிதைந்து கொண்டிருக்கின்றது.

காஷ்மீரில் ஜனநாயகம் பட்டப்பகலில் பறிக்கப்பட்டிருக்கிறது. சர்வாதிகாரம் எல்லா மட்டத்திலும் தலைதூக்க துவங்கி இருக்கிறது.

ஜனநாயக அமைப்புகள் எல்லாம் இன்றைக்கு கேலிக்கூத்தாக்கப் படுகின்றது. இவைகள் எல்லாம் தமிழகத்திற்கான பிரச்சனைகள் மட்டுமல்ல, இந்திய அளவில் இருக்கும் பிரச்சனைகள். எனவே இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது!

ரயில்வே துறையாக இருந்தாலும் அஞ்சல் துறையாக இருந்தாலும் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் போராடி போராடிதான் நாம் உரிமையை பெற வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம். நாம் லேசாக கண் அயர்ந்தால் இந்தியைத் திணித்து விடுவார்கள். கொஞ்சம் அசந்து விட்டால் தமிழையே புறக்கணித்து விடுவார்கள். இந்தியை எதிர்த்து இன்று நேற்றல்ல 1938-ல் இருந்து போராடி வருகிறோம். 1949-ல் போராடினோம். 1950-ல் போராட்டம் நடத்தினோம். அடுத்து 1953-ல், போராட்டம் நடத்தி இருக்கிறோம். 1963-ம் ஆண்டு போராடி இருக்கிறோம். 1965-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய போராட்ட களத்தை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். 1987-ல் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

இப்போதும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறோமா ? இல்லையா ?

அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவு எதிர்த்தாலும் இந்தியை திணிப்பது அவர்களின் எதேச்சதிகாரமாக தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறதா, இல்லையா?

மொழியை திணிப்பது மட்டுமல்ல, நீட் தேர்வின் மூலமாக மருத்துவக் கல்வியை சிதைத்து விட்டார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மாநில ஆளுநர் தடுத்து வைத்து இருக்கிறார். காவிரியில் துரோகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ போன்ற திட்டங்களால் தமிழ் மண்ணை இன்றைக்கு சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் கலாச்சாரத் தாக்குதல் இன்னொரு பக்கம் ரசாயன தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறன. இவற்றைத் தடுக்க வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது!

அதற்கு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த மாநாடு பயன்பட வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், "முல்லை காட்டில் எருமை புகுந்தது போல, நெற்களஞ்சியத்தில் புயல் புகுந்ததுபோல, சோலையில் சூறாவளி புகுந்தது போல, மலர் தோட்டத்தில் தீ சூழ்ந்தது போல, மத்திய மாநில அரசுகளால் மக்களின் வாழ்க்கை இன்றைக்கு சிதைந்துக் கொண்டிருக்கிறது".

இதற்காக பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறோம். சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். மக்களைத் திரட்டி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு சூழ்நிலை வந்து இருக்கிறதா, இல்லையா? இந்தப் போராட்டங்களை நாம் கைகோர்த்து நடத்தியாக வேண்டும்.

இந்தப் போராட்டத்தின் முன்னணி போர்வாள் தான் இங்கு அமர்ந்திருக்கும் அண்ணன் வைகோ அவர்கள்.

நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, யாருக்கும் பயப்படாமல், போராட்டத்தை முன்னெடுக்க கூடியவர்தான் அண்ணன் வைகோ அவர்கள். அவருக்கு யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.

அவருடைய சகோதரன் என்ற முறையில் நான் உரிமையோடு சொல்கிறேன், "கொஞ்சம் உடல்நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்"

என்னுடைய வேண்டுகோளாக மட்டுமல்ல, இதனை கண்டிப்போடு நான் சொல்கிறேன், உரிமையோடு நான் சொல்கிறேன். அந்த உரிமை எனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். மதிமுக தொண்டர்களாக இங்கே அமர்ந்திருக்கும் உங்களுக்கும் அந்த உணர்வுதான் இருக்கும். அதை யாராலும் மறுக்க முடியுமா ?  எனவே, நான் சொல்கிறேன் அண்ணன் வைகோ அவர்களே, உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். உங்களுக்காக அல்ல; உங்கள் குடும்பத்திற்காக அல்ல; இந்த இனத்தினுடைய - மொழியினுடைய - நாட்டினுடைய நலத்தை பேணி பாதுகாத்திட வேண்டும், அவருடைய ஆரோக்கியத்தில்தான் தமிழ்ப் பேரினத்தின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்ற உணர்வோடு நான் சொல்கிறேன்.

போர்க்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாராகிக் கொண்டிருக்கும் போர்க்களத்திற்கு அத்தனை பேரும் புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதுதான் அறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாடக் கூடிய இந்த நல்ல நாளில் நாம் எடுக்கக்கூடிய உறுதி மொழியாக இருக்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக