வியாழன், 5 செப்டம்பர், 2019

திமுக சார்பில் முதல்வருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்த தயார் - மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் பெற்றுள்ளதாக சொல்லும் முதலீடுகளுடன் - உலக முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் பெற்றதாக ஏற்கனவே சொன்ன முதலீடுகளையும் உள்ளபடியே பெற்று வந்தால் திமுக சார்பில் முதல்வருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்த தயார்

- மு.க.ஸ்டாலின் உரை.
(தலைவர், திமுக)

இன்று (05-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் அவர்கள் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

இந்த திருமணம் எந்த நிலையில் எந்த முறையில் நடந்திருக்கின்றது என்பது பற்றி இங்கு உரையாற்றிய சிலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் சீர்திருத்த திருமணங்கள்தான் அதிகமான அளவிற்கு நடைபெறும். அது தமிழ் திருமணங்களாக தொடர்ந்து இந்தப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் – தமிழ் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடைபெறவில்லை. ஆனால், 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.

ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள், முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் என்ற உரிமையோடு உள்ளே சென்று முதல் தீர்மானமாக சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நம்முடைய அண்ணா அவர்கள் அன்றைக்கு பெற்றுத் தந்தார். எனவே, இது ஒரு தமிழ் திருமணம் நமக்குப் புரிந்த, தெரிந்த மொழியில் நடைபெறக்கூடிய திருமணம்.

நம்முடைய தாய்மொழியாம் அழகு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கின்ற அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகிய தமிழ் மொழியில் இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது.

திராவிட இயக்கம் என்ன செய்தது? – என்ன செய்தது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களே... அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது, இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்களை சட்டவடிவம் ஆக்கித் தந்தது திராவிட இயக்கம் தான்.

அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் நான் தலைமையேற்று, மணவிழாவை நடத்திவைத்து எல்லோரும் வாழ்த்தியதைப் போல், உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதற்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் உள்ளே வருகின்ற நேரத்தில் சாமிநாதன் நன்றியுரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச்சொன்னார், “ஒரு மாநாடு போல்” என்று. உணமைதான், மாநாட்டிற்கு என்னென்ன சிறப்பு இருக்குமோ, அத்துனை சிறப்புகளும் - ஏதோ இது திருமண விழா நம்முடைய இல்லத்தோடு முடித்துக்கொள்ளலாம், உறவினர்களை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம், கட்சியினரை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், சாமிநாதன் அவர்கள் இந்த திருமணம் குடும்பத் திருமணமாக இருந்தாலும், இது கழக குடும்பத் திருமணமாக அமைய வேண்டும் என்ற நிலையில் - ஒரு மாநாடுபோல், மாநாட்டிற்கு எந்தெந்த பணிகள் எல்லாம் ஆற்ற வேண்டுமோ அந்த நிலையில், உரையாற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ஒருவரையும் விட்டுவிடாமல் குறிப்பிட்டுச் சொன்னார். அதுதான் சாமிநாதன். பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பார்.

ஆனால், அவர் எடுத்து வைக்கும் பணிகள், சொல்லக்கூடிய கொள்கை, இலட்சியம், அழுத்தம், உள்ளபடியே பாராட்டப்படவேண்டிய ஒன்றாக அவர் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய திருமணத்தை 1990ம் ஆண்டு இதே திருப்பூரில் நான் நடத்தி வைத்திருக்கிறேன் என்று இங்கு சொன்னார்கள். மணவிழா மலர் வெளியிடப்பட்டபோது, புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தினை நான் உற்று உற்று பார்த்தேன். அந்த புகைப்படத்தில் 'கோட் சூட்' அணிந்து கொண்டு, எந்த முகபாவத்தோடு இருக்கின்றாரோ, அதே முகபாவத்தோடு தான் இன்றும் இருக்கிறார்.

நான் கூட கொஞ்சம் மாறி இருக்கலாம், 'போட்டோவில் சொல்கின்றேன்'!

கொள்கையிலும் இலட்சியத்திலும் மாறவில்லை!!

1990ல் அவருடைய திருமணத்தை நான் தலைமை ஏற்று நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு 2019ல் அவருடைய மகன் ஆதவன் அவர்களுக்கும் திருமணம் நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தான் அவர்களும் சொன்னார்.

அவருடைய மகனுக்கு மட்டுமல்ல, அவருக்கு பிறக்கக்கூடிய பேரன் பேத்திகளுக்கும் நான்தான் வந்து திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போதே தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக மணமக்கள் அவசரப்பட்டுவிடக்கூடாது 'பொறுத்தார் பூமியாள்வார்'.

நாம் பொறுத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, படிப்படியாக நம்முடைய சாமிநாதன் அவர்கள் வளர்ச்சி பெற்றிருப்பதை நான் நினைத்துப்பார்க்கின்றேன். இளைஞர் அணியில் உறுப்பினராக ஒன்றிய அளவில் இருந்து பணியாற்றி, அதற்குப் பிறகு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் துணை அமைப்பாளராக கடமையை நிறைவேற்றி, அதன் பிறகு மாவட்ட அமைப்பாளராகவும் இடையில் மாவட்டக் கழகத்தின் செயலாளராகவும், நான் இளைஞர் அணியில் செயலாளராக இருந்தபோது எனக்கு துணை நின்று துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து பணியாற்றி, அதற்குப் பின்னால் இணைச் செயலாளராகவும், நான் செயல் தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால், இளைஞர் அணியில் செயலாளராகவும் பொறுப்பேற்று இன்றைக்கு கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து அவர் இயக்கத்திற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்.

இடையில் அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்திருந்த அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

நான் நினைத்துப் பார்க்கின்றேன் அவர் இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்த போது, ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் அணியின் பாசறை கூட்டங்களை மண்ணாதபாளையம் எனும் இடத்தில் இரண்டு நாட்கள் நடத்தினோம்.

ஒரு பாசறை கூட்டத்தை எப்படி நடத்திட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த கூட்டத்தை நம்முடைய சாமிநாதன் அவர்கள் நடத்திக் காட்டினார். அப்படி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நாட்களும் பங்கேற்ற கழகத் தோழர்களுக்கும், இளைஞர்களுக்கும், உணவு வழங்கி உபசரிக்கும் பணியையும் அவர் தொடர்ந்து செய்தார். அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய தாயார் சமையல் கூடத்தில் நின்றுகொண்டு பரிமாற கூடிய காட்சிகளை எல்லாம் நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன்.

தி.மு.கழகம் ஒரு குடும்பம் என்பதற்கு இதெல்லாம் தான் ஒரு உதாரணம்.

ஏதோ குடும்பக் கட்சி - குடும்பக் கட்சி என்று சொல்கிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன்... தி.மு.க குடும்ப கட்சிதான்!

அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கிய நேரத்திலேயே, அண்ணன் - தம்பி, மாமா - மச்சான், அக்கா - தங்கை, என்றார். அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரே வரியில், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று சொன்னார்.

எனவே, அந்த குடும்பப் பாச உணர்வோடு அவருடைய தாயார் உணவு பரிமாறிய அந்த காட்சியை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மேடையில் இன்றைக்கும் அவர் அமர்ந்திருக்கிறார்கள்.

எனவே, நம்முடைய சாமிநாதன் அவர்கள், அவருடைய இல்ல மணவிழா நிகழ்ச்சியை எழுச்சியோடு - மிகப் பெருமையோடு - பூரிப்போடு, நாமெல்லாம் பாராட்டும் அளவிற்கு அவர் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் சாமிநாதன் அவர்கள் எந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார். அன்பை பொழிந்தாரோ, அதில் இம்மியளவும் குறையாமல் அதை இன்றைக்கும் என்னிடத்தில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

எனக்கு கிடைத்து இருக்கும் சில படைவீரர்கள் - தளபதிகள், அந்த தளபதிகளில் இளைஞர் அணியில் இருந்து ஒரு சிறப்பிற்குரிய இடத்தில், பட்டியலில் பெற்றிருக்கும் முக்கியமான ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், நிச்சயமாக அது சாமிநாதன் அவர்களாகத்தான் இருக்கும்.

சில தோழர்கள், நம் முன்னோடிகள், கழகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை வந்து எடுத்துச் சொல்வார்கள். அப்படி சொல்கிறபோது நான் சில விளக்கங்களை சொன்னால் அதனை மறுத்தும் பேசுவார்கள். நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். ஆனால், சாமிநாதன் அவர்கள் எதையும் மறுக்காமல் நியாயத்தை கூட எடுத்துச் சொல்லாமல் அதை அப்படியே, ஐந்தும் மூன்றும் 8 என்று நான் சொல்லாமல், 7 என்று சொன்னால்கூட அதை சரி என்று சொல்வார்.

அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் மீதும் எங்கள் மீதும் அளவுகடந்த பாசத்தையும் அன்பையும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கக் கூடியவர்.

எனவே, இன்னும் அவரை பாராட்டினால் அது என்னையே பாராட்டிக் கொண்டிருப்பது போல் ஆகிவிடும். அதனால், நான் அதிகம் பாராட்ட விரும்பவில்லை. எனவே, இது நம்முடைய குடும்பத்தில் இருக்கும் திருமணமாக நான் மட்டுமல்ல இந்த மேடையில் இருக்கக்கூடியவர்களும், இங்கு வந்திருக்கக் கூடிய நீங்களும் அந்த உணர்வோடு தான் இங்கு வந்திருக்கிறீர்கள்.

அந்த உணர்வோடுதான் இன்றைக்கு நீங்கள் மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்த வந்திருக்கும் உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நம்முடைய பி.ஜே.பி.யின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகிறபோது மனம் திறந்து பேசினார். அவர்களை வீழ்த்தி விட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்லுகின்றேன் நாங்கள் உங்களை விழ்த்தவில்லை, தோற்கடித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

நாங்கள் தோற்கடித்தோம் என்று கூட சொல்ல விரும்பவில்லை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். நான் அரசியல் அதிகம் பேச விரும்பவில்லை. மற்ற கட்சித் தலைவர்கள் இருக்கும்பொழுது பேசினால் அது நாகரீகம் அல்ல, இருந்தாலும் பேசாமல் போய்விட்டால் சாமிநாதனுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிடும். அவருக்கு வருகின்றதோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் வரும். எனவே நாகரிகத்தோடு தான் நான் பேச விரும்புகின்றேனே தவிர நாகரீகம் தவறி நான் பேச விரும்பவில்லை.

இன்றைக்கு பொருளாதார சூழ்நிலை எந்த நிலையில் போய்க் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். கோவை திருப்பூர் போன்றவை அடங்கிய கொங்கு மண்டலம் இது.

இன்றைக்கு தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படக் கூடிய ஒரு கொடுமை, அதில் பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர்கள் அனைவரும் வேலையை இழக்கக்கூடிய ஒரு அக்கிரமம். 5 சதவிகிதத்திற்கும் கீழே பொருளாதாரம் போய்க் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த சரிவின் விளிம்பில் இன்றைக்கு கோவையும் திருப்பூரில் இருந்து கொண்டிருக்கின்றன.எனவே, இவற்றையெல்லாம் நாம் சரி செய்ய வேண்டும்.

இப்போதுகூட தமிழ்நாட்டின் முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு போயிருக்கிறார். முதலீட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதாக அறிவித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

நியாயமாக, ஒரு முதலமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனியாக சென்றிருந்தால் மக்கள் எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் இருக்கலாம்.

ஆனால், முதலமைச்சர் மட்டுமா போயிருக்கிறார்? அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் கூட செல்லலாம். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அமைச்சரவையே சென்றிருக்கிறது.

10 பேர் போய்விட்டார்கள். தற்போது, அடுத்ததாக 8 பேர் செல்லவிருக்கின்றார்கள். நான் அதனால்தான் நேற்றைய தினம் சொன்னேன் இது அ.தி.மு.க அமைச்சரவை அல்ல; இது அ.தி.மு.க.வின் சுற்றுலா அமைச்சரவை என்று ஒரு படத்தையும் கொடுத்தேன்.

இன்று காலையில் பத்திரிகைகளில் என்ன செய்தியென்றால், ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வந்திருக்கின்றது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று காலையில் பக்கம் பக்கமாக தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. 2,780 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கின்றோம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம், என்று ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள். செய்தியினை வெளியிடுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் முதலமைச்சர் பேசிய பேச்சும் பத்திரிக்கைகளில் வெளி வந்திருக்கின்றது.

என்ன பேசி இருக்கின்றார் என்றால் 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தினோம். அப்படி நடத்திய நேரத்தில் ஏறக்குறைய 5 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை நாங்கள் பெற்றோம். அந்த முதலீட்டை பெற்ற காரணத்தினால் 220 தொழில்நிறுவனங்கள் பணியைத் துவங்கி விட்டது என்று ஒரு செய்தியினைச் சொல்லியிருக்கிறார்.

இது ஒரு அப்பட்டமான பொய். நாங்கள் இதைத் தான் கேட்கின்றோம், 220 தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டது என்று ஒரு செய்தியினை, வெளிநாட்டிற்கு சென்று முதலமைச்சர் பேசி இருக்கின்றார் என்றால். எந்த நிறுவனம்? எந்த ஊரில்? எங்கு துவங்கப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கையாக வையுங்கள் என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் தொடர்ந்து பேசி இருக்கின்றேன். இப்போதும் இந்த திருமண விழாவில நான் பேசுகின்றேன்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அப்போது, 2.42 இலட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு அறிவித்தார்கள். 2வது உலக முதலீட்டாளர் மாநாடு தற்போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றபோது நடத்தினார்கள். அதில் கிட்டதட்ட 3 இலட்சம் கோடி ரூபாய். எனவே, கிட்டதட்ட 5 இலட்சம் கோடி என்று அறிவித்திருக்கின்றார்கள். எனவே, 5 இலட்சத்திற்கு போட்ட முதலீட்டிற்கே இன்னும் வழியைக் காணோம். இப்போது அமெரிக்காவிற்கு சென்று 2,780 கோடி ரூபாய்க்கு முதலீட்டை பெற்றிருக்கின்றோம் என்று பேசியிருக்கின்றார் என்றால். அதை இன்றைக்கு பத்திரிகைகள் படம் பிடித்து பக்கம் பக்கமாகவும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வந்தால் மகிழ்ச்சிதான்! அதனை உள்ளபடியே வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம்!

இது உள்ளபடியே வருமென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்களே முதலமைச்சருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால், இது உண்மையா?

எனவே, இதை நாங்கள் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு முதலீடு பெறுவதை தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்துப் பேசுகிறார் - விமர்சனம் செய்கிறார் - முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றார் என்று ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துக் கொண்டுவருகிறார்கள்.

முதலீடு வந்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், முதலீடு வரவில்லை. எனவே, எதற்காக இன்றைக்கு அவர்கள் சென்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இன்றைக்கு நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக அதிலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அந்தப் பணிகளை எல்லாம் இன்றைக்கு செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தான் இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கின்றது. எனவே, உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

எனவே, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். எனவே, அதை நீங்கள் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் உங்களுடைய ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு வழங்க வேண்டும் என்று நம்முடைய சாமிநாதன் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில், உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கினறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக