திங்கள், 16 செப்டம்பர், 2019

அன்போடு அல்ல கண்டிப்போடு சொல்கின்றேன் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


இந்த விழாவுக்கு முன்பாக ஒரு வேண்டுகோளை – அல்ல ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தேன்.
அந்தக் கட்டளையை ஏற்று விளம்பர பதாகைகள் இல்லாமல் இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள். இது இந்த விழாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த விழா நடைபெற்றாலும் யார் நடத்தினாலும் இதைத்தான் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று நான் பணிவோடு அல்ல அன்போடு அல்ல கண்டிப்போடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் கண்டிப்போடு சொல்கின்றேன்.

காரணம், இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்டங்களில் இருந்து கழக நிர்வாகிகளாக, முன்னோடிகளாக, செயல்வீரர்களாக நீங்கள் வந்திருக்கிறீர்கள். விளம்பரப் பலகைகளை வைத்திட வேண்டாம் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 3 நாட்களாக பத்திரிகைகளில், ஊடகங்களில் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பர பதாகைகள் வைப்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடத்தப்படுக்கிறது. இதுவே நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்து யாராவது இறந்திருந்தால் ‘ஊரே இரண்டுபட்டிருக்கும்’. விதவிதமான பிரச்சாரங்களை, திட்டமிட்டு நடத்தியிருப்பார்கள்.

ஆனால், அ.தி.மு.க விளம்பரப் பதாகை விழுந்து ஒரு இளம்பெண் மறைந்திருக்கிறார். நான், அரசியல் பேசுவதாக யாரும் கருதிட வேண்டாம் நான் இதில் அரசியல் பேசிட விரும்பவில்லை. அது எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த அமைப்புக்களாக இருந்தாலும் நான் மிகுந்த பணிவோடு திரும்பத் திரும்ப கேட்டுக்கொள்வது, ஒரு விளம்பரத்திற்காக விளம்பரப் பலகைகளை நாம் ஆர்வத்தில் கட்டுகிறோம். அது விளம்பரத்திற்காக அல்ல மக்களுடைய வெறுப்பை வளர்க்கும் வகையில் அமைந்து விடுகின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இப்போதல்ல நான் ஏற்கனவே, 2017-ஆம் ஆண்டு செயல் தலைவராக பொறுப்பேற்ற நேரத்தில் அறிவித்த முதல் அறிவிப்பு அதுதான். ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதை நான் மறுக்கவில்லை. அது மீண்டும் துளிர் விடத்தூண்டி இருப்பதை நான் பார்க்கின்றேன். எனவே, இனி அது போன்று அமையக்கூடாது என்று இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய அத்தனைபேரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக