திங்கள், 16 செப்டம்பர், 2019

இந்தித் திணிப்பை தடுக்க எத்தகைய தியாகத்துக்கும் திமுக தயார் - மு.க.ஸ்டாலின்

"இந்தித் திணிப்பை தடுக்க எத்தகைய தியாகத்துக்கும் திமுக தயார்" முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை



திமுக 70 ஆண்டு பயணத்தில் நாம் பெறாத வெற்றியும் இல்லை நாம் பெறாத தோல்வியும் இல்லை. வெற்றியில் துள்ளி குதித்ததும் இல்லை தோல்வியில் துவண்டு போனதும் இல்லை நாம் சந்திக்காத அடக்கு முறைகள் இல்லை. பார்க்காத சிறைச்சாலைகள் இல்லை.


துப்பாக்கி குண்டுகளை நேருக்கு நேராக பார்த்த இயக்கம் தங்களது தேக்குமர தேகத்தை தீக்கிரையாக்கியவர்கள் தி.மு.கழக தோழர்கள். இப்படி பல்வேறு தியாகங்கள் செய்து 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியை பிடித்து, 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.கழகம் தமிழகத்திற்கு தமிழ் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. அத்தகைய சாதனை சரித்திரம் வேறு எந்த கட்சிக்கும் அகில இந்தியாவிலேயே கிடையாது. ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், சிறுபான்மையினர்க்கும், பெண்ணினத்திற்கும் அனைத்து தரப்பினர்க்கும் ஆதரவாக ஆட்சியை நடத்தியது தி.மு.கழகம். அதனால்தான் இந்த தி.மு.கழக ஆட்சி காலா காலத்திற்கும் தொடரவேண்டும் என்று தந்தை பெரியார் மிகவும் விரும்பினார்கள்.

ஆனால், இப்போது இங்கே ஒரு ஆட்சி இருக்கிறது. அது எப்போது முடியும் என்று அ.தி.மு.க தொண்டர்களே நினைக்கிறார்கள். ஏன் என்றால், அது அ.தி.மு.க ஆட்சி அல்ல 30 அமைச்சர்களுக்கான ஆட்சி. 30 பேருக்கான ஆட்சி என அக்கட்சி தொண்டர்களே சொல்கிறார்கள். அதனால் தான் மக்களை அம்போ என்று விட்டுவிட்டு முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லோரும் இன்ப சுற்றுலா கிளம்பி விட்டார்கள்.

14 நாட்கள் வெளி நாட்டுப்பயணம் 8 ஆயிரத்து 835 கோடிக்கு முதலீட்டை கொண்டு வந்ததாக முதலமைச்சர் சொல்கிறார். முறையான முதலீட்டை கொண்டுவந்தால் பாராட்டு விழா என்றேன். சொன்ன சொல்லில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன்.8,835 கோடி ரூபாய்க்கு மதிப்பீட்டில் 41 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்கிறார் எடப்பாடியார். 41 நிறுவனங்கள் எவை எவை என்பதை சொல்லுங்கள் முதலமைச்சர் வெளிநாடு சென்றதை தவறு என்று சொல்லல்ல, தாராளமாக செல்லட்டும் அவர் கோட்டு, சூட்டு போட்டு சென்றதையும் நான் தவறு என்று சொல்லல்ல. ஆனால், முதலீடுகளை ஈர்க்க போகிறோம் என்று எதற்காக நாடகம் ஆட வேண்டும்?

வெளிநாடு பயணம் முடிந்து சென்னை வந்ததும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதில் 41 நிறுவனங்களின் பெயர்கள் இல்லை. ஆகஸ்ட் 28-ஆம் தேதி லண்டன் போனார். கிங்ஸ் மருத்துவமனையை பார்த்தார். அது போன்ற மருத்துவமனையை திறக்கப் போகிறோம் என்று அறிவித்தார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்தார். செப்டம்பர் 2-ஆம் தேதி அமெரிக்கா போனார் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.

செப்டம்பர் 3-ஆம் தேதி ரூ.2780 கொடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் போட்டதாக சொல்கிறர். நிறுவனங்களின் பெயரைச் சொல்லவில்லை. செப்டம்பர் 4-ஆம் தேதி ரூ.2300 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் போட்டதாக சொல்கிறார். நிறுவனங்கள் பெயரைச் சொல்லவில்லை. செப்டம்பர் 5-ஆம் தேதி ஒரு நிறுவனத்திர்கு சென்று பேட்டரி வாகனங்களை பார்வையிட்டுள்ளார். செப்டம்பர் 6-ஆம் தேதி கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் ஒரு நிறுவனத்தை பார்வையிட்டுள்ளார்.

செப்டம்பர் 9-ஆம் தேதி துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.3750 கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள் போட்டதாகச் சொல்கிறார். எந்தெந்த நிறுவனங்கள் என்று சொல்லவில்லை. 10ஆம் தேதி வந்துவிட்டார். ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டார், தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார், கால்நடைப் பண்ணையை பார்வையிட்டார், பேட்டரி கார் நிறுவனத்தை பார்வையிட்டார், மாசில்லா எரிசக்தி கூடத்தை கழிவு நீர் மறு சுழற்சி மையத்தை பார்வையிட்டார். என்று தமிழக அரசு செய்தி குறிப்பு சொல்கிறது.

முதலமைச்சர் பார்வையிடப் போனாரா - முதலீடுகளை பெறுவதற்காக போனாரா? இது தான் நாடகம் என்கிறோம்.

இன்னொரு அப்பட்டமான பொய்யை முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுவும் அமெரிக்காவில் போய் பொய் சொல்லியிருக்கிறார். நீங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினீர்களே அப்போது 3 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்ததாக சொன்னீர்களே, அதில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன என்று நான் கேட்டேன்.

இதற்கெல்லாம் பதில் சொல்லாத முதலமைச்சர் அமெரிக்காவில் போய் பதில் சொல்லி இருக்கிறார். பதில் என்கிற பெயரில் பொய் சொல்லி இருக்கிறார்.

நியூயார்க் நகரில் கடந்த 3-ஆம் தேதி ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். வெளிநாட்டில் போய் பேசியுள்ளார் சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 MOU ஒப்பந்தங்கள் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு. இவற்றில் 220 நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளை துவக்கியுள்ளது என்று கூறியுள்ளார். யார் அந்த 220 நிறுவனங்கள் சொல்லத் தயாரா? எடப்பாடி பழனிசாமி? இந்த கேள்வியை கேட்டால் எடப்பாடிக்கு கோபம் வருகிறது கேள்வி கேட்காதே விமர்சனம் செய்யாதே என்கிறார். அவரைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன் என்கிறார். 2 லட்சம் கோடிக்கு முதலீட்டை கொண்டு வந்து காட்டினால் உங்களைப் பார்த்து எங்களுக்கு பொறாமை வரும்.

மாதம் ஒரு தொழிற்சலையை திறந்து வைத்தால் உங்களைப் பார்த்து பொறாமைப் படலாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுத்தால் உங்களைப் பார்த்து பொறாமைப் படலாம். பொறாமைப்படும் அளவுக்கும் எடப்பாடியிடம் என்ன இருக்கிறது?

இந்த தமிழகமே பொறாமைப்படும் அளவுக்கு இந்த இந்தியாவே பொறாமைப்படும் அளவுக்கு சாதனைகள் செய்த ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.கழக ஆட்சி. எங்கள் சாதனைகளை முறியடிக்க இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எங்களது சாதனைகளை நாங்கள் மட்டுமே முறியடிக்க முடியும்.

எங்களது சாதனைகளை சோழிங்கநல்லூரிலும் ஓ.எம்.ஆர் – சாலையிலும் போய் பாருங்கள். எங்களது சாதனைகளை திருப்பெரும்புதூரிலும் இருங்காட்டுக் கோட்டையிலும் போய் பாருங்கள். கோட்டையில் உட்கார்ந்து கொண்டே உலகத் தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தது கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.கழக ஆட்சி. இருங்காட்டு கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் நிறுவனம். மறைமலை நகரில் போர்டு மோட்டார் தொழிற்சாலை சென்னை மாநகரத்தை இந்தியாவின் டெட்ராய்டு என்று லண்டனில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது.

தொழில் நிறுவனங்களை நிறுவுவதில் தமிழகம் முதலிடம் என்று எக்னாமிக் டைம்ஸ் எழுதியது. டைடல் பார்க் ஒன்று போதுமே தி.மு.க ஆட்சியின் பெருமையை சொல்வதற்கு திறந்து வைக்கப்பட்ட 34 மாதத்தில் 34 நிறுவங்கங்கள் தங்களது நிறுவனத்தை தொடங்கியது. சிறுசேரியில் 1000 ஏக்கரில் அமைக்கப்பட்ட தொழில் பூங்கா தி.மு.க ஆட்சியின் சாதனையைச் சொல்லும். இவை எல்லாம் தி.மு.க.,வுக்கு கலைஞர் வாங்கி கொடுத்த பெருமை யாரையாவது பார்த்து பொறாமைப்பட வேண்டுமானால் கலைஞரைப் பார்த்துத்தான் பொறாமைப்பட வேண்டும்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப்போல நாட்டை நாசமாக்கிய எடப்பாடி கூட்டம் மக்களால் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்.

மத்திய அரசு மட்டும் முட்டுக்கொடுக்காமல் இருந்தால் இந்த ஆட்சி எப்போதோ கவிழ்ந்திருக்கும். மத்தியில் இருக்கும் ஆட்சி இரண்டாம் முறையாக பொறுப்பேற்று 100 நாள் முடிந்துள்ளது. மத்திய அரசின் சாதனை என்ன? பொருளாதரத்தை 5 சதவிகிதம் குறைத்தது தான் 100 நாள் சாதனை. 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக் இருக்கிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டது. புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக மோட்டார் வாகனத் தொழில் மொத்தமாக வீழ்ச்சி அடைந்துவருகிறது. மத்தியிலே ஒரு நிதி அமைச்சர் இருக்கின்றார் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்தான் நிர்மலா சீதாராமன் நல்ல புத்திசாலி அமைச்சர் கார்கள் ஏன் விற்கவில்லை? என்று கேட்டால் எல்லோரும் பழைய கார்களை விற்றுவிடு புது கார்கள் வாங்க வேண்டும் என்கிறார்.

கடந்த வாரம் அவர் சொல்கிறார் தனியார் கால் டாக்சிகள் அதிகமானதால் தான் புதிய கார்கள் விற்பனை ஆகவில்லை என்று, அவர்களுக்கு மக்களைப்பறி எந்த கவலையும் இல்லை. நாடே குட்டிசுவராகி போய்க்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம் மீத்தேன், நியூட்ரினோ தமிழகத்தை பாழடிக்கும் திட்டங்கள், இந்தி திணிப்பு தொடர்ந்து நடக்கிறது. தபால் துறையிலும் ரயில்வே துறையிலும் தமிழை அழிக்கக்கூடிய முயற்சி. இந்த கலாச்சார படையெடுப்பை தடுக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டா, இல்லையா.

தி.மு.கழகம் என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுகின்ற - மொழியை இனத்தை காப்பாற்றுகின்ற – தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு மாபெரும் இயக்கம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

சீர்திருத்த நோக்கத்தைத் தான் அடிப்படையாக வைத்து தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் உருவாக்கிக் கொடுத்தார்கள். ஆட்சியை பிடிக்கும் வலிமையுள்ள கட்சியை கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

அதனால் தான், முப்பெரும் விழாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவிழா போல பெரியார் பிறந்த நாள் – அண்ணா பிறந்த நாள் – கழகம் தோன்றிய நாள் என்று நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறோம்.

மத்திய அரசின் எதேச்சதிகார கொள்கைகளை எதிர்ப்போம்.

மாநிலத்தை ஆளும் ஊழல் அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என்று சபதம் ஏற்கக்கூடிய முப்பெரும் விழாவாக இது அமையும்.

அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்ற போது குறிப்பிட்டிருந்தார். நேற்று முன் தினம் மத்தியில் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷா அவர்கள் ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இந்தி பேசாத மக்கள் மனதில் தேள்கொட்டியது போல் அந்த செய்தி வந்திருக்கின்றது. நன்றாக கவனிக்க வேண்டும், அமித் ஷா அவர்களுக்கும் மோடி அவர்களுக்கும் தாய்மொழி இந்தி அல்ல, பிறகு எதற்காக இந்தி மொழிக்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். அமித் ஷா என்ன சொல்கிறார்? நாடு முழுமைக்கும் ஒரு மொழி அவசியம் அதுதான் இந்தியாவின் அடையாளத்தை தரும். அதிக மக்களால் பேசப்படக்கூடிய இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று அமித் ஷா அவர்கள் நேற்றைக்கு ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

நான் சொல்கிறேன், இந்தியாவில் இந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் வாழவில்லை, இந்தியாவில் கணக்கெடுத்து பார்த்தீர்கள் என்றால் 1,652 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்று இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது, இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்கத்தான்.

இன்றைக்கு இந்தியைத் திணிக்க சட்டம் போடுவார்கள், நாளைக்கு தமிழை படிக்கக்கூடாது என்று சட்டம் போட்டக்கூடிய சூழ்நிலை கூட வரும். அதனால், தான் தந்தை பெரியார் அவர்கள் இந்தியை எதிர்க்கின்ற நேரத்தில் சொன்னார்கள். “இது கலாச்சார படையெடுப்பு, இந்தி பேசுபவர்கள் நாகரீகம் என்பது வேறு, நம்முடைய நாகரீகம் என்பது வேறு”. இந்த கலாச்சார படையெடுப்பிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்க வேண்டும்.

நாளை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம். என்னதான் நாளை மாலை கூடுகின்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருந்தாலும், நான் முன்கூட்டியே வெளிப்படையாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்தியை திணிக்கிற எந்த முயற்சியையும் தி.மு.க பார்த்துக் கொண்டிருக்காது. அதனை, தடுக்கின்ற முயற்சியில்தான் உறுதியாக ஈடுபடும். அதற்காக எந்தத் தியாகத்திற்கும் நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். எனவே, அந்த தியாகத்தை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்ற உறுதியை, இந்த முப்பெரும் விழா நடைபெறக்கூடிய திருவண்ணாமலையில் நான் அறிவிக்க விரும்புகிறேன்.

இந்தி போராட்டம் என்பது தமிழகத்தோடு முடிந்துவிடாது இந்தி பேசாத மாநில மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் போரட்டமாக அது நிச்சயம் அமையும்.

இந்தியாவா – ‘இந்தி’-யா?வா எது வேண்டும் என்று சொன்னால், எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்தியா தான் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், இந்தி தான் வேண்டும் என்று சொல்பவர்கள் அவர்கள்.

இது அரசியல் போராட்டமல்ல, இது ஒரு பண்பாட்டுப் போராட்டம், மொழிப்போராட்டம், அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து தமிழ் அறிஞர்கள் மாணவர்கள் அனைவரும், நாம் ஈடுபடுகின்ற இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் ஆன்மீக எண்ணம் கொண்டிருக்கக்கூடியவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். 1938-ல் இந்தி திணிப்பு எதிர்ப்புபோராட்டத்தை துவங்கினார்கள். அந்த ஒற்றுமை 2019-ல் வரவேண்டும்.

அந்த மொழிப்போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருந்தாக வேண்டும். வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற உறுதியோடு தயாராவோம் தயாராவோம் என்பதை எடுத்துச்சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக