வெள்ளி, 18 அக்டோபர், 2019

தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல - தி.வேல்முருகன்

தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல; மாறாக, பாஜக மோடியின் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோத ஆளுநர் ஆட்சியே!
- தி.வேல்முருகன்
(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)


7 தமிழர்களை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமலும் திருப்பி அனுப்பாமலும் ஓராண்டுக்கும் மேலாய் காலங்கடத்தி, கடைசியில் நிராகரிப்பதாக, அதையும் வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

28 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களையும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 161இன் கீழ் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என 2018 செப்டம்பர் 6ந் தேதியன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு. இதன்படி எழுவரையும் விடுவிக்க, தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஓராண்டுக்கு மேலாகியும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை; திருப்பியும் அனுப்பவில்லை. இந்நிலையில் தமிழக அரசு 2ஆவது தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்க வேண்டும்; அதில் ஆளுநர் கையெழுத்திடாதிருக்க முடியாது; சட்டப்படி அவர் கையெழுத்திட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் பழனிச்சாமியின் அதிமுக அரசோ 2ஆவது தீர்மானத்தை இதுவரை அனுப்பவில்லை. இதற்கான காரணம் வெளிப்படை; ஆளுநரும் சரி, பழனிச்சாமி அமைச்சரவையும் சரி; ஒன்றிய பாஜக மோடி அரசின் கைத்தடிகள் என்பதே உண்மை. கடைசியில் இப்போது அந்த அமைச்சரவைத் தீர்மானத்தையே நிராகரிப்பதாக, அதையும் வெறும் வாய்மொழியாகவே முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல; மாறாக, பாஜக மோடியின் அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பான ஆளுநர் ஆட்சியே என்பது நிரூபணமாகிறது!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முன்பே ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார்; அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று பதிலளித்தவர் கையெழுத்திடவேயில்லை.

அவர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தினோம்; சிவகங்கையில் இருந்து எனது தலைமையில் மாபெரும் சைக்கிள் பேரணியும் நடத்தினோம். ஆனாலும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. பின்னர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்றது. அதன் பிறகும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. 2018 டிசம்பர் 3ந் தேதி மதிமுக தலைமையில் நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கலந்துகொண்டு, “சட்டத்தை மதிக்காத ஆளுநர் அந்தப் பதவிக்கே தகுதியில்லாதவர்; தமிழ்நாட்டை விட்டே அவர் வெளியேற வேண்டும்; அல்லது ஒன்றிய அரசே அவரைத் திரும்பப்பெற வேண்டும்” என முழங்கினோம்; அப்போதும் உறைக்கவில்லை ஆளுநருக்கு.

இந்நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாநிலை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாநிலை மேற்கொண்டார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டார். இவை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் பலவும் இதற்காக போராட்டங்கள் நடத்தின; ஆனாலும் எதற்குமே செவி கொடுப்பதாக இல்லை ஆளுநரும் பழனிச்சாமியின் அதிமுக அரசும். இப்போது கடந்த சில நாட்களுக்கு முன், எழுவர் விடுதலைக்காக பிரதமரையே நேரில் சந்திப்பதென அறிவித்திருக்கிறார் அற்புதம்மாள்.

இந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் ராபர்ட் பயாஸின் முறையீட்டு மனுக்களை விசாரிக்காமல் தாமதப்படுத்துவதும் நடந்திருக்கிறது; இதற்கும் மோடி அரசுதான் காரணம்; இதை அதிமுக அரசு மோடி அரசுக்கு எடுத்துச் சொல்லாததும் காரணமே!

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். அதில், “ராஜீவ் காந்தியை கொலையில் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் இருந்த பேட்டரி நான் வாங்கிக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழுவின் விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்குத் தரவும் அவரது மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்தது. இதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இன்று நீதிபதி (17.10.2019) ரமணா தலைமையிலான அமர்வில், பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு ஆஜராகி, “பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஓராண்டாக விசாரிக்கப்படாமல் உள்ளது. விசாரணை பட்டியலில் அந்த வழக்கு முதலில் இடம்பெறும். பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும். இப்போது வரும் நவம்பர் 5ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. இப்போதும் முன்புபோல் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. திட்டமிட்டப்படி நவம்பர் 5ந் தேதி வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, கட்டாயம் நவம்பர் 5ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளித்திருக்கிறது.

ராபர்ட் பயாஸ், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 30 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்தார். அதன் மீது டிஐஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கும் யார் காரணம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். டிஐஜி நடவடிக்கை எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் பயாஸ் மனு தாக்கல் செய்தார். இதற்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று (17.10.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை பதில் அளிக்கவில்லை; மாறாக அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. நவம்பர் 4ந் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

ஆக, ஆளுநர் கையெழுத்திடாது காலங்கடத்தியபோது 2ஆவது தீர்மானத்தை அனுப்பி அவரைக் கையெழுத்திட வைக்கவில்லை; கடைசியில் அதை நிராகரிப்பதாக வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்தார் ஆளுநர். பேரறிவாளனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனு விசாரிக்கப்படாமல் வழக்குப் பட்டியலில் இருந்தே நீக்கப்பட இருந்தது. ராபர்ட் பயாஸின் பரோல் கேட்பு மனு வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் அதிமுக அரசுதான். பாஜக மோடி அரசு ஆளுநர் மூலம் தன்னை ஆட்டிப்படைத்தாலும் அதற்கு இடங்கொடாமல், பயப்படாமல் தன்னளவிலான அதிகாரத்தைத் தைரியமாகாகப் பயன்படுத்தியிருக்க வேண்டாமா அதிமுக அரசு? ஆனால் அப்படிச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. எனவே தான் சொல்கிறோம்: தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல; மாறாக, பாஜக மோடியின் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமான ஆளுநர் ஆட்சியே!

அதனால்தான் ஆளுநர், 7 தமிழர்களை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமலும் திருப்பி அனுப்பாமலும் ஓராண்டுக்கும் மேலாய் காலங்கடத்தி, கடைசியில் நிராகரிப்பதாக, அதையும் வெறும் வாய்மொழியாகவே முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்! இதற்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக