செவ்வாய், 29 அக்டோபர், 2019

பாட்டாளி மக்கள் கட்சியும், பஞ்சமி நில மீட்பு போராட்டமும்! - DR.ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியும்,
பஞ்சமி நில மீட்பு போராட்டமும்!
- DR.ராமதாஸ் 
(நிறுவனர், பாமக.)

தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் முதலிடம் உண்டு. இதற்காக ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இப்போது கூறுகிறேன்.


இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த கால மற்றும் எதிர்கால செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் 300-க்கும் கூடுதலான பட்டியலினக் குடும்பங்கள் வசித்து வந்தன. அந்தப் பகுதியில் 633 ஏக்கர் பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தினர் பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை எதிர்த்தும், அந்த நிலங்களை மீட்பதற்காகவும் பட்டியலின மக்கள் 1994-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4&ஆம் தேதி போராட்டங்களைத் தொடங்கினர். அடுத்த சில நாள் போராட்டத்தில் நான்கரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்கு உழவு செய்து விவசாயம் மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அந்த மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தீபன் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அவர்கள் அமைத்த அம்பேத்கர் சிலையும் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டது. அதைக் கண்டித்து அக்டோபர் 10-ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டியலினத்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதை ஒடுக்க நினைத்த காவல்துறை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது திருக்கழுக்குன்றம் வட்டம் குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜான் தாமஸ், மதுராந்தகம் வட்டம் பாப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரையும் காவல்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். மேலும்பலர் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் ஏழுமலைக்கு வெறும் 21 வயது தான். அவருக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. 25 வயதான ஜான் தாமஸுக்கு திருமணமாகி ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது. இந்த செய்தி அறிந்ததுமே நான் கடுமையான அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி திருக்கச்சூர் ஆறுமுகத்தை தொலைபேசி மூலம் அழைத்த நான், ‘‘ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ தெரியாது. நாளை (11.10.1994) காலை நான் செங்கல்பட்டு வருகிறேன். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். பட்டியலின மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து துண்டறிக்கைகள் தயாரித்து வழங்க வேண்டும்’’ என்று கூறினேன். அதன்படி திருக்கச்சூர் ஆறுமுகமும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அடுத்த நாள் அதாவது 11.10.1994 அன்று செங்கல்பட்டு சென்ற நான் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய இருவர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த பலரையும் திருக்கச்சூர் ஆறுமுகம், சி.ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஏசு மரியான், தீபன் சக்கரவர்த்தி, மார்ட்டின் ஃபாதர் ஆகியோரையும் சந்தித்து பேசினேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த துப்பாக்கிச்சூட்டை கண்டிக்கவோ, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவோ அப்போது எந்தக் கட்சியும் தயாராக இல்லை. காவல்துறை அடக்குமுறைக்கு அஞ்சி அவர்கள் அடங்கிக் கிடந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் அத்துடன் முடிவடைந்து விடவில்லை. பட்டியலின மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு மற்றும் ஒடுக்குமுறையைக் கண்டித்து அடுத்த ஒரு வாரத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் ஒன்றையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பா.ம.க. போராட்டத்திற்கு எதிராகவும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பன. ஆனால், மிகவும் துணிச்சலுடன் பட்டியலின மக்களுக்காக நாங்கள் அந்த போராட்டத்தை நடத்தினோம்.

அப்போது வேறு எந்தக் கட்சியும் செங்கல்பட்டு துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. குறிப்பாக தலித் அமைப்புகள் எதுவும் உடனடியாக போராட்டம் நடத்தவில்லை. அப்போது தலித் மக்களுக்கான இயக்கம் நடத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கருப்பன், மருத்துவர் சேப்பன் போன்றவர்கள் தான். அவர்கள் இருவரும் எனது நண்பர்கள் தான். ஆனாலும், ஏதோ காரணத்தால் உடனடியாக போராட்டம் நடத்த அவர்கள் தயாராக இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி இரு வாரங்களுக்கு பிறகே தலித் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு, அந்தப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார்கள். என்ன பேசியும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடிதாங்கியில் தலித் ஒருவரின் உடலை பொதுப்பாதை வழியாக கொண்டு செல்வதில் எந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்ததோ, அதே அளவுக்கு இங்கும் எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில், ‘‘ பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் எவரும் என்னுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வரவேண்டாம். நான் மட்டும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்’’ என்று கூறிவிட்டேன். அதன்படியே தலித் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் தலித் எழில்மலை, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோருடன் நான் கலந்து கொண்டு, பஞ்சமி நில மீட்பு குறித்தும், நிலத்திற்காக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் உரையாற்றினேன்.

இப்போது பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் பலர் அப்போது களத்திலேயே இல்லை என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக