திங்கள், 14 அக்டோபர், 2019

தமிழக மீனவா்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் சிறை - ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் ஒரு படகிலும் இரண்டு நாள்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அவா்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவா்களை, இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா்ந்து வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக மாறியுள்ளது. தமிழக மீனவா்கள் அச்சத்தோடு மீன்பிடிக்கச் செல்வதும், கைது செய்யப்படுவதும், மீன்பிடிச் சாதனங்களை இழப்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நல்ல தீா்வு காணப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மீனவா்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, மத்திய அரசு, தமிழக மீனவா்களின் கோரிக்கைகளை ஏற்று, இலங்கை அரசுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடற்படையினா் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக