வெள்ளி, 11 டிசம்பர், 2020

உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதியாக உயரும் தகுதியுள்ள பெண் நீதிபதிகளைப் பரிந்துரைக்காதது ஏன்? - கி.வீரமணி


 மக்களின் கடைசி நம்பிக்கையான உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சமூகநீதி அடிப்படையில் நியமிக்கப்படாதது ஏன்?

பாலியல் நீதியுடன் கூடிய சமூகநீதி மிகவும் அவசியமாகும்; உச்சநீதிமன்றம், தலைமை  நீதிபதியாக உயரும் தகுதியுள்ள பெண் நீதிபதிகளைப் பரிந்துரைக்காதது ஏன்?

நீதித்துறையில் சமூகநீதி கொடி தலைதாழாமல் பறந்தால்தான், உண்மையான வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு நாடு முன்னேற முடியும்.

உலகில் எங்குமில்லாத ஜாதி அமைப்பு எனும் பிறவி பேதம் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதோடு, மேல்ஜாதியினராகிய பார்ப்பனர் வெகுச் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், படிப்பை - அவர்கள் ஏகபோகமாக்கிக் கொண்டு, மற்ற ஒடுக்கப்பட்ட மக்களாகிய பழங்குடியினர் (எஸ்.டி.,), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பிற்படுத்தப்பட்டோருக்கும் (பி.சி.), சிறுபான்மையினருக்கும் வாய்ப்புக் கதவுகளை மூடியே வைத்திருந்தனர்.

தென் மாநிலங்களில் சமூகநீதி ஓரளவு வளர்ந்திருப்பது எப்படி?

இட ஒதுக்கீடு - சமூகநீதி என்பதன் காரணமாக கடந்த நூறாண்டுக்குள் (அதுவும் தென்னிந்தியாவில்தான்) ஓரளவு விழிப்புணர்வு திராவிடர் இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்டு, சற்று கல்வி, வேலைவாய்ப்புகளில் இடம்பெறுகின்றனர்.

அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் முயற்சியும், அதிலிருந்த ‘ஓட்டையை’ (சமூகநீதியைப் பொறுத்த) அடைக்கும் வகையில், அதன் முதலாண்டிலேயே போராடி அதனைத் திருத்திய பெருமை தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும், தமிழ்நாட்டு மக்களையும், காமராசர் போன்ற கல்வி வள்ளல்களையும் சார்ந்ததாகும்.

அதனைப் பறிக்கும் தொடர் முயற்சிகள் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் புதிய முறையில் - அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் வகையில் புதிதாக அவசர கோல அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் 103 போன்றவை வந்துள்ளன!

மக்களுக்குக் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தானே!

உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும்தான் அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவேண்டியவையாகும். மக்களுக்குள்ள கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான்.

அங்கே சமூகநீதியில் நம்பிக்கையும், ஓர்ந்து கண்ணோடாது அதைச் செய்யும் மனமும் தெளிவு உள்ளவர்களும், பாதிப்பை தாங்களாகவே உணர்ந்தவர்களாகவும் உள்ள சமூகத்தவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால்தான் உண்மையாகவே சமூகநீதி - வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும்.

எனவேதான், நாம் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்து வருகிறோம்.

உயர்ஜாதியினரின் ஏகபோகமாக இருந்தவை - அண்மைக் காலமாக - கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஓரளவு மாற்றம் அடைந்து வருகின்றன.

பாலியல் நீதியுடன் கூடிய சமூகநீதியே அவசியம்!

பாலியல் நீதியுடன் இணைந்த சமூகநீதி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் (Gender Justice Combined with Social Justice).

பெண்களுக்கு வாய்ப்பு என்ற சாக்கில் உயர்ஜாதி பார்ப்பன பெண்களுக்கே அது கிடைக்கும் என்றால், அது பாலியல் துறையில் நிகழ்த்தப்படும் சமூக அநீதியாகும்!

உயர்ஜாதி, முன்னேறியவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி 3 முதல் 8 சதவிகிதம்தான் மக்கள் தொகையில் 

மேலும் ஏற்கெனவே ‘பந்தி’யில் அமர்ந்து பிறரை அண்டவிடாமல் - ‘புளியேப்பம்‘ வரும்வரை உண்டவர்கள் அவர்கள் (பார்ப்பனர்கள்); மற்ற சமூகத்தவர்கள் ‘பசியேப்பக்காரர்கள்’. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த எத்தனைப் பேர் இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளனர்?

34 நீதிபதிகள் உள்ள உச்சநீதிமன்றத்தில், ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் (எஸ்.சி.,)தான் நீதிபதியாக உள்ளார். அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு!

ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர், எஞ்சிய அத்துணைப் பேரும் (காலியாக உள்ள இடங்களைத் தவிர்த்து) இருபாலரும் உயர்ஜாதியினரே! அல்லது எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எம்.பி.சி., அல்லாதவரே!

இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா? அண்மையில் மாவட்ட நீதிபதிகளிலிருந்து பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் - சில ஆண்டுகளுக்கு முன்பேகூட நியமனம் பெற்றிருக்க வேண்டியவர்கள் - 10 பேர், பல பெண் நீதிபதிகள் உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சில நாள்களுக்குமுன் நியமனம் பெற்று பதவியேற்றார்கள்.

இவர்களில் ஒடுக்கப்பட்டோருக்கு வாய்ப்பு பெரும் அளவில் கிட்டியதற்கு முக்கிய காரணம், மாவட்ட நீதிபதிகள் நியமனம் வரை இட ஒதுக்கீடு - சமூகநீதி கடைப்பிடிக்கப்பட்டதால்தானே!

அதை ஏன் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களுக்கு சட்ட ரீதியாகவே நடைமுறைப்படுத்தக் கூடாது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் - தமிழக  சமூகநீதி போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே!

‘தகுதி, திறமை’ என்பதற்கு உரிய அளவுகோல்தான் என்ன? பல உயர்ஜாதி நீதிபதிகளின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டு, ஏற்கப்படாமல் உள்ளதே!  பலவித குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நீதிபதிகள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்களா?

சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண் நீதிபதிகளின் எண்ணிக் 13 என்று தலைமை நீதிபதி அவர்கள் பெருமையுடன் அறிவித்தார். காரணம், இந்த மண்ணின் மனோபாவத்தை (Soil Psychology) நிலை நிறுத்திட  இங்கே நடந்த, சமூகநீதிப் போராட்டங்களின் விளைவுதானே!

1921-லேயே திராவிடர் ஆட்சி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய ஆட்சி!

பெண்களை ‘நமோ சூத்திரர்கள்’ என்ற மனுவினை ‘தர்மத்தை’ எதிர்த்தது. அவர்களைப் படிக்க வைத்து, பணிகளுக்குச் செல்லும் வாய்ப்புகளுக்காக போராடிய மண் பெரியார் மண்ணாகிய இந்த சமூகநீதி திராவிட பூமி என்பதால்தான்!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஒரு பெண் வர முடியாதது ஏன்?

மற்ற மாநிலங்களில், குறிப்பாக வடக்கே இத்தகைய விழிப்புணர்வு ஏற்படவும் இல்லை; ஏற்படுத்த திராவிடர் இயக்கமான பெரியார் இயக்கம் போன்றவை உருவாகவில்லையே! பழைய பத்தாம்பசலித்தனம்தானே இன்னமும் அந்த மக்களை வழிநடத்துகின்றன!

இல்லையேல், அங்கு ‘‘சதி மாதா கோவில்’’ கட்டி கும்பிடுவார்களா?

எனவே, காலங்காலமாய் மறுக்கப்பட்ட சமூகநீதி அந்த ‘‘பசியேப்பக்கார பட்டினிப் பட்டாளத்திற்கு’’ வழங்கிடும் வகையில், நீதிபதி நியமனப் பதவிகள் பங்கீடு அமையவேண்டும்; வாய்ப்பு கதவுகள் மேலும் அகலமாக திறக்கப்படவேண்டும்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை ஒரு பெண் நீதிபதி தலைமை நீதிபதியாக வரவே இல்லை என்ற ஆதங்கத்தை அட்டர்னி ஜெனரல் பிரபல சட்ட நிபுணர் கே.கே.வேணுகோபால் அவர்கள் தெரிவித்துள்ளார்!

அதற்குரிய மூல காரணம், போதிய பிரதிநிதித்துவம் பெண்களுக்கு இல்லாமை மட்டுமல்ல (No Adequate Representation) பரிந்துரைக்க இளைய வயதுள்ளவர்களைப் உச்சநீதிமன்றம் விரும்பவில்லை - வயது அதிகமானால்தான்  பரிந்துரை என்று ஒரு ‘தடுப்பணை’ கட்டியிருப்பதுதானே!

வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் குறை நீங்குமே!

முதிர்ச்சியான அறிவும், ஆற்றலும் உள்ள நீதிபதிகள் - முன்பு 40 வயதுக்குட்பட்டவர்கள்கூட - ஆண்களில் நியமிக்கப்பட்ட வரலாறு முன்மாதிரி உள்ளதே! இது ஏன் பெண்களுக்கும் கடைபிடிக்கக் கூடாது?

வயது முக்கியமல்ல; முதிர்ந்த அறிவும்,  தேர்ந்த ஆற்றலும்தான் தகுதியாக அமையவேண்டும் - அத்தகையவர்களுக்குவாய்ப்புக் கொடுத்தால், இந்தக் குறை நீங்குமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக