திங்கள், 7 டிசம்பர், 2020

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஐ.சி.எப் - யை தனியார் மயமாக்குவது, அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது! - தி.வேல்முருகன்


ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வை பணிமனைகளை தனியார் மயமாக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வேதனை முழக்கம் தமிழகத்தில் எழுந்த போது, மண்ணின் மக்களுக்காக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது தான் ஐ.சி.எப் தொழிற்சாலை . 

இந்நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிப்புரிந்து வருகின்றனர். உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் மூலம் ஆண்டிற்கு, 2,000க்கும் அதிகமான, ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தரம் வாய்ந்த  ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கு அனுப்புவது மட்டுமல்லாமல், தொழிற்சாலை நல்ல லாபத்திலும் இயங்கி வருகிறது. 

ஐ.சி.எப் தொழிற்சாலையைப்போல, இந்திய ரயில்வேயினால் நிறுவப்பட்ட இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை ஆர்.சி.எப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் இயக்கப்படுகிறது. 

இத்தொழிற்சாலை, 30,000-க்கும் அதிகமாக பயணிகள் பெட்டிகளை, பல விதங்களிலும், 51 க்கும் அதிகமான தானியங்கி உந்திச் செல்லும் பயணிகளின் ரயில்களை தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 35 விழுக்காடு ரயில் பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. 

இப்படிப்பட்ட விரிவான உட்கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருக்கும் போது ரயில் பெட்டி உற்பத்தியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. ஆனால், நாட்டின் நலனை விட, கார்பரேட்டுகளின் நலனே முக்கியம் என மோடி அரசு கருதுகிறது.  அதனால் தான், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில், அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்க மோடி அரசு துடிக்கிறது. 

குறிப்பாக, கல்வி, மருத்துவம், புதிய வேளாண் சட்டங்கள், போக்குவரத்து தனியார மயம்,  இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களை மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. 

மண்ணின் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஐ.சி.எப் ரயில்வே பணிமனை தனியார் மயமாக்கும் போது, தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படும் அபாயம் உள்ளது. ஐ.சி.எப் தொழிற்சாலைக்காக நிலம் வழங்கிய மண்ணின் மக்கள் எல்லாம் முட்டாள் என மோடி அரசு நினைக்கிறது. 1,500 கோடி ரூபாய் மதிப்புடைய ஐ.சி.எப் - யை தனியார் மயமாக்குவது, அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது. 

எனவே, ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வை பணிமனைகளை தனியார் மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு, எதிராக, அரசியல் கட்சிகள்,  அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர்களுக்கும், மண்ணின் மக்களின் நலனுக்காகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக