வியாழன், 31 டிசம்பர், 2020

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்


 

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! - தி.வேல்முருகன்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நேர்மையான இந்தப் போராட்டத்தில், மக்களும் உடனடியாக ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டம்,  உலகின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. 

மோடி ஆட்சிக் காலம் தொடங்கியதிலிருந்து பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், உரிமையைப் பறிக்கும் சட்டங்களைத் திணித்துக் கொண்டே இருக்கின்றது. 

மனித குலத்திற்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்புக் குரல் வந்தால், அவர்கள் தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டி, ஒடுக்குமுறை சட்டங்களை ஏவி விடுவதில், சாணக்கியத்தனத்தோடு செயல்படுகிறது மோடி அரசு.  இப்போது விவசாயிகளிடம் இதே அணுகுமுறையைப் பின்பற்றும்போது அது பலிக்காமல் போய்விட்டது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மோடி அரசை தட்டிக் கேட்க துணிவில்லாத அ.தி.மு.க. ஆட்சி, சட்டத்தை வரவேற்கிறது.

விவசாயி தனது உற்பத்திப் பொருளை இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் சென்று விற்கலாம், விலையை அவர்களே நிர்ணயிக்கலாம், பெரும் தொழில் நிறுவனங்கள் விவசாயப் பொருள்களை வாங்கலாம்,  அதற்கான ஒப்பந்தத்தை விவசாயிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்து கொள்ளலாம், ஒப்பந்தத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மீறினால் சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய உரிமை உண்டு என்றெல்லாம் இந்தச் சட்டம் கூறுகிறது. 

இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயிகளும் சம வலிமையுள்ளவர்களாக இருக்கிறார்களா?. சட்டம் வழங்கிய உரிமைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இரு பிரிவினருக்கும் சம அளவில் இருக்கிறதா என்பதுதான் அடிப்படை கேள்வி.

விவசாய விற்பனை சந்தையில் கார்ப்பரேட் நுழைந்து விட்டால் பிறகு அரசு விவசாயிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளரும், விவசாய நிலங்களே ஒரு கட்டத்தில் கார்ப்பரேட்டுகளிடம் அடகுக்கோ, விற்பனைக்கோ போய் விடும் என்ற விவசாயிகளின் நியாயமான அச்சத்தை மறுக்க முடியுமா?. 

விவசாயமும் சரி; விவசாயப் பொருள் விற்பனை சந்தையும் சரி; இந்தியா முழுமைக்கும் ஒரே தன்மையானது அல்ல; மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆனால், ஒரே நாடு, ஒரே சந்தை என்ற ஒற்றைத் தேச முழக்கத்தில் விவசாயத்தையும் கொண்டு வருகிறது மோடி அரசு.

ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே மதம்,  ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே மொழி,  ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை இந்தியாவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மோடி அரசு, இப்போது ஒரே நாடு,  ஒரே விவசாய சந்தை என்கிற திட்டத்துக்கு நகர்ந்துள்ளனர். 

ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே மதம்,ஒரே விவசாய சந்தை என்ற மோடி அரசின் கொள்கை, இந்திய இறையாண்மையை பாதிக்கும், நாடுகள் பலவாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன். நான் குறிப்பிட்டது பிரிவினைவாதம் அல்ல, மத்திய அரசின் சர்வாதிகார போக்கை. 

மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது என்பதை மோடி அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இதனை கருத்தில் கொண்டு, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற மோடி அரசு முன் வரவேண்டும். 

அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நேர்மையான இந்தப் போராட்டத்தில், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக