திங்கள், 7 டிசம்பர், 2020

வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்கு அன்னை சோனியாகாந்தியின் பிறந்தநாளில் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சூளுரை ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். - கே.எஸ்.அழகிரி


 கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிற அன்னை சோனியா காந்தி அவர்களின் 74 ஆவது பிறந்தநாளான டிசம்பர் 9 அன்று தமிழகம் முழுவதும் ஆக்கப்பூர்வமான வழிகளில் கொண்டாடப்பட வேண்டுமென  முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் பதவி தம்மீது திணிக்கப்பட்ட போது, அதை மறுதலித்து காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர். 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு டாக்டர் மன்மோகன்சிங் மூலமாக அடித்தளம் அமைத்தவர் அன்னை சோனியா காந்தி. இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். இந்த சாதனைகளை படைப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி.

சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயலாலும், மழையாலும் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிற வகையில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் நாளாக கடைப்பிடித்து, மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும்.

அதேபோல, அன்னை சோனியா காந்தி அவர்கள் நீடித்த ஆயுளுடன் வாழ்ந்து காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டிற்கும் அரும்பணியாற்ற வேண்டி சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தும்படி காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2004 இல் மதவாத சக்திகளை வீழ்த்தி, மதச்சார்பற்ற சக்திகளின் ஆட்சியை அமைத்து சாதனை படைத்தவர் அன்னை சோனியா காந்தி. அதேபோல, இன்றைக்கு மதவாத சக்திகள் வலிமை பெற்று வருவது காங்கிரஸ் கட்சிக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். இந்த சவாலை ஏற்று வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்கு அன்னை சோனியாகாந்தியின் பிறந்தநாளில் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சூளுரை ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக