ஞாயிறு, 20 டிசம்பர், 2020

SC பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமே எமது உயிர் மூச்சு ! தேவேந்திரர்களின் இலட்சியத்தை அடைய ஜனவரி– 6 மதுரையில் பிரம்மாண்ட பேரணி - டாக்டர் K. கிருஷ்ணசாமி


SC பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமே எமது உயிர் மூச்சு !
தேவேந்திரர்களின் இலட்சியத்தை அடைய ஜனவரி– 6 மதுரையில் பிரம்மாண்ட பேரணி.!!

ஒவ்வொரு தேவேந்திரரும் சிவப்பு - பச்சை கொடியேந்தி,
அணிதிரண்டு வாருங்கள்.!!
  
பட்டியலினப் பிரிவிலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியும் தேவேந்திரகுல வேளாளர் மக்களும், கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற அரசாணையை மாநில அரசு பிறப்பிக்கும் எனவும், மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

நமது கோரிக்கையின் ஒரு பகுதியாகிய தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்பை மட்டுமே நம்மில் சிலர் பெரிய வெற்றியாகக் கருதி மகிழ்ச்சி கொள்கின்றனர். இன்று வரை பெயர் மாற்றத்திற்குக் கூட அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் வாழ்த்தவும், பாராட்டவும் புறப்பட்டு விட்டனர். பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினால் பெயர் மாற்றமும் கிடைக்காது என அவர்களாகவே பல ஐயங்களைக் கிளப்புகிறார்கள்; பரப்புகிறார்கள். ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், தவறான பரப்புரையும் ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில், பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றம் வேண்டும் என்பதில் உலகெங்கும் வாழும் தேவேந்திரகுல மக்கள் உறுதியாக உள்ளனர். அதை வலியுறுத்தித்தான் அன்றும் போராடினார்கள்; இன்றும் போராடுகிறார்கள்; என்றும் போராடுவார்கள் என்பதை வாழ்த்துச் சொல்ல ஆட்கள் பிடித்து அழைத்துச் சென்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றம் தானே நமது மக்களுடைய நூறாண்டுகால கோரிக்கை.  ’கழுதைகள் அறியுமா கற்பூர வாசனை’ என்பதை போல புதிய தமிழகம் கட்சியோடும், தேவேந்திர குல மக்களோடும் ஒரு நாளும் பயணிக்காத அவர்களால் நாம் மத்திய, மாநில அரசுகளுக்கு வைத்துப் போராடும் கோரிக்கையின் உள்ளார்ந்த அம்சங்களை எப்படி உணர முடியும்?   பட்டியல் மாற்றம் இல்லாத பெயர் மாற்றத்தை விரும்புவோர்  தலித்திய - அரிஜன சிந்தனைவாதிகளே! 

நம் மக்கள்   பூர்வீகமாக குடும்பர், பண்ணாடி, காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தார், தேவேந்திரகுல வேளாளர் என்ற உன்னதமான பட்டப் பெயர்களோடும், காதில் தங்க கடுக்கண்களோடும், கால் செண்டைகளோடும், முறுக்கிய மீசையோடும், இராஜ கம்பீரத்தோடும் யாருக்கும் அடிப்பணியாமல் நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்திருக்கிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களுடைய தந்தையர் -மூதாதையர்களின் பட்டப்பெயர்கள் என்றுமே தாழ்வாகக் கருதப்பட்டதாக வரலாறுகள் இல்லை.  ஏரும், போருமே அவர்களுடைய இயற்கை அடையாளங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தின் 2000 ஆண்டுகாலத்திற்கு மேல்  பிரசித்திப்பெற்ற கோவில்களான கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், உடுமலை மாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாயினார் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், கோவில்பட்டி சென்பகவள்ளியம்மன் கோவில், வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், கழுகுமலை முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கரிவலம் பால்வண்ணநாதசுவாமி கோவில் என எண்ணற்ற கோவில்களில் பூர்வீக முதல் மரியாதையும், முன்னுரிமையும் விளங்கியவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மட்டுமே. இன்றும் தமிழர் – வேளாண்மை – இந்து - இந்தியர்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் தலைச்சிறந்த அடையாளமாக விளங்கக்கூடியவர்களும் இம்மக்களே.  தொல்காப்பியத்தில் மருதநிலம் என்றழைக்கப்பட்ட வயலும் வயல் சார்ந்தப் பகுதிகளில் வேளாண்மையை மேற்கொண்டதால், பள்ளர்கள் என்ற பிரிதொரு காரணப் பெயரும் உண்டு. அழகான அத்தமிழ்ச் சொல்லையும், அப்பட்டப்பெயர் தாங்கிய பள்ளரின / தேவேந்திரகுல வேளாளர் இன மக்களின் நிலங்களையும் பறித்துக் கொண்ட கணக்குப்பிள்ளைகளும்,  நிலச்சுவான்தார்களும், ஜமீன்தாரிகளும் அம்மக்களை சிறுமைப்படுத்தினார்கள்; கொடுமைப்படுத்தினார்கள். 

ஆங்கிலேயருடைய காலத்தில் நம்மக்களின் பூர்வீக வரலாற்றைக் கண்டறிந்து, அவர்களின் சொந்த நிலபுலன்களை திருப்பி கொடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக Depressed Classes என்றும், அதைத் தொடர்ந்து Scheduled Castes என்றும் பட்டியலிடப்பட்டார்கள்.  இதன் காரணமாகத் தொன்றுதொட்டு விளங்கிய குடும்பர் உள்ளிட்ட பட்டப்பெயர்கள் காலப்போக்கில் அரிஜன், ஆதிதிராவிடர், தலித், தாழ்த்தப்பட்டோர், எஸ்.சி என்ற சொற்றொடர்களுக்குள் அமுங்கிப் போய்விட்டன. மண்ணுரிமைப் பெற்று வாழ்ந்தவர்கள் சொந்த மண்ணில் விவசாயத் தொழிலாளர்கள் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். குடும்பம் - அரசு ஆகியவற்றின் தோற்றுவாயாக இருந்தவர்கள் அரிஜன் என அழைக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டார்கள். சலுகை என்ற பெயரில் பட்டியல் பிரிவுக்குள் அடைக்கப்பட்டதும், அதனால் பூர்வீக அடையாளங்கள் மறைக்கப்பட்டதும் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்நிலையும்  சீர்குலையக் காரணமாக அமைந்தன. பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில், கிராம  வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. சுதந்திர இந்தியாவிலும் பூர்வீகக் குடிமக்களை பட்டியல் பிரிவில் அடைத்தது இம்மக்களின் சுய உரிமை, சுயமரியாதை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு எதிராக இடப்பட்ட கை, கால் விலங்காயிற்று. எவ்வளவுதான் கல்வி கற்றாலும், உயர் பதவிகளிலிருந்தாலும் SC என்ற முத்திரை தங்கள் மீது சுமத்தப்பட்டதால் கண்ணுக்குப் புலப்படாத லேசர் ஆயுதத் தாக்குதல் போல, ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளரும் சாதிய வன்மத்தால் உளவியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். பட்டியல் பிரிவில் நீடிக்கின்ற வரையிலும் நமக்கு மதிப்பில்லை; உயர்வில்லை; முன்னேற்றமில்லை என்பதை இலட்சக்கணக்கான தாய்மார்களும், இளைஞர்களும் புரிந்து கொண்டதை, ஏன் ஓய்வூதியம் பெறும் அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? 

1925-ல் தங்களுக்கு ஆங்கிலேயர்கள் கொடுத்தப் பதவிகளை பஞ்சமர் பட்டியலில் வைத்துக் கொடுக்காதீர்கள்; தேவேந்திரகுல வேளாளர்கள் என தனிப்பட்டியலாக கொடுங்கள் என்றது தானே பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையின் துவக்கமாக இருந்தது; அதன் தொடர்ச்சிதானே நமது போராட்டம். கடந்த 30 ஆண்டுக்கால போராட்டத்தில் ஒரு நாள் கூடக் கலந்து கொள்ளாதவர்கள், எதிர்த்து பேசியவர்கள் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தமிழக காவல்துறையின் அடக்கு முறைகளையும், ஒடுக்கு முறைகளையும் எதிர்கொண்டு, பந்தல் அமைத்துக்கூட அமர வழியில்லாத நிலையில், வயல்வெளிகளிலும், வரப்புகளின் மீதும், மரத்தின் நிழலிலும் அமர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களின் கோரிக்கையின் கொந்தளிப்பைக் காட்டிட தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில், தங்கள் தலையைக் கூட காட்டாதவர்கள் இன்று தலைமைச் செயலகத்திற்குப் படையெடுக்கிறார்கள். அவர்களெல்லாம் முன்னாள் IAS, IPS, IFS அதிகாரிகளாம். அவர்கள் பதவி வகித்தக் காலத்தில் யாருக்குப் பயன்பட்டார்கள்? நமக்கா? இல்லையே! அன்றும் பயனற்றவர்களாகவே இருந்தார்கள்; இன்றும் பயனற்றவர்களாகவே இருப்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர்களும் ஓய்வு பெற்றவர்கள், அவர்களது கொள்கைகளும் ஓய்வு பெற்றவைகளாகவே இருக்கின்றன. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பலன்கள் பல பெறுவதற்கும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், உழைத்து உழைத்து ஓடாய் போன தேவேந்திரகுல வேளாளர்கள் - புதிய தமிழகம் கட்சியின் போராட்ட வெற்றியின் நிழலே தேவைப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், அரிஜன் என்ற முத்திரைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், சிறுதொழில் கூட தொடங்க முடியாமல் தவிப்போர், தனியார் நிறுவனங்களில் வேலைத் தேடி அலைவோர், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணிபுரிவோர், சுயமாகத் தொழில் முனைவோர் என அனைவரின் வேதனைகளையும் ஆள்வோர் தான் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றால், ஏன் இவர்களும் புரிந்து கொள்ள  மறுக்கிறார்கள்?  

பட்டியல் பிரிவில் அடைக்கப்பட்டு அல்லல்படுவோர் விடுதலை கோரிப் பயணிக்கிறார்கள். ஆனால் சில பதறுகளோ பாராட்டு பத்திரம் படிக்கத் துடிக்கிறார்கள். ’எங்களுடைய மூதாதையர்களின் எந்தப் பட்டப் பெயரும் மோசமானது என்று சொல்லி பெயர் மாற்றம் கேட்கவில்லை; பெருமைமிகு பெயர்கள் பட்டியலுக்குள் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பட்டியல் மாற்றம் கேட்கிறோம்’. ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளத்தை மறைக்கின்ற, சிறுமைப்படுத்துகின்ற, தனிமைப்படுத்துகின்ற இந்தப் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள் என்பதுதான் நம்முடைய கோரிக்கையின் முழுப் பரிமாணம் ஆகும்.  பட்டியல் பிரிவிலிருந்து நீக்கப்படாத பெயர் மாற்றம், தேவேந்திரகுல மக்கள் விரும்பும் எந்தவிதமான நல்ல பலன்களையும் தராது. பெயர் மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, பட்டியல் மாற்றத்தை விட்டுவிட்டால் தேவேந்திரகுல வேளாளர் என்ற உன்னதமான பெயரும் அதன் அடையாளத்தை இழக்க நேரிடும்.  மீண்டும் அதற்காக எப்பொழுது போராடுவது? யார் போராடுவது? இவர்களா போராடப் போகிறார்கள்? எனவே பெயர் மாற்றத்தையும் பட்டியல் மாற்றத்தையும் ஒரு சேர செய்ய வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் அழுத்தம் திருத்தமானக் கோரிக்கை.  தங்களைத் தாழ்ந்தவர்கள், அரிஜன்கள் என்று சொல்லிக் கொள்வதில் சுயஇன்பம் காணக்கூடிய சிலரே பட்டியல் மாற்றத்தையும், பெயர் மாற்றத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்க எண்ணுகிறார்கள். பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற இக்காலகட்டத்தில்  பொதுப்பிரிவு மக்களோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு அறவே போயிற்று. கொஞ்சம் இருந்த இடஒதுக்கீடு வாய்ப்புகளும் உள் இடஒதுக்கீடு அறிவிப்பால் பறிபோயின. அரசு வேலைவாய்ப்புகள் அருகி வரக்கூடிய காலக்கட்டத்தில் SC சான்றிதழோடு தனியார் நிறுவனங்களில் புறக்கணிக்கப்படும் நிலை; சொந்தமாகத் தொழிலோ, வணிகமோ தொடங்கி வெற்றிகரமாக நடத்த முடியாத அளவிற்கு அந்நியப்படுத்தல்  இது போன்ற அவலங்களையெல்லாம் தங்களின் சொந்த வாழ்க்கையில் அனுபவிக்கும் இலட்சோபலட்சம் தேவேந்திரகுல தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்களின் உயிர் மூச்சான கோரிக்கையே பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றம். 

சாதி ஒழிப்பிற்கும், சமூகநீதிக்கும் பெரியாரையும், அண்ணாவையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும், ஏங்கல்ஸையும் தங்கள் கொள்கை முழக்கங்களுக்கு துணைக்கு இழுத்துக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளுக்கு தேவேந்திரகுல வேளாளர்களின் பெயர் மாற்றத்துடனான பட்டியல் வெளியேற்றம் என்பது சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதியின் அங்கம் என்பது தெரியவில்லையா? அவற்றின் மைல்கல் என்பதும் விளங்கவில்லையா? 

புதிய தமிழகம் கட்சியின் பாதையே..!
 சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக புரிதலுள்ள பாதை..!
 புதிய தமிழகம் கட்சியின் பாதையே..!
தமிழர்-இந்து-இந்தியர் அடையாளத்தை இழக்காமல் சாதியை ஒழிப்பதற்கான புதிய பாதை..!!
புதிய தமிழகம் கட்சியின் பாதையே..!
 சாதி-சமய-இன-பொருளாதார, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, 
சமநீதி-சம உரிமையை படைப்பதற்கான புரட்சிகரப் பாதை..!!

புதிய தமிழகத்தை படைக்க,
பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றமே ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் ஒருமித்தக் குரல் என்பதை உணர வேண்டியவர்களுக்கு உணர்த்திட,  உரக்கச் சொல்லிட..!

மண்ணின் பூர்வீகக் குடிமக்களே.!     தேவேந்திரகுல வேளாளர்களே..!!
ஜனவரி -   6 மதுரை பேரணிக்கு இன்றே ஆயத்தமாவீர்..! அணி திரள்வீர்..!! ஆர்ப்பரிப்பீர்..!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக