வியாழன், 3 டிசம்பர், 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.- எம். வெங்கய்ய நாயுடு


 

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காலத்தில் நாட்டு மக்கள் மீது அக்கறை காட்டுவதில் பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உதவி தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா உதவிகள் அளித்திருப்பது குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்ய நாயுடு இன்று மகிழ்ச்சி தெரிவித்தார். இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும், உதவி தேவைப்படும் நாடுகளுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அளித்து உதவி செய்ய இந்தியா மறந்துவிடவில்லை என்று அவர் கூறினார்.

சென்னையில் நடந்த உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் (ICWA) 19வது நிர்வாகக் குழு  கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அதன் தலைவர் என்ற வகையில் தொடக்க உரையாற்றிய அவர், பெருந்தொற்றை சமாளிக்க உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்று தெரிவித்தார். ``தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியிலும் நாம் முன்னேறிய கட்டத்தில் இருக்கிறோம், சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும்'' என்று அவர் கூறினார்.

இந்தியாவின் சாமானிய மக்களின் வாழ்க்கையில் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது, இந்த பெருந்தொற்று காலத்தில் பலமாக தெரிய வந்திருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழ்ந்த மற்றும் வேலை பார்த்து வந்த இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான வந்தே பாரத் திட்டம் பற்றி திரு. நாயுடு குறிப்பிட்டார். அந்தப் பெரும் பணிகளை திறமையாகக் கையாண்ட துறையினர் மற்றும் ஏஜென்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதுபோன்ற மக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை ஐ.சி.டபிள்யூ.ஏ. அமைப்பு அதிகமாக மேற்கொண்டு, இதுவரையில் சேவைகள் கிடைக்காத மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஏறத்தாழ எந்த நாடுமே கோவிட்-19 பாதிப்பில் தப்பவில்லை என்று கூறிய அவர், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை வெவ்வேறு வகைகளில் அது பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார். நாடுகளில் உள்ள மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான விஷயங்களை வெளிக் கொண்டு வருவதாக இந்தப் பெருந்தொற்று காலம் அமைந்துவிட்டது என்றார் அவர். ``பெரும்பாலானவர்கள் கூட்டு ஒத்துழைப்பு எண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில், சிலர் குறுகிய மனப்பான்மை காரணமாக பின்வாங்கிவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று காரணமாக பிராந்திய மற்றும் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் குறித்த, சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்த ஆய்வில் இந்தக் கவுன்சில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், ``கடந்த எட்டு மாதங்களில் ஏற்பட்ட, நினைவில் கொள்ள வேண்டிய இந்த மாற்றங்கள் கவுன்சிலின் ஆராய்ச்சிப் பணிக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது'' என்று கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் வசதிகளை இந்த அமைப்பு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, 50 ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியது, வெளிநாட்டு அமைப்புகளுடன் கலந்தாடல் கூட்டங்கள் நடத்தியது, பிராந்திய மற்றும் உலக அளவிலான கூட்டங்களில் பங்கேற்றது, இந்தியாவுக்கும் உலக அளவிலான பங்களிப்பாளர்களுக்கும் இடையில் மெய்நிகர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டது ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான முக்கியமான சிந்தனை மன்றங்களில் ஒன்றாக தன்னுடைய இடத்தை ஐ.சி.டபிள்யூ.ஏ. பலப்படுத்திக் கொள்ள இது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்கா குறித்த தேசிய ஆலோசனைகளின் போது தாம் கூறிய பரிந்துரைகளின்படி, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் அறிஞர்களுடன் காணொலி மூலம் 2 நாள் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்தது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

தனது செயல்பாடுகள் மூலம் நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஐ.சி.டபிள்யூ.ஏ.-வுக்கு பாராட்டு தெரிவித்த அவர், கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்கள் அளித்தமைக்காக வெளியுறவு அமைச்சகத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் பகுதி ஆய்வுகளை மேம்படுத்துவதில் புதிய கவனம் செலுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சரும்  ஐ.சி.டபிள்யூ.ஏ. துணைத் தலைவருமான டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளின் சமூக - அரசியல், பொருளாதார, வரலாற்று மற்றும் கலாச்சார விஷயங்களைப் புரிந்து கொள்வது, சர்வதேச விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமின்றி, தற்காலத்துக்கு ஏற்ற கொள்கை உருவாக்கத்துக்கும் உதவும் என்று அவர் கூறினார். நிதி ஆயோக் துணைத் தலைவரும், ஐ.சி.டபிள்யூ.ஏ.வின் துணைத் தலைவருமான டாக்டர் ராஜீவ்குமார் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். இதில் தொடர்புடைய நிதி ஆயோக், வெளியுறவு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டம் நடத்தி, பொதுக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கான முன்மொழிவை குடியரசு துணைத் தலைவர் ஏற்றுக் கொண்டு, இதில் மேற்கொண்டு முன்முயற்சிகள் எடுக்குமாறு ஐ.சி.டபிள்யூ.ஏ.வை கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக