ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் - புதிய தமிழகம் கட்சியின் போராட்ட வரலாற்றில் இன்னொரு மைல்கல்! -DR.K.கிருஷ்ணசாமி


தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் - புதிய தமிழகம் கட்சியின் போராட்ட வரலாற்றில் இன்னொரு மைல்கல்!

SC பட்டியல் வெளியேற்றமே இலக்கு!! -  DR.K.கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் பட்டியலினப் பிரிவிலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பொதுப் பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பாகக் கடந்த 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாநாடுகள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் எனத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்கள் தலைமையில் நமது கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தப் பிறகும், மாநில அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திய நிலையில், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.  

சம்பளத்தை உயர்த்துங்கள், போனஸ் தாருங்கள், விலைவாசியைக் குறையுங்கள் போன்ற பொருளாதார ரீதியான கோரிக்கையை நாம் முன்வைக்கவில்லை. உன்னதமான நிலையில் வாழ்ந்து தங்களுடைய சொந்த நிலபுலன்களையெல்லாம் அந்நியப் படையெடுப்புகளால் இழந்த ஒரு சமுதாயம் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் தவறுதலாக Depressed Classes என்ற பிரிவில் சேர்க்கப்பட்டது. அந்தச் சமூகத்தின் கடந்தகால வரலாறுகளை அறிந்து, அவர்களுக்கு விளைநிலங்களையும் கல்வியையும் தந்து மேம்படுத்துவதற்குப் பதிலாக பட்டியலினம் என்ற பாதாளத்தில் தள்ளப்பட்டார்கள். இதன் காரணமாக ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால் மட்டுமே கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் சில வாய்ப்புகளைப் பெற முடிந்தது.  

பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால் இந்த மக்கள் பெற்ற பலன்களைக் காட்டிலும் இழப்புகளே அதிகம். குறிப்பாக, பொதுத்தளத்தில் அவர்கள் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் ஒதுக்குமுறைகளுக்கும் ஆளானார்கள். அரசு வேலைவாய்ப்பைத் தவிர, வேறு எந்தத் துறைகளிலும் முன்னேற முடியாத அளவிற்கு முட்டுக் கட்டைகள் எழுந்தன. எனவே தான், பெயர் மாற்றத்துடனான பட்டியல் வெளியேற்றமே தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பிரதானக் கோரிக்கையாகப் பரிணமித்தது; அதை வலியுறுத்தியே இலட்சக்கணக்கான மக்களும் போராட்டக் களம் கண்டனர். எனினும் மாநில அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் அவர்கள், ’மாநில அரசிடமிருந்து அதுபோன்ற கோரிக்கை எதுவும் வரவில்லை’ என்று பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி அரசு தேவேந்திரகுல மக்களை ஏமாற்றுகிறதா? தேவேந்திரகுல மக்களை பெரும் போராட்டத்திற்குத் தள்ளுகிறதா? என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.  இந்தச் சூழலில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ’குடும்பர், பண்ணாடி, பள்ளர், கடையர், காலாடி, தேவேந்திரகுலத்தார், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திட மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். 

அவருடைய அறிவிப்பில், 7 உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை இனி தேவேந்திரகுல வேளாளர் என்று பெயரிடப்பட்டாலும், தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு பட்டியல் வகுப்பிலேயே தொடரவும் குழுப் பரிந்துரைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். எங்களுடைய நீண்டநாள் கோரிக்கையின் ஒரு பகுதியான, தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைப்பதற்கு அரசுப் பரிந்துரை செய்ததை ஏற்றுக்கொள்கிறோம், வரவேற்கிறோம். 

அதே சமயத்தில், தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் காரணம் காட்டி பட்டியல் வகுப்பில் தொடர பரிந்துரை செய்திருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், தேவேந்திரகுல மக்களுடைய தற்போதைய மோசமான சமூக, பொருளாதார நிலையே பட்டியல் வகுப்பில் சேர்த்ததால் தான். இந்தச் சமூகத்தில் பிறந்து, உலகெங்கும் இம்மக்கள் வாழக்கூடிய இடங்களுக்கெல்லாம் கடந்த 40 ஆண்டுகாலமாக பயணம் செய்து, அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிற காரணத்தினால் தமிழக முதல்வர் அவர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன், பெயர் மாற்றம் முக்கியம் என்றாலும் பட்டியல் மாற்றம் இல்லாத பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு முழு பலனைத் தராது. எனவே, பெயர் மாற்றப் பரிந்துரையோடு பட்டியல் மாற்றப் பரிந்துரையையும் செய்திடுமாறு நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடக்கூடாது. இந்த நாட்டில் சாதி ஒழிய வேண்டுமென்று சொல்லாத தலைவர்களே இல்லை. பல சமுதாயங்கள் சலுகைகளுக்காகப் பட்டியலுக்குள் வரவேண்டுமென்று விரும்புவார்கள். சில சலுகைகளையே இழந்தாலும் கூட, தங்களுடைய வரலாற்று பூர்வமான அடையாளங்கள் மீட்டெக்கப்பட வேண்டும்; உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே பட்டியல் வெளியேற்றம் இல்லாத தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற அரசாணையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவோ, அதைக் மகிழ்ச்சிகரமாக கொண்டாடக்கூடிய மனநிலையிலோ நாங்கள் இல்லை. புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல மக்களுடைய தொடர் போராட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் என்பது ஒரு மைல்கல்; ஆனால் பட்டியல் வெளியேற்றமே எங்கள் இலக்கு. தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுடையப் பூர்வீக அடையாளத்திற்காக நூறாண்டுகாலம் போராடியிருக்கிறார்கள். பெயர் மாற்றத்தோடு நிறுத்திக் கொண்டு பட்டியலில் நாங்கள் தொடரும் நிலை ஏற்படின், எங்கள் போராட்டத்தையும் தொடரத்தான் வேண்டும் என்றே கருதுகிறேன். கடந்த காலங்களில் அரசுகள் கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. ஆனால், ’தங்கள் அரசின் முயற்சி  முழு நிலவாக இருக்க வேண்டும், மூன்றாம் பிறையாக இருந்துவிடக்கூடாது’ என்பதே புதிய தமிழகம் கட்சி மற்றும் ஒட்டு மொத்த தேவேந்திரகுல மக்களுடைய வேண்டுகோள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக