வெள்ளி, 18 டிசம்பர், 2020

வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடிக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு எழுந்திருக்கிறது.- கே.எஸ்.அழகிரி


மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சதிகாரமான முறையில் விவசாயிகள் மீது திணித்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி தலைநகர் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். கடந்த 18 நாட்களாக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் இரவுபகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் மத்திய விவசாய அமைச்சர் விவசாய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார். சந்திக்க மறுத்து வருகிறார்.

ஆனால் என்ன விலை கொடுத்தும் விவசாயிகளின் நலனை பாதுகாப்போம் என்று பேசுகிற பிரதமர் மோடி தமது அலுவலகத்தில் இருந்து மிக அருகாமையில் போராடுகின்ற லட்சக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார். மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் என்கிறார்.

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பேச பிரதமர் மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களவையில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் மிருகபல மெஜாரிட்டியிலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கியும் வாக்கெடுப்பு நடத்தாமலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை விவசாயிகள் மறக்கமாட்டார்கள். எதிர்கட்சிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு சர்வாதிகாரமான முறையில் விவசாயிகளின் மீது திணித்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டம் ஓயாது என்று அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ் மாநில பிரிவு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாளை (14.12.2020) திங்கட்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தலைநகர் டில்லியில் டிசம்பர் மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 18 நாள் போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி கவலைப்படாமல் சமூக விலகலை புறக்கணித்து வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடிக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு எழுந்திருக்கிறது என்ற அளவில் நாளைய போராட்டம் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக