வியாழன், 3 டிசம்பர், 2020

டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் இலாபத்திற்காக நடத்தப்படுகிறது.- ஜி.கே.வாசன்



டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகிறது. 

விவசாயிகளுக்கு குறுகிய கால நன்மையை கூறி அவர்களின் வருங்கால தொடர் வளர்ச்சியை, வருமானத்தை எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரத்தின் மூலம், தவறான செய்திகளைப் பரப்பி விவசாயிகளை திசை திருப்ப நினைக்கக் கூடாது. அப்பாவி விவசாயிகள் இதற்கு பழியாகக்கூடும். 

புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பதால் குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று எதிர்க்கட்சியினர் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. குறைந்த பட்ச ஆதார விலை உறுதியாக கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே குறைந்த பட்ச விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். 

குறிப்பாக புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விவசாய விளைபொருட்களை நாட்டின் எந்த மூளைகளிலும் விவசாயிகள் விற்று பயனும், இலாபமும் அடையலாம் என்பதும் தான் சாராம்சம். 

அதாவது இந்த புதிய சட்டத்தின்படி விவசாயிகள் நேரடியாக சந்தையில் விளைபொருட்களை விற்கலாம் மற்றும் உற்பத்திப்பொருள்களை விற்கும்போது இடைத்தரகர்களால் பாதிக்கப்படமாட்டார்கள். 

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பயன் தருவதோடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் அமையும். 

எனவே எதிர்க்கட்சியினர் ஏதேனும் அரசியல் செய்ய நினைத்தால் பொது மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கலாமே தவிர தேவையற்ற போராட்டத்திற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது.

பொதுவாக எதிர்க்கட்சிகளுடைய அரசியல் இலாபத்திற்கு அப்பாவி விவசாயிகள் பலிகடா ஆகிவிடக்கூடாது; ஏமாந்து போகக்கூடாது என்று த.மா.கா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக