ஞாயிறு, 17 ஜனவரி, 2021

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.- கே.எஸ். அழகிரி


 துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய எஸ். குருமூர்த்தி பா.ஜ.க.வுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். பா.ஜ.க. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்று ஆருடம் கூறியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு உடனே தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் கடுமையாகக் குருமூர்த்தியை விமர்சனம் செய்திருக்கிறார். அதில், 'தினகரனிடம் காசு வாங்கிக் கொண்டு பேசி வருகிறார். நாரதர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் தன்னை ஒரு கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருகிறார்' என்று  கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். இத்தாக்குதலைத் தொடர்ந்து தமது டிவிட்டர் பக்கத்தில் குருமூர்த்தி திடீர் பல்டி அடித்து அ.ம.மு.க.வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத் தான் கருதுகிறேன் என்று கூறி தமது ஆலோசனையைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார். 

துக்ளக் குருமூர்த்தியைப் பொறுத்தவரை அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறலாகவே அமைந்து விட்டது. அ.தி.மு.க.வுக்கு அரசியல் தரகராக தம்மையே தானாக நியமித்துக் கொண்டு கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் அனுகூல சத்ருவாக மாறிய அவர், ஞானோதயம் ஏற்பட்ட பிறகு, தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். 

மேலும், தேவையில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைக் குருமூர்த்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைப் பற்றி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். துக்ளக் ஆசிரியராக சோ இருந்தபோது, ஒருகாலகட்டம் வரை பெருந்தலைவர் காமராஜரையும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறார். 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற சோ அவர்கள், 'அயோத்தியில் நடந்தது அயோக்கியத்தனம்' என்று கடுமையாக விமர்சனம் செய்ததைக் குருமூர்த்தியால் மறுக்க முடியாது. ஏனெனில் அப்போது வெளிவந்த துக்ளக் அட்டைப் படத்தில் கருப்பு வர்ணம் பூசி, எதிர்ப்பை தெரிவித்ததோடு, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் எழுதியவர் சோ. அதேபோல, 1996 தேர்தலில் ஜெயலலிதாவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்கி, தி.மு.க., த.மா.கா. கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் பெரும் துணையாக இருந்தவர் சோ. ஆனால், இன்றைய துக்ளக் இதழ் குருமூர்த்தியிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. வகுப்பு வாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாகக் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். தற்போது, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கூட்டணியை ஏற்படுத்த அரசியல் தரகராக மாறியிருக்கிறார். தமிழக மக்கள் மீது நலனோ, சமூக நீதியில் அக்கறையோ, தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதிலோ, தமிழ் மொழி புறக்கணிப்பதைத் தடுப்பதிலோ அக்கறை காட்டாத வகுப்புவாத சனாதன அரசியல் நடத்துகிற குருமூர்த்தி, திரைக்குப் பின்னாலே இருந்துதான் செயல்பட முடியுமே தவிர, மக்கள் மன்றத்திற்கு வர முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கிற குருமூர்த்தி, தமிழக மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழக மக்கள் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறார்கள். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 54 சதவிகித வாக்குகளைப் பெற்று 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டுமா ? மோடி வர வேண்டுமா ? என்று கேள்வி எழுந்தபோது தமிழக மக்கள், மோடியை விட ராகுல் காந்திக்கு 60 லட்சம் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள். 

தமிழக மக்கள் நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஜல்லிக்கட்டு குறித்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஆனால், 2004 முதல் 2014 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றதையும், பா.ஜ.க. ஆட்சியில் 2015, 16 இல் நடைபெறவில்லை என்பதையும் எவராலும் மறுக்க முடியவில்லை. எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக