ஞாயிறு, 3 ஜனவரி, 2021

மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சமூக வலைதளங்களில் அனைத்துச் சமுதாய இளைஞர்களின் ஆதரவு குரல் பெருகட்டும்! - DR K. கிருஷ்ணசாமி



தேவேந்திரகுல வேளாளர்களின் SC பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை!

மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சமூக வலைதளங்களில் அனைத்துச் சமுதாய இளைஞர்களின் ஆதரவு குரல் பெருகட்டும்!! - DR K. கிருஷ்ணசாமி

  நெல்லின் மக்கள் என தமிழ் இலக்கியங்களால் போற்றிப் புகழப்பட்ட மூத்த தமிழ்குடி உழவர் மக்களே தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். அந்நிய ஆக்கிரமிப்புகளால் தங்களுடைய பூர்வீக நிலங்களை இழந்த அம்மக்கள் சொந்த மண்ணில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். மண்ணின் மக்களின் வரலாறு தெரியாதவர்கள் அவர்களின் வறுமைநிலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, பட்டியல் சாதிகள் என்று அழைக்கப்படக்கூடிய Scheduled Castes பிரிவில் சேர்க்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள், அரிஜன்கள், ஆதிதிராவிடர்கள் என்ற முத்திரைக் (Taboos) குத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் அம்முத்திரையிலிருந்து விடுபடவும், தங்களுடையப் பூர்வீக அடையாளத்தை மீட்டெடுக்கவும் போர்க்கோலம் பூண்டுள்ளனர். 

வரலாற்றில் தங்கள் மீது சுமத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் என்றக் கறையை நீக்கிட எந்த தியாகத்தையும் செய்யவும், எவ்வித சலுகைகளை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். ’தேவேந்திரகுல வேளாளர்’ என்ற ஒற்றை அடையாளத்தோடு தங்களைத் தாங்களே சொந்தக்காலில் நிலைநிறுத்திக் கொள்ளவும், பொதுத்தளத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் எடுக்கும் முயற்சியை ஒரு சாதி அல்லது சமுதாயத்திற்கான போராட்டமாகக் குறுக்கிப் பார்க்க இயலாது. 

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடுகளைப் பெற  தங்களைத் தாழ்த்திக் கொள்ளப் பல சமூகங்கள் முண்டியடிக்கின்ற பொழுது, பட்டியல் பிரிவு என்ற முத்திரையோடு எவ்வித ஒதுக்கீடும் வேண்டாம் என நடைபெறும் தேவேந்திரகுல வேளாளர்களின் போராட்டம்,  இந்தியாவே உற்றுநோக்க வேண்டிய  முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும். தேவேந்திரகுல வேளாளர்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமைக்கான  இந்த மகத்தான போராட்டத்தை இன்று வரையிலும் புதிய தமிழகம் கட்சி மட்டுமே வழி நடத்தி வருகிறது. 

அண்மையில் தமிழக அரசு அறிவித்த பெயர் மாற்றப் பரிந்துரையைக் கூட பெரிய பொருட்டாகக் கருதாமல் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக இருக்கிறது. கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரையிலும், பாமரர் முதல் படித்து பட்டம் பெற்றப் பட்டதாரிகள் வரையிலும், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையில் புதிய தமிழகம் கட்சியின் பின்னால் தேவேந்திரகுல வேளாளர்கள் அணிவகுத்து  நிற்பதைப் பொதுச் சமூகம் இன்னும்  பாராமுகமாக இருந்து விட முடியாது. இதை ஒரு சமுதாயத்தின் போராட்டமாக மட்டுமே கருதி பொது வாழ்வில் உள்ள எவரும் கடந்து செல்ல முடியாது; கடந்து செல்லவும் கூடாது. 

பெயரை மாற்றி பட்டியலில் தொடருங்கள்; சலுகைகள் நீடிக்கும் என்று அரசு சொல்கிறது. எங்களுக்குச் சலுகையும் வேண்டாம்; பட்டியலும் வேண்டாம்; பட்டியல் பிரிவில் இருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டை, எங்களைப் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள் என தேவேந்திரகுல வேளாளர்கள் முழக்கமிடுகிறார்கள். பட்டியல் ஒழிப்பே, சாதி ஒழிப்பு என்பது அம்மக்களின் தீர்க்கமான முடிவு. பட்டியல் வெளியேற்றம் சாதி ஒழிப்பின் துவக்கம். தமிழராய் ஒன்றுபடப் போடப்படும் முதல் படிக்கல். இந்துவாக, இந்தியராக, ஒருமித்த மக்களாக உருவெடுப்பதற்கான அடித்தளம் இது. சமூக நீதியும், சமத்துவமும், சம உரிமையும் வெற்றுப் பேச்சுகளாகப் போய் விடக்கூடாது. அது நடைமுறைக்கு வர வேண்டும். 

இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியாது என்று சொல்வோர்க்கு முன்னால் சாதியை ஒழிக்க முடியும் என்று தேவேந்திரகுல வேளாளர்கள் வழிகாட்டுகிறார்கள். சாதி ஒழிப்பும், தமிழர்-இந்தியர் ஒற்றுமையும் தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றத்திலிருந்தே துவங்குகின்றன. ஒரு சமூகம் ஒட்டுமொத்தமாக எழுந்து தங்களுக்கு சுய கௌரவமே முக்கியம் என போர்க்கோலம் எழுப்புகிறபோது,  இல்லை இல்லை நீங்கள் என்றென்றும் பட்டியலுக்குள் முடங்கித்தான் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எந்த அரசுக்கும் உரிமை இல்லை. தமிழக அரசின் பெயர் மாற்றப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாமல் பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றமே எங்களது முடிவான இலக்கு, இலட்சியம் என ஜனவரி 6-ஆம் தேதி மதுரையில் தமிழகம் தழுவி தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கமிக்கிறார்கள். 

இது தேவேந்திரகுல வேளாளர்களின் சுய மரியாதைக்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழர்கள்-இந்திய மக்களின் சுய நிர்ணய மற்றும் சுய மரியாதைக்கான போராட்டமாகவும் கருதப்பட வேண்டும். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் கோர்ப்பதும், கலந்து கொள்வதும் ஒவ்வொரு தமிழர் - இந்தியரின் கடமையாகட்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேவேந்திரகுல வேளாளர்களின் குரல், ஒட்டுமொத்த தமிழர்-இந்தியர்களின் குரல் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் சமூக வலைத்தளங்களில் அனைத்து சமுதாய இளைஞர்களின் ஆதரவுக் குரல் பெருகட்டும்! புத்தாண்டில் புதிய சிந்தனைகள் மலரட்டும் ! தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் வெல்லட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக