புதன், 20 ஜனவரி, 2021

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது. இதை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்க வேண்டும்.- DR.அன்புமணி ராமதாஸ்

 படகு மூழ்கி 4 மீனவர் மாயம்: சிங்களப் படை தாக்குதலுக்கு முடிவு கட்டுங்கள்! - DR.அன்புமணி ராமதாஸ்

வங்கக்கடலில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சிங்களப்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் கண்டிக்கத்தக்கவையாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் சிங்களக் கடற்படையினரின் ரோந்துப் படகைக் கொண்டு மோதியதில், கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கி விட்டது. அந்தப் படகில் இருந்த  மெசியா (வயது 30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் உதவி கேட்டு மற்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சேதமடைந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க வந்த தமிழக மீனவர்களின் படகுகளையும் சிங்களக் கடற்படையினர் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினர் அங்கிருந்து சென்ற பிறகு தமிழக மீனவர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, படகையும், மீனவர்களையும் காணவில்லை. படகும், மீனவர்களும் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீனவர்களும், இந்திய கடலோரக் காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இன்று மதியம் வரை மீட்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் மன்னிக்க முடியாததாகும். இது இந்தியாவும், இலங்கையும் கடந்த காலங்களில் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது ஆகும். இந்தியா & இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்ததின்படியும், பன்னாட்டு விதிகளின்படியும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ, இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையோ கைது செய்தால் அவர்களை உடல்ரீதியிலான துன்புறுத்தல்களோ, பொருளாதார இழப்புகளோ ஏற்படுத்தாமல் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவர்கள் இதுகுறித்த தகவல்களை கைது செய்யப்பட்ட மீனவர்களின் நாடுகளின் தூதரகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுடன் பேச்சு நடத்திய பிறகு மீனவர்களை விடுவிக்க வேண்டும்.  பன்னாட்டு அளவிலும் இத்தகைய நடைமுறை தான் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர்  கப்பலை மோதி தாக்குதலை நடத்துவதும், அதனால் பாதிக்கப்பட்ட 4 மீனவர்களின் கதி என்னவானது? என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மனித உரிமைமீறலுக்கும், அத்துமீறலுக்கும் இவை தான் எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த காலங்களில் இத்தகைய அத்துமீறல்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது தான் இதற்கு முக்கியக் காரணமாகும்.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது. இதை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை வெளியுறவு அமைச்சகம் அழைத்து இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இனியும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக