புதன், 6 ஜனவரி, 2021

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பிருக்கலாம் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனவே, இந்த விசாரணையை சிபிஐ மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.-தி.வேல்முருகன்


பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வீடியோ, ஆடியோ வெளியாகி பொதுமக்களின் குலைநடுங்க வைத்தது. பத்திரிகை-தொலைக்காட்சி-சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின. இந்த பாலியல் கொடுமைகளுக்கு காரணமான, அதிமுகவை சேர்ந்த  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 பேரை காவல்துறை கைது செய்தது. மேலும், பாலியல் கொடூரத்தின் பின்னணியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக, திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பினர். 

அதன் காரணமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகியான பார் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.  பின்னர், அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை காட்டிய அக்கறையால், எவ்வித எதிர்ப்புமின்றி ஜாமீனில் வெளியே வந்தார் பார் நாகராஜன் . இதுவே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக மாணவர் செயலாளர் அருளானந்தம் மற்றும்  கரோன்பால்,பாபு ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.  இதில் அருளானந்தம் என்பவர்,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்துள்ளார். 

இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்பிருக்கலாம் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனவே, இந்த விசாரணையை சிபிஐ மேலும் தீவிரப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக