சனி, 23 ஜனவரி, 2021

குஜராத்தைப் பார்... மராட்டியத்தைப் பார்! பாட்டாளி இளைஞனே.... இட ஒதுக்கீட்டுக்காக நீ என்ன செய்யப்போகிறாய்? - DR.S.ராமதாஸ்



குஜராத்தைப் பார்... மராட்டியத்தைப் பார்!
பாட்டாளி இளைஞனே....
இட ஒதுக்கீட்டுக்காக நீ என்ன செய்யப்போகிறாய்?

சமூகத்தின் அடித்தட்டில் கிடக்கும் ஒரு சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான கருவிகள் கல்வியும், வேலைவாய்ப்பும் தான். கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காததால் தான் பெரும்பான்மையான சாதிகள் சமூகத்தில் பின்தங்கிக் கிடக்கின்றன. அவற்றை எட்டிப் பிடிப்பதற்கான ஏணி தான் இட ஒதுக்கீடு ஆகும். இட ஒதுக்கீட்டின் மூலமாகத் தான் சமூகங்களுக்கு நீதி வழங்க முடியும்.

தமிழ்நாட்டில் சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயம் வன்னியர்கள் தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 8 நாட்களுக்கு 5 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

நாம் கோரும் இட ஒதுக்கீட்டின் நியாயத்தை பெரும்பாலான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டை எட்டிப் பிடிக்கும் தொலைவுக்கு நாம் நெருங்கி விட்டோம். ஆனாலும் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. கடைசி நேரத்தில் தான் கூடுதல் வலிமையைக் காட்டி வெற்றிக் கோட்டை எட்ட வேண்டும். அதற்கு தயாராக இருங்கள்.

நாம் மட்டுமல்ல....  இந்தியாவின் பல மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து சில நல்ல அம்சங்களை நான் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் படேல்கள் சமுதாயம் மிகவும் முன்னேறிய சமுதாயம். அம்மாநில மக்கள்தொகையில் அச்சமுதாயத்தின் பங்கு 14%. அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையே இல்லை. ஆனாலும், அவர்கள் தங்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தனர்.

அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் என்ற  22 வயது இளைஞர்  கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய அமைப்பை உருவாக்கி படேல்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடப் போவதாக அறிவிக்கிறார்.  ஆகஸ்ட் மாதத்தில் ஹர்திக் படேல் உள்ளிட்ட சிலர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.

அதற்காக அகமதாபாத், சூரத், மெக்சனா, விஸ்நகர், மற்றும் உன்ஜகா பகுதிகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் குவிந்தனர். அவர்களின் போராட்டத்தைக் கண்டு குஜராத் அரசு அஞ்சியது. பின்னாளில் உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு இந்தப் போராட்டம் தான் காரணம் ஆகும்.

மராத்தியர்களின்  இட ஒதுக்கீடு போராட்டம்

மராட்டிய மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி மராட்டிய மாநிலம் அகமதுநகர் கோபார்டி கிராமத்தில் 15 வயது மராத்தா சிறுமியை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். அதனால் கொதித்தெழுந்த மராத்தா மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினார்கள். 

மராத்தா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்; மராத்தா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை மொத்தம் 20 இடங்களில் மராத்தியர்கள் பேரணி நடத்தினார்கள். அமெரிக்காவில் உள்ள நியுயார்க நகரத்திலும், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை நகரத்திலும் கூட பல்லாயிரக்கணக்கான மராத்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மும்பை மாநகரத்தில் நடைபெற்ற பேரணியில் 8 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் கலந்து கொண்டனர்.

16 விழுக்காடு இட ஒதுக்கீடு

அதன்பிறகும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 16% இட ஒதுக்கீடு வழங்கி மராட்டிய சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதேபோல் குஜ்ஜார் சமுதாயம், ஜாட் சமுதாயம் ஆகியவையும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. அதன்பயனாக அந்த சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இப்போது 115 சமுதாயங்கள் அனுபவிக்கும் 20% இட ஒதுக்கீடு கூட நாம் நடத்திய போராட்டங்களின் பயனாகக் கிடைத்தது தானே!

சமூகநீதி விவகாரத்தில் குஜராத்தியர்களும், மராட்டியர்களும் அவர்களின் வீரத்தையும், ஒற்றுமையையும்  வெளிக்காட்டியுள்ளனர். வீரத்திலும், ஒற்றுமையிலும் அவர்களுக்கு நமது பாட்டாளிகள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.

இப்போதும் கூட நாம் தொடர்ந்து வலிமையாக போராட்டங்களை நடத்தினால் தான் நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை வென்றெடுக்க முடியும். ஆகவே, பாட்டாளி இளைஞர்களே அடுத்து நீ என்ன செய்யப் போகிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக