திங்கள், 4 ஜனவரி, 2021

உடும்பஞ்சோலை மலைப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. - தி.வேல்முருகன்


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா அமைந்துள்ள உடும்பஞ்சோலை மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக் கடந்த 1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தடை உள்ளது. 

இந்நிலையில், தமிழக எல்லையிலிருக்கும் இந்த வனப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று மத்திய வனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அரசாணையை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  

மத்திய அரசின் அரசாணை என்பது தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், மலைப்பாறைகளில் வெடிப்பொருட்கள் வைத்து தகர்க்கப்படும், கதிர்வீச்சுகள் பரவும். இதன் காரணமாக, நிலம், நீர், வன உயிரினங்கள், தாவரங்கள் உள்ளிட்டவைகள் அழியும். இப்படியான பேரழிவை உணர்ந்தே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். 

மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையம், நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்வதற்கு கட்டுமான அனுமதி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி ஆகியவற்றை பெற்றால் மட்டுமே போதுமானது என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்க முடியாதது.

எனவே,  நாசகார நியூட்ரினோ திட்டத்தினைச் செயல்படுத்தும் நோக்கில் உடும்பஞ்சோலை மலைப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும். 

இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத  பட்சத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக