புதன், 6 ஜனவரி, 2021

பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.-E.R.ஈஸ்வரன்


 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இன்னும் இதில் சம்பந்தப்பட்டுள்ள உயர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியே தெரிந்த போதே இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுகவும், தமிழக அரசும்  உண்மையை வெளியுலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கவே முயற்சித்தது.

 அதிமுகவினர் யாரும் இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்படவில்லை என்றும் மறுத்தார்கள். ஆனால் தற்போது சிபிஜ இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் அருளானந்தம், ஹெரோன் பால் மற்றும் பாபு ஆகிய 3 பேரை கைது செய்திருக்கிறார்கள். இந்த பாலியல் கொடூர சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. 

தமிழக அரசின் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கும், அதிமுகவில் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதால்தான் சிபிஜ விசாரணைக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் வழக்கை தாமதப்படுத்தி இருக்கிறது. அதிகார அத்துமீறல்களை பெண்களுக்கு எதிரான கொடூர குற்றச்செயலுக்கு அதிமுக நிர்வாகிகள் பயன்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யவே ஆளுங்கட்சியான அதிமுக முயற்சிக்கும். இந்த பாலியல் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் சிபிஜ அதிகாரிகள் தப்பிக்க விட்டுவிடக்கூடாது. இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கும்,  தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் 3 பேருக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.

 இவ்வழக்கில் இருந்து அதிகாரத்தில் உள்ளவர்களை தப்பிக்க வைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் வெகு சீக்கிரமாக தண்டனை பெற்றுத்தர சிபிஐ உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக