செவ்வாய், 19 ஜனவரி, 2021

புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.வேல்முருகன்


 வரலாறு காணாத வகையில்  விண்ணை நோக்கி உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை வலியுறுத்த தமிழக அரசு நெஞ்சுரத்தோடு முன்வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பெட்ரோல் - டீசல் விலையை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்துகொள்ளும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் அல்லது விலைவீழ்ச்சிக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் அமைய வேண்டும். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் கூட்டுவதில் காட்டும் வேகத்தை விலையைக் குறைப்பதில் காட்டுவதில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு பெட்ரோல் விலை 88 ரூபாயாக எகிறியுள்ளது. டீசல் விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது.

இன்னும் ஓரிரு நாளில் வரலாறு காணாத வகையில் இந்த விலை உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு புதிய உச்சத்தை எட்டக்கூடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 இதனால் சரக்கு வாகனச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக வருவாயை இழந்து, வாழ்வாதாரங்களைத் தொலைத்து அன்றாட செலவினங்களுக்கே வழி தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். வருமானம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வோரின்  எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் சமூக அக்கறையோடும், அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய கடமை உணர்வோடும் மத்திய அரசும், மாநில அரசும் பரிசீலிக்க வேண்டும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சிக்கேற்ப எரிபொருட்கள் விலையைக் குறைப்தோடு, விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் துணிச்சலோடு மாநில அரசு முன்வைக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன். 

மேலும் மக்களின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் - டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக