சனி, 23 ஜனவரி, 2021

இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தலைக் கருதியேனும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை விரைந்து பரிந்துரை வழங்கிட வேண்டும்.- தி.வேல்முருகன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்  வலியுறுத்துகிறேன். விடுதலை செய்யும் அதிகாரம்  குடியரசுத்தலைவருக்கே இருப்பதாகக் கூறி காலம் கடத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு இப்போது வயது 50. கடந்த 30 வருடங்களாக அவர் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டார். 

கொலைக்குற்றத்தில் நேரடித் தொடர்பு இல்லாத அவர் விடுதலை செய்யப்பட வேண்டியவர் என்று  ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு, பகிரங்கமாக இக்கருத்தை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும் ராஜீவ்காந்தியின் மகனுமாகிய ராகுல்காந்தியும் பேரறிவாளனை விடுவிப்பதை  எதிர்க்கவில்லை. மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,  சமூக அமைப்புகள் உட்பட  பல்வேறு இயக்கங்களும்  பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.  பேரறிவாளனின் தாயாரும் மகனை மீட்க சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். சிறையில் பேரறிவாளன் 30 ஆண்டுகளாக கடும் தண்டனை  அனுபவித்துள்ளார். அவரது உடல்நலம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது.  இதையெல்லாம்  மத்திய அரசு கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. காரணம்,  தமிழ் என்றாலும், தமிழர்கள் என்றாலும் மத்திய மோடி அரசுக்கு  எப்போதுமே எட்டிக்காய் தான். 

இந்நிலையில், பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், இவ்வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கே உள்ளதென்று வாதிட்டுள்ளார். இப்பிரச்சினையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை வழங்கியது. இதன் மீது  முடிவெடுக்காமல் ஆளுநர் கண்ணமூச்சி ஆட்டம் ஆடி வருகிறார். இப்போது  குடியரசுத்தலைவருக்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மைய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தலைக் கருதியேனும்  பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு  குடியரசுத் தலைவருக்கு  மத்திய உள்துறை விரைந்து பரிந்துரை வழங்கிட வேண்டும். இந்த ஒரு நன்மையை மட்டுமாவது தமிழர்களுக்கு மோடி அரசு செய்திட வேண்டும். இல்லையேல், உத்தரப்பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக   சிறையில் இருந்த கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் உச்சநீதிமன்றமே விடுதலை செய்து  உத்தரவிட்டதைப் போல், பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேரையும் விடுவிக்க  ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக