வெள்ளி, 11 மார்ச், 2022

16 டிஜிபிகள்: மூத்த அதிகாரிகளின் சேவை பரவலாக்கப்பட வேண்டும்! - DR.S.ராமதாஸ்



16 டிஜிபிகள்: மூத்த அதிகாரிகளின்
சேவை பரவலாக்கப்பட வேண்டும்! - DR.S.ராமதாஸ்

தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனர்கள் நிலையில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி)  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வு இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாடு காவல் துறையில் தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக காவல்துறை வரலாற்றில் தலைமை இயக்குனர்கள் நிலையில் 16 பேர் இருப்பது இது தான்  முதல் முறையாகும். இவர்களில் மூவர் மத்திய அரசுப் பணிகளுக்கு சென்றிருந்தாலும் கூட மீதமுள்ள 13 அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது தமிழக காவல்துறையை வலுப்படுத்துவதற்கு உதவும். அதற்காக காவல்துறை தலைமை இயக்குனர்கள் நிலையிலான அதிகாரிகள் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணிகளிலும் அமர்த்தப்பட வேண்டும். ஆனால், சிறந்த பணி அனுபவம்,  சாதனை படைத்த அதிகாரிகளின் திறமையும், சேவையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

காவல்துறை தலைமை இயக்குனர் நிலையிலான அதிகாரிகளில் மூத்தவரான சைலேந்திர பாபு தமிழக காவல்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், சி.பி.சி.ஐ.டி, கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம்  ஆகியவற்றின் தலைமைப் பதவிகளில் தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் சரியானது தான். ஊழல் வழக்குகள் விசாரணை, பணி நியமனங்கள் ஆகியவற்றில் குறுக்கீடுகளை தடுப்பதற்கு தலைமை இயக்குனர்கள் நிலையிலான மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது உதவும்.

ஆனால், தமிழ்நாடு காவல்துறை கட்டுமான நிறுவனம், சைபர் கிரைம், அரிசி கடத்தலைத் தடுப்பதற்கான சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, தீயவிப்புத் துறை, சிறைத் துறை, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பணிகளில் தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகளை நியமிப்பது அவர்களின் திறமையையும், அனுபவத்தையும் வீணடிக்கும் செயல் ஆகும்.

எடுத்துக்காட்டாக, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்பது பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஓர் அங்கம் ஆகும். பொருளாதாரக் குற்றப்பிரிவின் தலைவராக காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலையிலான அதிகாரி தான் உள்ளார். ஐ.ஜி. நிலையிலான அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரிவுக்கு டி.ஜி.பி நிலை  அதிகாரியை நியமிப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? இது குழப்பங்களையே உருவாக்கும்.

அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பணியிடம் காவல்துறை தலைமை இயக்குனர் நிலைக்கு தற்காலிகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது தலைமை இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ள ரவி அங்கு ஆணையராக தொடர்கிறார். சென்னையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மொத்தமாகவே 20 காவல் நிலையங்கள் தான் உள்ளன. தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 250&க்கும் கூடுதலான காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க ஐ.ஜி. நிலை அதிகாரி ஒருவர் தான் நியமிக்கப்படுகிறார். 250 காவல் நிலையங்களை நிர்வகிக்க ஐ.ஜி. போதும் எனும் நிலையில், 20 காவல் நிலையங்களை நிர்வகிப்பதற்கு டி.ஜி.பி நிலை அதிகாரியை நியமிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?

தமிழ்நாட்டில் காவல்துறை இயக்குனர் நிலைக்கு வருவதற்கு ஓர் இந்திய காவல் பணி அதிகாரி குறைந்தபட்சம் 30 முதல் 32 ஆண்டுகள் பணி மூப்பு பெற்றிருக்க வேண்டும். அத்தகைய அதிகாரிகளை  அவர்களின் அனுபவம் மற்றும் திறமைக்கேற்ற பணிகளில் அமர்த்த வேண்டும். காவல்துறையில் அதிகார பரவல் வழங்கும் வகையில் வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம் ஆகிய மண்டலங்களின் தலைவர் பணியை இப்போதுள்ள ஐ.ஜி. நிலையிலிருந்து டி.ஜி.பி நிலைக்கு உயர்த்தி அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கலாம்.  இதன் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சட்டம் & ஒழுங்கு நிலைமையை இன்னும் மேம்படுத்த முடியும்.

அதேபோல், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறை பிரிவுகளின் தலைமைப் பதவிகளை காவல்துறை தலைமை இயக்குனர் நிலைக்கு நிரந்தரமாக உயர்த்த வேண்டும். அதன் மூலம் தமிழக காவல்துறையின் மனிதவளம் சிறப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளின் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எடுத்து அறிவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக