வியாழன், 3 மார்ச், 2022

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். - குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை


 உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இந்த திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இன்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், போர் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தம்மிடம் எடுத்துரைத்திருப்பதாக கூறினார்.

நாட்டின் நலன் கருதி சர்வதேச நிகழ்வு போக்குகள் குறித்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது என்றும் திரு.நாயுடு கூறினார். நாட்டின் நலனைப் பாதுகாக்க அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்றும், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் பேச வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா ஒரு சக்தியுள்ள நாடாக வளர்ந்து வருவதையும், அதன் முன்னேற்றத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் சில சக்திகள் இருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக சர்வதேச ஊடகங்களில் சில பிரிவுகள் தவறான தகவல்களை பிரச்சாரம் செய்வதாக குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளிடம் சமாதான  சகவாழ்வில் இந்தியா எப்போதும் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் விஷ்வகுரு என்று இந்தியா அறியப்பட்டதையும் கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையுடன் இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். மற்றவர்களுக்கு உதவி செய்ய வலுவானதாகவும், நிலையானதாகவும், வளமானதாகவும் மாறுவதற்கு இந்தியா விரும்புகிறது என்று அவர் கூறினார்.

தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மூலநூலில் ஆசிரியர் வில் டூரன்ட் இந்தியாவின் தொன்மையான நாகரீகத்தையும், உலக மொழிகள், கலாச்சாரம், கணிதம் ஆகியவற்றுக்கு அதன் பங்களிப்பையும் அங்கீகரித்திருப்பதை குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பாளர் திருமதி.நாதெள்ள அனுராதா, வெளியீட்டாளர் திரு.அசோக் ஆகியோரின் முயற்சிகளைப் பாராட்டிய திரு.நாயுடு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்களை மேலும் கூடுதலாக இந்திய மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக