செவ்வாய், 22 மார்ச், 2022

தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்! காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்!

காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! 

- டாக்டர் K. கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியைச் சார்ந்த 22 வயது பெண்மணி அதே பகுதியைச் சேர்ந்த 8 நபர்களால் தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் செயலை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளானது தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித்தது. இப்பொழுது, 22 வயதான பெண்ணுடன் முதலில் நட்பாக பழகி, பின் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டி, ஏமாற்றி, அப்பெண்ணிடம் மேற்கொண்ட உறவுகளைப் படமாக்கி சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் தன்னுடைய சக நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களும் அந்த காணொளியைச் சுட்டிக் காட்டி அச்சுறுத்தி, அந்தப் பெண்ணை 8 பேர்களும் தொடர்ந்து சீரழித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையே சீரழிந்து விடும் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரில் ஹரிஹரன், சுன்னத் ஆகியோர் ஆளும் கட்சி அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. மகளிர் மாண்பைப் பற்றி உயர்வாகப் பேசுகிற தமிழ் இலக்கியங்களைப் பெருமளவு கொண்ட இந்த தேசத்தில், தேசிய மகளிர் தினம் கொண்டாடி மகிழ்ந்திட்ட இரண்டு வாரத்தில் இதுபோன்ற மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயல்  அரங்கேறியிருப்பது எவ்விதத்திலும் மன்னிக்க முடியாதது.

அந்தப் பெண்மணி ஏழை, எளிய விளிம்பு நிலை சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதாலும், அவருக்கு தந்தை இல்லை என்பதாலும்,  இந்த அத்துமீறலை, அநியாயத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கை மேற்கொண்டு வலுவாக எடுத்துச் செல்ல யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தோடும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் பிணைக் கேட்டு விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு சிறப்பு ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை இந்த வழக்கிற்காக நியமித்துக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, இந்த வழக்கை விரைந்து நடத்தி, இச்சமூகக் கொடூரங்கள் தமிழக மக்கள் நினைவிலிருந்து மறைவதற்கு முன்பாகவே அவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாக்கப் பட வேண்டும். மேலும், அவர்கள் சிறையிலிருந்து வெளி வராத வண்ணம் தடுப்பு காவல் சட்டங்களையும் அவர்கள் மீது அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக