செவ்வாய், 8 மார்ச், 2022

இந்த பட்ஜெட்டின் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 'வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-வது கருத்தரங்காகும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர், முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா கொண்டுள்ளது என்று கூறினார். 

நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது என பிரதமர் தெரிவித்தார். இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான அடிப்படையின் பிரதிபலிப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த பட்ஜெட்டில் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக அவர் கூறினார். “அந்நிய முதலீட்டு வரவுகளை ஊக்குவித்தல் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு வரி குறைத்தல், என்ஐஐஎஃப், கிப்ட்சிட்டி, புதிய டிஎஃப்ஐ-க்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நாங்கள் முனைந்துள்ளோம்” என்று அவர் கூறினார். “நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தும் அரசின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் அல்லது 75 மாவட்டங்களில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் இந்த தொலைநோக்கை பிரதிபலிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நிதி சார்ந்த பல்வேறு திட்ட மாதிரிகளை வகுப்பதன் மூலம் பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் வழிகளை கண்டறிவது அவசியம் என வலியுறுத்தினார். பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் இத்தகைய ஒரு  நடவடிக்கை என அவர் எடுத்துக்காட்டினார்.

 நாட்டின் சமன்பாடான வளர்ச்சியின் திசை பற்றி குறிப்பிட்ட பிரதமர், முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டம் அல்லது கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கை மேம்படுத்துதல் போன்றவை முன்னுரிமை திட்டங்கள் என குறிப்பிட்டார்.

இந்தியாவின் அபிலாஷைகள் மற்றும் எம்எஸ்எம்இ-ன் வலிமை ஆகியவற்றுக்கிடையே உள்ள இணைப்பை வலியுறுத்திய பிரதமர்,“எம்எஸ்எம்இ-களை வலுப்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் பல அடிப்படை சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்” இந்த சீர்திருத்தங்களின் வெற்றி நிதி ஆதரவை வலுப்படுத்துவதை பொறுத்து அமையும்” என்றார்.

நிதி தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாடு முன்னேறும் வரை தொழில் 4.0-வுக்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்த துறைகளில் நிதி நிறுவனங்களின் உதவியானது இந்தியாவை தொழில் 4.0 –வின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் கூறினார்.

முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் குறித்து பிரதமர் விரிவாக பேசினார். கட்டுமானம், ஸ்டார்ட் அப், அண்மையில் தொடங்கப்பட்ட ட்ரோன் துறை, விண்வெளி மற்றும் ஜியோ ஸ்பேஷியல் டேட்டா ஆகிய துறைகளில் இந்தியா முதல் 3 இடங்களை பிடிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு நமது தொழில் மற்றும் புதிய தொழில்முனைவோர் நிதித்துறையின் முழு ஆதரவை பெறுவது அவசியமாகும் என அவர் கூறினார். தொழில்முனைவு விரிவாக்கம், புத்தாக்கம், ஸ்டார்ட் அப்புகளுக்கு புதிய சந்தைகளை தேடல் ஆகியவை இந்த துறைகளுக்கு வருங்காலத்தில் யார்  நிதி அளிப்பார்கள் என்பது பற்றிய ஆழமான புரிந்துணர்வு இருக்க வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார். “நமது நிதித்துறை புதுமையான நிதி அளித்தல் மற்றும் புதிய வருங்கால எண்ணங்கள் மற்றும் முன்முயற்சிகளின் நீடித்த அபாய மேலாண்மையை கருத்தில் கொண்டிருக்கும்” என்று திரு மோடி வலியுறுத்தினார்.

இந்திய பொருளாதாரத்தில் பெரிய அடிப்படை கிராமப்புற பொருளாதாரம் ஆகும் என்று பிரதமர் கூறினார். சுய உதவிக் குழுக்கள், உழவர் கடன் அட்டைகள், விவசாயி உற்பத்தி அமைப்புகள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   கிராமப்புற பொருளாதாரம் கொள்கைகளின்  மையமாக இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

“இந்தியாவின் விருப்பங்கள் இயற்கை வேளாண்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது” என்று கூறிய அவர், “இவற்றில் புதிய பணியை மேற்கொள்ள யாராவது முன்வந்தால், அவருக்கு நமது நிதி நிறுவனங்கள் எவ்வாறு உதவும் என்பதை சிந்திப்பது அவசியமாகும்” என்று கூறினார்.

சுகாதாரத்துறையில் பணி மற்றும் முதலீடு குறித்து குறிப்பிட்ட பிரதமர் மருத்துவ கல்வி தொடர்பான சவால்களை சமாளிக்க மேலும் மேலும் மருத்துவ நிறுவனங்கள் உருவாவது அவசியம் என்று குறிப்பிட்டார். நமது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இதற்கு முன்னுரிமை அளிக்குமா என பிரதமர் வினவினார்.

பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பரிமாணம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.  2070-ம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு என்னும் இந்தியாவின் இலக்கை எட்டுவது பற்றி தெரிவித்த அவர், இதற்கான பணி தொடங்கிவிட்டதாக கூறினார். “இந்தப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை வேகப்படுத்துவது அவசியமாகும். பசுமை நிதி அளித்தலை ஆய்ந்து செயலாக்குதல் மற்றும் புதிய அம்சங்கள் இன்றைய காலத்தின் தேவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக