வியாழன், 24 மார்ச், 2022

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி


கீழவெண்மணியை நினைவுபடுத்தும் மேற்குவங்க சம்பவம்!

பிர்பும் பகுதியில் நடைபெற்ற பச்சைப் படுகொலைக்கு நீதியை நிலைநாட்ட,

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி

தமிழகத்தின் அன்றைய கீழத்தஞ்சை, இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தினச் சம்பளமாக கூடுதலாக அரைப்படி நெல் உயர்வு கேட்டுப் போராடியதற்காகவும், அவர்கள் சார்ந்த அமைப்பிற்கான கொடியை நாட்டியதற்காகவும் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை விவசாய உழைப்பாளிகள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களுமாக 43 பேர் ஒரே  குடிசைக்குள் தள்ளப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அக்காலகட்டத்தில் இந்தியாவையே உலுக்கியது. அதை ஒத்த ஒரு சம்பவம் நேற்றைய முன் தினம் மேற்கு வங்கம் மாநிலம் ராம்புராட் மாவட்டம், பிர்பும் பகுதியில் அரங்கேறியுள்ளது. அதில் 6 பெண்களையும், 2 குழந்தைகளையும் ஒரே வீட்டினுள் தள்ளித் தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடிய சம்பவத்திற்கு எமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜி ஆட்சியிலிருந்து வருகிறார். 27 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த இடதுசாரிகள் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தாலும், ஆட்சியில் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததன் விளைவாகவும், டாடா குழுமத்திற்கு மலிவு விலை கார் உற்பத்தி செய்ய சிங்கூர் பகுதியில் 1850 ஏக்கர் விளைநிலத்தைக் கொடுத்த விவகாரத்தையும் அரசியலாக்கி மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார். கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சி பெரிதும் தடுக்கப்பட்டு விட்டன. இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் அரசியல் படுகொலைகள் மேற்கு வங்கத்தில் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. மம்தாவின் திரிணாமுல் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக அளவு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்சி பாஜக. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 - சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெருமளவு தங்களுடைய தொண்டர்களை இழந்த பாஜக ஜனநாயகத்தின் பேரால் மேற்குவங்கத்தில் நடந்துவரும் காட்டாட்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த உருப்படியான வேலைத் திட்டத்தையும் எடுக்காததன் விளைவாக மேற்கு வங்கம் ”ROGUE STATE” கட்டுப்படுத்த முடியாத ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறி வருகிறது.

நேற்றைய முன் தினம் மேற்கு வங்கம், பிர்பும் பகுதியில் 6 பெண்களையும் 2 குழந்தைகளையும் ஒருசேர ஒரே வீட்டிற்குள் அடைத்து வெளியில் பூட்டி தீயிட்டு அவர்களின் உடலில் எந்த பாகமும் கிடைக்காத அளவிற்கு உடல்கள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் ஒரே கட்சியையோ அல்லது ஒரே சமுதாயத்தையோ சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம். ஆனால், ஒரே உடலும் அல்ல, ஒரே உயிரும் அல்ல. இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய அரசியல் போட்டிகளுக்கும் பொறாமைகளுக்கும் இந்த அப்பாவி குழந்தைகளும் பெண்களும் பலியாவதா? மேற்குவங்கத்திலோ, வேறு மாநிலத்திலோ இதுபோன்ற மனித நேயமற்ற அராஜக செயல்களைச் செய்பவர்கள் ’தாங்கள் எதைச் செய்தாலும் தப்பித்துக்கொள்ள முடியும் அல்லது காப்பாற்றுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்’ என்ற அதிகார மமதை தான் இது போன்ற தவறுகளை மீண்டும் மீண்டும் இழைக்கச் செய்கிறது. பிர்பும் படுகொலையில் தவறிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க மம்தா அவர்கள் ஒரு குழுவை அமைக்கலாம்; மனித உரிமை ஆணையம் ஒரு குழுவை அமைக்கலாம்; மத்திய அரசும் கூட ஒரு சிபிஐ, என்.ஐ.ஏ என்ற விசாரணை அமைப்புகளைக் கூட  நியமிக்கலாம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் நடந்து தீர்ப்புகள் வருவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும்.

இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டும் இதுபோன்ற அரசியல் கொலைகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் மேற்கு வங்க மாநிலம் முன்னணியில் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் மக்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு என்று மம்தா பேசுகிறார். எந்த மக்களும் எதிர்க்கட்சியினரைக் கொலை செய்வதற்கும், மாற்றுக் கருத்து கொண்டவர்களைத் தீயிட்டு கொளுத்துவதற்கும் வாக்களிக்க வில்லை. மம்தா பானர்ஜி ஜனநாயகத்தின் பெயரால் ஒரு தவறான ஆட்சியை மேற்கு வங்க மக்களுக்குத் தருவதோடு, இந்தியாவிற்கே ஒரு தவறான பாதையைக் காட்டுகிறார் என்றே தோன்றுகிறது.

அங்குள்ள பிரதான எதிர்க்கட்சியான பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஏன் இவ்வளவு பதுங்குகின்றன என்று தெரியவில்லை. மம்தா பானர்ஜி ஆட்சியின் அராஜகத்திற்கும், அநியாயத்திற்கும் இப்பொழுதே முடிவு கட்டப்படவில்லை எனில், அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கலாம். பிர்புமில் நடைபெற்ற பச்சைப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், மம்தா அரசை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே, அது சாத்தியமாகும். மேற்கு வங்கத்தில் மம்தா அரசை ஆட்சியில் வைத்துக்கொண்டே எந்த நீதி விசாரணையும் முறையாக நடத்த முடியாது. ஆளுநரை வைத்து முதலமைச்சரோடு குழாயடி சண்டை போடுவதைப் போல் தினமும் சண்டை போட்டால் அம்மாநில மக்களுக்கும் பயன்தராது; மத்திய அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்காது.

மாநில அரசைக் கலைப்பது சட்டவிரோதம், ஜனநாயக விரோதம் என்றெல்லாம் கூச்சல் இடுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், ஜனநாயகத்தின் பெயரால் கிடைத்த ஆட்சி-அதிகாரத்தைப் பயன்படுத்தி காட்டாட்சி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பிர்பும் படுகொலைக்கு நீதியை நிலைநாட்ட, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக