சனி, 12 மார்ச், 2022

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் கிணறுகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.- DR.S.ராமதாஸ்

 காவிரி படுகையில் புதிய எண்ணெய்

கிணறுகளை அனுமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களின் 7 வட்டங்களில் எண்ணெய் வளத்தை கண்டறிவதற்காக எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் கிணறுகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் நரிமணம், அடியக்கமங்கலம், நன்னிலம் 1, நன்னிலம் 2, கூத்தாநல்லூர், கோவில்கலப்பல், பூண்டி ஆகிய 7 வட்டங்களில் 30 எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளித்திருந்தது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட காலம் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்ட நிலையில்,  ஓ.என்.ஜி.சி நிறுவனம் 21 இடங்களில் மட்டுமே எண்ணெய் கிணறுகளைத் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டது. பல்வேறு காரணங்களால் மீதமுள்ள 9 எண்ணெய் கிணறுகளை தோண்ட இயலவில்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை தோண்டப்படாத 9 ஆய்வுக் கிணறுகளைத் தோண்டும் பணியை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வல்லுனர் மதிப்பீட்டுக் குழுவிடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதன்படி, விடுபட்ட 9 எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வல்லுனர் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் திட்டமும், அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 30 எண்ணெய் கிணறுகளைத் தோண்ட 2015&ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப் பட்ட போது, காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்படவில்லை. அதன்பிறகு தான் பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக 2020&ஆம் ஆண்டில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காவிரி படுகையில் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்களில் 30 எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளாக இருந்தாலும், அவை புதிய திட்டங்களாகத் தான் கருதப்படும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தவுள்ள 9 எண்ணெய் கிணறுகள் திட்டம் சட்டவிரோத திட்டமாகவே கருதப்படும். வேளாண்மையை அழிக்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கக் கூடாது.

காவிரி பாசன மாவட்டங்களில், 200-க்கும் மேற்பட்ட கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மற்றொருபுறம் வறட்சி, மழை போன்ற இயற்கை சீற்றங்களாலும் காவிரி பாசன மாவட்டங்களைச்  சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மேலும் 9 எண்ணெய் கிணறுகளை அமைப்பது  காவிரி படுகை பாலைவனமாக மாறுவதை விரைவுபடுத்தவே வழி வகுக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களின் பயனாக காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கமே காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்; வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழில் திட்டங்களை தடுக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. 9 எண்ணெய் கிணறுகளைத் தோண்டும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக