செவ்வாய், 8 மார்ச், 2022

கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அறிவின் பரிமாற்றத்திற்கு  பெருந்தொற்று காலம் எவ்வாறு புதிய வழிகளைத் திறந்துது என்பது பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, ‘டிஜிட்டல் கருவிகள், கற்றலுக்கும், கலந்துரையாடலுக்கும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டன’ என்றார். தொழில்நுட்பத்தில்  புதிய வாய்ப்புகளைக் கண்டறியும் அதே சமயம், டிஜிட்டல் முறையில், அதிகரித்து வரும் இடைவெளியையும் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில், நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற 10-வது ‘கல்விச் சிந்தனை’ மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய திரு நாயுடு, ‘நமது கல்வியின் தொலைநோக்குப் பார்வை மூலம் சிந்திக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், கற்றலில் சிறந்த நாடாக நமது நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை  சிந்திப்பது பற்றியும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் கல்வி வரைப்படத்தை மாற்றுவதற்கான முதன்மை திட்டமாக தேசிய கல்விக் கொள்கை விளங்குகிறது என்று கூறிய அவர், முழுமையான கல்விக்குரிய தேவையையும், நாட்டின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு புதிய பாதைகளை திறப்பதையும் வலியுறுத்தினார்.  இந்தக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும், அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி மாறவேண்டும் என்றும் திரு நாயுடு கூறினார். “கல்வியை அதிகம் ஒருங்கிணைந்ததாகவும், பல துறை சார்ந்ததாகவும் காலத்திற்கு பொருத்தமானதாகவும் நாம் மாற்ற வேண்டும்” என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகளைக் கொண்டாடும் அதே வேளையில் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ‘பிரிட்டிஷார் வெகு காலத்திற்கு முன்பே, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், ஆனால் இன்னமும் நாம் மெக்காலே கல்வி முறையையே பின்பற்றுகிறோம்’ என்று திரு நாயுடு தெரிவித்தார்.

கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குறைந்தபட்சம் தொடக்கக் கல்வி வரையிலாவது தாய்மொழியில் இருந்தால்  குழந்தைகளின் கற்றல் திறனை அது  அதிகரிக்கும் என்றார். உள்ளூர் மொழிகளை நிர்வாகம் மற்றும் நீதித்துறை மொழிகளாக பயன்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். நீதிமன்றங்களிலும், நீதித்துறையிலும் நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தாய்மொழியில் இருப்பது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

சுதந்திரத்திற்கு பின், எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்துவதில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.   சுதந்திரத்தின் போது, வெறும் 18 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம், இப்போது 80 சதவீதமாக இருப்பது நாம் கொண்டாட வேண்டிய ஒன்றாகும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன், மாநிலங்களவை உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி, மக்களவை உறுப்பினர் திரு சசி தரூர், இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவு இயக்குநர் திரு பிரபு சாவ்லா, தலைமை நிர்வாக அலுவலர் திரு லட்சுமி மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக