வெள்ளி, 4 மார்ச், 2022

இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன்  கடினமாக உழைக்க வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆலோசனை கூறியுள்ளார்.

விஜயவாடாவில் சொர்ணபாரத் அறக்கட்டளையின் மூலம் தொழில் பயிற்சி பெறுவோரிடையே இன்று உரையாற்றிய அவர், இளைஞர்கள் பெரிய அளவில் கனவுகண்டு, தங்களது இலக்குகளை அடைய கட்டுப்பாட்டுடனும், நடைமுறை சார்ந்த முறையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

அரசால் மட்டும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் தேவையான திறன் பயிற்சி அளித்து, அவர்கள் சுயவேலை வாய்ப்பு அல்லது வேலை வாய்ப்பு பெறும் வகையில் அதிகாரம் அளிக்க தனியார் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

தேச நிர்மாணப்பணியில் இளைஞர் சக்தியை முறைப்படுத்துவது அவசியம் என்று  குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் அதிகாரம் அளிக்க  பிரதமர் திரு நரேந்திர மோடி பெரும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரி்வித்தார். ‘திறன் பயிற்சி பெற்ற இந்தியா’ என்ற தொலைநோக்கை எட்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள்  நற்பண்புகளை பின்பற்றுவதோடு, மற்றவர்கள் மீது இரக்க சிந்தனையுடன் செயல்படுவது அவசியம் என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக