செவ்வாய், 6 அக்டோபர், 2020

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.- மு.க.ஸ்டாலின்

 "திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்”

-  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அங்குள்ள நான்கு கயவர்கள் பல்வேறு கொடுமைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் அக்கிரமத்தைக் கண்டிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தை இன்று நடத்த நாம் முன் வந்திருக்கிறோம்.

நியாயம் கேட்க - நீதி கேட்க இதுபோன்ற கொடுமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி - வற்புறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி மகளிரணியினரின் பேரணி, கையில் ஒளியேந்தி இப்போது புறப்படவிருக்கிறது. இந்தப் பேரணியை - அணிவகுப்பைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தலித் இனத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல்; தங்கை கனிமொழி அவர்கள் சொன்னதுபோல், அது (பெண்களின் – பெண் குழந்தைகளின் பாதுகாப்பு) மறுக்கப்பட்டிருக்கிறது. மறுக்கப்பட்டது மட்டுமல்ல; அந்தப் பெண்ணினுடைய உடலை, அவருடைய பெற்றோர்களுக்குக்கூடக் காட்டாமல், அவசர அவசரமாக அவர்களே எரித்து, அடக்கம் செய்திருக்கிறார்கள். அவருடைய தந்தையைக் கடத்திக் கொண்டுபோய் வைத்துவிட்டு, இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார்கள்.

அதைத் தட்டி கேட்க - இது நியாயமா என்று எடுத்துச் சொல்ல - அந்தப் பெண்ணை பறிகொடுத்திருக்கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக, அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி அவர்களும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி அவர்களும் நேரடியாகச் சென்றிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். தடுத்தது மட்டுமல்ல; அவர்களைப் பலவந்தமாகத் தாக்கியிருக்கிறார்கள் - கீழே தள்ளியிருக்கிறார்கள். ராகுல் காந்தியைக் கீழே தள்ளியிருக்கிறார்கள் என்று மட்டும் நீங்கள் கருதிடக் கூடாது; ஜனநாயகத்தையே கீழே தள்ளியிருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!

ராகுல் காந்தி அவர்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கு நன்குத் தெரியும். அதையும் தாண்டி, தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்; அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

தயவு கூர்ந்து நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம்; உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, பெண்கள் அதிகம் சித்ரவதைக்கு - பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக் கூடியதைக் கணக்கெடுத்துப் பார்த்தால், அதில் முதலிடம் உத்தரப் பிரதேசம்; அதற்கடுத்த இடம் நம்முடைய தமிழ்நாடு. இந்தக் கோலத்தில் தான் நாம் இன்றைக்குச் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதே தமிழகத்தில் - இப்போது நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்; பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்து - அதை செல்போனில், இண்டெர்நெட் போன்றவற்றில் போட்டு அசிங்கப்படுத்தி - கேவலப்படுத்தி - கொச்சைப்படுத்தி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கும் கொடுமைகளையெல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் - பொள்ளாச்சிப் பகுதியில் நடந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இதுவரையில் இதற்கு நீதி கிடைத்திருக்கிறதா - நியாயம் கிடைத்திருக்கிறதா? இல்லை!

காரணம்; அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆளும்கட்சிக்கு உட்பட்டவர்களாக - ஆளும்கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கின்ற காரணத்தால், இதுவரையில் அதற்கு, நீதி - நியாயம் வழங்கப்படவில்லை!

உத்தரப்பிரதேசம் இன்றைக்கு இரத்தப் பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஆகவே, நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், நியாயம் கிடைக்க வேண்டுமென்றால்; ஏதேதோ விசாரணை என்றெல்லாம் சொல்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் நியாயமாக நடக்குமா?  அதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால், நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்த விசாரணையாக இருந்தாலும் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் நடைபெற வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்பதை நான் இங்கும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரைவில் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். எதிர்நோக்கிக் காத்திருக்கும் தேர்தலில் நாம்தான் - திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சிக்கு வரப்போகிறது. அப்படி வரும் நேரத்தில் உடனடியாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.

இந்தப் பேரணியை நடத்தவிருக்கும் மகளிரணிக்கு நான் தலைமைக் கழகத்தின் சார்பில்; அருமைத் தங்கை கனிமொழி அவர்களுக்கும் அவரைச் சார்ந்திருக்கும் மகளிரணி சகோதரிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா காலம் இது. இந்தப் பேரணியில் கலந்துகொள்பவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். மாஸ்க் அணிந்திருக்கிறீர்கள். மெழுகுவத்தியைக் கவனமாக ஏந்திச் செல்லவிருக்கிறீர்கள்; அதனைப் பாதுகாப்பாக ஏந்திச் செல்லவும் என்ற அன்பான வேண்டுகோளை எடுத்து வைத்து, இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி; ‘புறப்படுங்கள் போருக்கு’ என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக