சனி, 3 அக்டோபர், 2020

தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றம், புதிய தமிழகம் கட்சி சார்பாக 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் குறித்து டிஜிபி அவர்களுக்கு தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் !!


தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றம் ! 

புதிய தமிழகம் கட்சி சார்பாக 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் !!

 டிஜிபி அவர்களுக்கு தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் !!

கரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் தேவேந்திரனார் நினைவு தினத்தன்று பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்து, அந்தந்த கிராமங்களிலேயே தியாகி இமானுவேல் தேவேந்திரனார் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். எவ்வித இடையூறுமின்றி அஞ்சலி செலுத்தக் கூடிய நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.  அந்நிகழ்ச்சியை அமைதியாக நடத்திட பூரண ஒத்துழைப்பு தந்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்களான  குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தார், கடையர், பள்ளர் என்ற ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கவும், எம்மக்களை பட்டியல் பிரிவிலிருந்து (SC) நீக்க வேண்டுமெனவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அன்று கரோனா முழு அடைப்பு அமலிலிருந்ததால் அப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 6-ம் தேதி வரும் செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் தமிழகமெங்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து கிராமங்களிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் அனைவரும்  முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைபிடிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய பகுதிகளிலிலேயே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதால் யாருக்கும் எவ்வித இடையூறும் இருக்காது என தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏற்கனவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடத்திலும், அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளர்களிடத்திலும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டுள்ளது.

            சமூக நீதியை மையமாக வைத்து, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் நடைபெறக்கூடிய இந்த அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு  அனுமதி அளிக்குமாறும், பூரண ஒத்துழைப்பு நல்குமாறும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் தாங்கள் உரிய அறிவுறுத்தல் செய்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உண்ணாவிரதம் நடைபெறக்கூடிய கிராமங்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களிடத்திலும், காவல் நிலைய ஆய்வாளர்களிடத்திலும் வரும் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக